TamilsGuide

அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி சந்தேக நபராக அடையாளம்

பிரசித்த நொத்தாரிசு ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் புரிந்து அவரது கடமையைப் புரியவிடாது இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதியின் வாக்குமூலத்தைப் பெற்று இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய எதிர்வரும் பெப்ரவரி 11 ஆந் திகதி வரை மறுதவணையிட்டு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது .

குறித்த வழக்கானது கல்முனை  நீதிவான் நீதிமன்ற நீதிபதி  கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் திறந்த மன்றில்  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை , பெரிய நீலாவணை பொலிஸார் சமர்ப்பணங்களை மேற்கொண்டு இவ் வழக்கில் சந்தேக நபரது வாக்கு மூலத்தை இன்னும் பெறவில்லை எனவும் பொலிஸ் சட்டப் பிரிவிற்கு அனுப்பிய கோவைக்கான ஆலோசனை கிடைக்கப்பெற வேண்டியுள்ளதாகவும் அது கிடைக்கப் பெற்றவுடன் மன்றுக்கு அறிக்கையிட வேறு தினம் ஒன்றினை  வழங்குமாறும் கோரி இருந்தனர்.

மேற்படி சமர்பணத்திற்கு தனது ஆட்சேபனையைப் பதிவு செய்த பிரத்தியட்சக முறைப்பாட்டாளர் சார்பிலான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் சமர்ப்பணங்களை மேற்கொண்டு,

குறித்த இவ்வழக்கிலே சந்தேக நபரின் வாக்கு மூலத்தைப் பெற்று இறுதி அறிக்கை அல்லது பிராது சமர்ப்பிக்குமாறு கடந்த தவணையில் மன்றினால் தெளிவான கட்டளை ஆக்கப்பட்டிருத்தும் வழக்குத் தொடுனரான பெரியநீலாவணைப் பொலிஸார் தொடர்ந்தும் இவ்வழக்கை தாமதப்படுத்தும் நோக்கோடு மீண்டும் மீண்டும் தினம் கோரிவருவதாகவும் குறித்த இவ்வழக்கில் நீதியைக் கண்டடையும் பொருட்டு சந்தேக நபரின் வாக்குமூலத்தைப் பெற்று இறுதி அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கட்டளையை ஆக்குமாறும் மன்றைக் கோரி இருந்தார்.

இருபக்க சமர்ப்பணங்களையும்கேட்டறிந்த மன்றானது  சந்தேக நபரது வாக்குமூலத்தைப் பெற்று வழக்கின் இறுதி அறிக்கையை மன்றில் தாக்கல் செய்யுமாறு கட்டளையாக்கியது.

இவ்வழக்கானது மீண்டும் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆந் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரத்தியட்சக முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் தோன்றிய சட்டத்தரணி  குறிப்பிட்டார்.
 

Leave a comment

Comment