உள்ளூராட்சி மன்றங்களின் ஆளணி மீளாய்வு தொடர்பாக திறைசேரியின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளுக்கு அமைவாகவும் தேவையற்ற நிர்வாக செலவுகளை குறைத்து நல்லூர் பிரதேச சபையின் ஆளணிகளை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் அற்ற வினைத்திறனான சேவையினை ஒரே கூரையின் கீழ் வழங்கும் பொருட்டும் நல்லூர் பிரதேச சபையின் நல்லூர் மற்றும் கொக்குவில் உப அலுவலகங்கள் நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் தவிசாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
எதிர்வரும் பெப்பரவரி 09 ஆம் திகதி முதல் நல்லூர் உப அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்படும். அதே போல் இவ் வருட நடுப்பகுதியில் கொக்குவில் உப அலுவலகம் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்படும்.
குறித்த உப அலுவலகங்கள் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட பிற்பாடு சோலை வரி மற்றும் வருமானப் பகுதி, கட்டுமானத்திற்கான அனுமதி வழங்கும் பகுதி, பொதுமக்கள் முறைப்பாட்டுப் பகுதி போன்ற புதிய கிளைகள் தலைமை அலுவலகத்தில் உருவாக்கப்படும்.
அத்துடன் உப அலுவலகங்கள் ஆயுள்வேத வைத்தியசாலைகளாகவும், மற்றும் சபையின் சுயவருமானத் தினை அதிகரிக்கும் வகையிலும் வேலைவாய்பினை உருவாக்கும் வகையிலும் சுயதொழில் ஊக்குவிப்பு தொழில் மையங்களுக்காவும் மாற்றப்படுவதோடு செயலமர்வுகளுக்கு வாடகைக்கு கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படும் என ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


