TamilsGuide

எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக மனுத்தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ஒழிக்கும் சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் நகலும் தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 121(1) பிரிவின்படி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலம் ஜனவரி 7 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் கலாநிதி ஹர்ஷன நாணயக்காரவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சட்டமூலத்தை சவால் செய்யும் மனுக்களை சமர்ப்பிப்பதற்கு அந்த திகதியிலிருந்து 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் அடுத்த மாத இறுதியில் நடைபெற உள்ளது.

சட்டமூலம் இயற்றப்பட்டதும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 512 பேரின் ஓய்வூதிய உரிமைகள் இரத்து செய்யப்படும்.
 

Leave a comment

Comment