TamilsGuide

உண்மையான பௌத்தரானால் நிரூபியுங்கள் - தயாசிறிக்கு சிறீதரன் சவால் 

மக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் நோக்கில் தன் மீது தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்று (23.01.2026) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தயாசிறி ஜயசேகர உண்மையான சிங்கள பௌத்தனாக இருந்தால், யார் மூலம், எந்த வங்கியில், எந்த நாட்களில் எவ்வாறு தனக்கு பணம் வைப்பிலிடப்பட்டது என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் சிறீதரன் இதன்போது தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியின் பல இடங்களில் மக்கள் வசிக்க இடமில்லை எனினும், 1,200 ஏக்கர் காணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தன்னகப்படுத்தியுள்ளதாகவும், சுமார் 7 கோடி ரூபா நிதியை தனது பெயரிலும், தனது மகனின் பெயரிலும் வைப்பிலிட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

நேற்றைய தினம் (22.01.2026) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.

குறித்த குற்றச்சாட்டுகளுக்கு இன்று (23.01.2026) சிறீதரன் நாடாளுமன்ற அமர்வில் பதிலளித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த சிறீதரன், “தமிழ் மக்கள் சார்ந்த ஒரு பிரதிநிதியாக அரசாங்கத்துக்கு வால் பிடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

ஏதோ ஒரு வகையில் என்னை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என ஒரு சிலர் எண்ணுகிறார்கள், என்னுடைய கட்சியில் உள்ள சிலரும் என்னை பழிவாங்கி கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என நினைக்கிறார்கள். எனது பதவியை பறிக்க எண்ணுகிறார்கள், எனினும், அது ஒரு பகல் கனவாகவே இருக்கும்.

எனது மக்களுக்கான பணியை நான் நேர்த்தியாக மேற்கொண்டுள்ளேன். எனக்கு என்ன சொத்துக்கள் உள்ளன என்பதை ஒரு சபாநாயகராக உடனடியாக ஏன் உங்களால் விசாரணை செய்ய முடியவில்லை. அப்படியானால் உங்களுடைய அரசாங்கத்தின் பலம் என்ன?

என்னை வைத்து அரசாங்கமும், எதிர்தரப்பும், என்னுடன் இருப்பவர்களும் அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர். உண்மையை வெளிப்படையாக உடனடியாக கொண்டு வருமாறு நான் பகிரங்கமாக தெரிவிக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சிவஞானம் சிறீதரனின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இராமநாதன் அர்ச்சுனா கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment