நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சித்ராலயாவின் ஹிந்திப் படத்தில் சில காட்சிகளில் கௌரவ நடிகராக நடித்திருப்பதும், அதுபோல பிரபல ஹிந்தி நடிகர் ராஜேந்திர குமார், சித்ராலயாவின் தமிழ்ப் படத்தில், சிவாஜி கணேசன் ஹிந்தியில் நடித்த அதே வேடத்தைத் தமிழில் ஏற்று கௌரவ நடிகராக வந்திருப்பதும், மின்னல் வேகத்தில் பளிச்சிட்ட ஒரு யோசனையால்தான்.
இந்த மின்னல் யோசனை யாருக்கு முதலில் பளிச்சிட்டது? நடிகர் ராஜேந்திர குமாருக்குத்தான்.
சித்ராலயா குழுவினர் சிவந்தமண் படத்தின் கதையைப் பற்றி விவாதத்தில் கலந்துகொண்டிருந்தார்கள். அவர்களுடன் நடிகர் ராஜேந்திர குமாரும் இருந்தார்.
சுதந்திர வேட்கை நிரம்பிய புரட்சி வீரன் பாரத்தின் பாத்திரம் ஒன்றைப் பற்றி, டைரக்டர் ஸ்ரீதரின் உதவியாளர் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார். ஆறேழு காட்சிகளில் இந்தப் பாத்திரம் இடம் பெற்றாலும், படத்தின் உயிர்நாடியான வேடங்களில் ஒன்றாக இருந்தது அது.
நடிகர் ராஜேந்திர குமாருக்கு நடிகர் திலகத்தை நன்றாகத் தெரியும். அதைவிட அவரது நடிப்புத் திறமையைப் பற்றி மிக மிக நன்றாக அறிந்திருந்தார். குறிப்பாக, 'கட்டபொம்மன்' படத்தில் புரட்சி வீரனாக நடித்து ஆசிய-ஆப்பிரிக்க பட விழாவில் பரிசு பெற்று வந்திருப்பதையும் அவர் கேட்டுப் பெருமை கொண்டிருந்தார்.
சித்ராலயா குழுவினர் படத்தில் வரும் புரட்சி வீரனைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தபோது, இவையெல்லாம் ராஜேந்திர குமாரின் நினைவில் வட்டமிட்டிருக்க வேண்டும். ஸ்ரீதரின் உதவியாளர் இந்தப் பாத்திரத்தைப் பற்றிச் சொல்லி கொஞ்சம் நிறுத்தியபோது, "எனக்கு ஒரு ஐடியா தோன்றுகிறது" என்று ராஜேந்திர குமார் ஆவலுடன் சொன்னார்.
"என்ன அது?" என்று கேட்டார் உதவியாளர்.
"உங்களது ஹிந்திப் படத்தில் நான் ஹீரோ. இதே படத்தின் தமிழ்ப் பதிப்பில் என் அருமை நண்பர் சிவாஜி கணேசன் ஹீரோ. இப்போது நீங்கள் சொல்லி வந்த இந்தப் புரட்சிக்காரரின் வேடத்தை உன்னிப்பாகக் கேட்டேன். ஒரு மாறுதலுக்காக, இந்த வேடத்தை சிவாஜி கணேசன் ஹிந்திப் பதிப்பிலும், நான் தமிழ்ப் பதிப்பிலும் நடித்தால் எப்படி இருக்கும்?" என்று கேட்டார் ராஜேந்திர குமார்.
உடனே இந்த ஐடியாவைத் தூக்கிக்கொண்டு சிவாஜியைச் சந்தித்தார்கள். நடிகர் திலகம் இந்த ஐடியாவை வரவேற்றார். ராஜேந்திர குமாரும், நடிகர் திலகமும் கதாசிரியர் டைரக்டர் ஸ்ரீதரைச் சந்தித்தார்கள். அவர்கள் இருவரும் முடிவு செய்திருக்கும் இந்த விஷயத்தைப் பற்றி ஸ்ரீதரிடம் சொன்னபோது, ஸ்ரீதருக்கு ஒரே ஆச்சரியமாகப் போய்விட்டது.
ஹிந்திப் பட உலகையும் தமிழ்ப் பட உலகையும் சேர்ந்த இரண்டு பெரிய கதாநாயகர்கள் தங்களது ஒத்துழைப்பைத் தர முன்வந்ததைக் கேட்ட ஸ்ரீதரின் மகிழ்ச்சி கரைகடந்து சென்றது. "உண்மையிலேயே நான் பேரதிர்ஷ்டக்காரன்" என்றார் ஸ்ரீதர். அவரது நா தழுதழுத்தது.
"உன்னுடைய ஆர்வத்தையும் முயற்சியையும் கண்டு, உன் மீது நாங்கள் வைத்திருக்கும் அன்பின் அடிப்படையில் தான் இதைச் செய்கின்றோம்" என்றார் நடிகர் திலகம். அந்தச் சிம்மக் குரலுடன் ராஜேந்திர குமாரின் குரலும் சேர்ந்து ஒலித்தது.
ஹிந்திப் படத்திற்கு வசனம் எழுதி வந்த ராஜேந்திர கிருஷ்ணனை பம்பாயிலிருந்து ஸ்ரீதர் உடனே டெலிபோன் செய்து சென்னைக்கு வரவழைத்தார். தமிழில் ராஜேந்திர குமார் நடிக்க வேண்டிய இந்த ஆறு காட்சிகளுக்கான வசனத்தை எழுதிக் காட்டி, இதே காட்சிக்கான ஹிந்தி வசனங்களை எழுதித் தரும்படி ராஜேந்திர கிருஷ்ணனிடம் கேட்டுக்கொண்டார் ஸ்ரீதர்.
சிவாஜி கணேசன் பேசி நடிக்க வேண்டிய ஹிந்தி வசனங்கள் கொண்ட பைலை நடிகர் ராஜேந்திர குமார் அவரிடம் கொடுத்தார். இதே போல தமிழ் வசனங்கள் கொண்ட பைலை பதிலுக்கு ராஜேந்திர குமாரிடம் கொடுத்தார் நடிகர் திலகம்.
பைலை வாங்கிக் கொண்ட இருவரும் ஐந்து நிமிடங்கள் வரை பேசவே இல்லை. நிலவி வந்த அமைதியை "ஏன் இப்படி மௌனமாகி விட்டீர்கள்?" என்ற கேள்வியைக் கேட்டு ஸ்ரீதர் உடைத்தார்.
"ஏதோ ஒரு மின்னல் வேகத்தில் எழுந்த ஆர்வத்தால் ஒப்புக் கொண்டு விட்டோம். தெரியாத மொழியாயிற்றே, வசனத்தைச் சரியாகப் பேசி நடிக்க வேண்டுமே என்ற பயம் வந்துவிட்டது" என்று நடிகர் திலகம் பதில் சொன்னபோது, "மிஸ்டர் சிவாஜி, தென்னிந்தியாவின் மிகப்பெரிய திறமையான நடிகர் நீங்கள். நீங்கள் எப்படியும் சிறப்பாக நடித்து விடுவீர்கள். எனக்குத்தான் பயமாக இருக்கின்றது" என்று ராஜேந்திர குமார் சொன்னார்.
"அப்படியொன்றுமில்லை. நீங்கள் மட்டும் என்னவாம்? சும்மா கதை விடாதீர்கள்" என்று தன்னடக்கம் பிரதிபலிக்க நடிகர் திலகம் பதில் தெரிவித்தார் ராஜேந்திர குமாருக்கு.
"அது என்னவோ எனக்குத் தெரியாது. ஹிந்திப் படத்தில் நான் தான் ஹீரோ. நீங்கள் கௌரவ நடிகர் தான். சரியாக வசனம் பேசி நடிக்காவிட்டால் விடமாட்டேன் உங்களை" என்று ராஜேந்திர குமார் விளையாட்டாகச் சொன்னபோது, "அதே நிலைமைதான் தமிழ்ப் படத்தில் நீங்கள் நடிக்கும் போதும் உங்களுக்கு ஏற்படும் அதே நிலை" என்று ராஜேந்திர குமாரின் கரங்களைப் பற்றி குலுக்கியபடி சிரித்துக் கொண்டே சொன்னார் நடிகர் திலகம்.
இது சிவந்தமண் கதை விவாதம் முடிவடைந்த தருணம் நடந்த விஷயம்.நடிகர் திலகம் சொல்லியபடி முத்துராமன் கேரக்டரில் இந்தியில் நடித்தார். ஆனால் ராஜேந்திரகுமார் நடிக்கவில்லை ..
செந்தில்வேல்


