76வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் ஃபோரம் பிரிவில் 'சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்' என்ற தமிழ் திரைப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆர். கௌதம் இயக்கியுள்ளார், தமிழரசன் காளிதாஸ் தயாரித்துள்ளார். கூழாங்கல் படத்தில் நடித்த கருத்தடையான், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அறிமுக தமிழ் இயக்குநரின் திரைப்படம் பெர்லினேல் மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறை. மணிரத்னத்தின் அலைபாயுதே (2001), அமீரின் பருத்திவீரன் (2008) மற்றும் பி.எஸ். வினோத்ராஜின் கொட்டுக்காளி (2024) ஆகியவற்றைத் தொடர்ந்து, மதிப்புமிக்க பிரிவில் திரையிடப்படும் நான்காவது தமிழ் திரைப்படம் இதுவாகும்.
பெர்லினேல் தேர்வுக்குழு படம் குறித்து கூறியதாவது;
"ஒரு இளைஞன் மரணமடைகிறான். ஈமச்சடங்குகள் நடக்கின்றன; ஆனால் துக்கம் அந்தளவுக்கு இல்லை. அந்த மரணம் பல விஷயங்களை உலுக்கி மாற்றுகிறது. குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் வன்முறையை மிகவும் நுணுக்கமாகவும், வேகத்துடனும், அதேசமயம் வெறுமைக்கும் ஆறுதலுக்கும் இடையே ஊசலாடும் உணர்வுகளையும் இப்படம் காட்டுகிறது. என்ன ஒரு அற்புதமான அறிமுகத் திரைப்படம்!" எனக் குறிப்பிட்டுள்ளது.
பெர்லின் திரைப்பட விழாவில் படம் தேர்வானது குறித்து பேசியுள்ள இயக்குநர் ஆர்.கௌதம்,
"2025-இல் தொடங்கி, மிகக் குறுகிய காலத்தில், குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்குப் பெருமிதம் அளிக்கிறது. என்னைப்போன்ற ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படமே தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது, தற்போது தமிழ்நாட்டில் செழித்து வரும் துடிப்பான கலைச் சூழலைப் பிரதிபலிக்கிறது. அலைபாயுதே, பருத்திவீரன் மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்களின் வரிசையில் எனது படமும் இடம்பெற்றிருப்பது, தெற்காசியாவிலிருந்து உலக மேடைக்கான தமிழ் சினிமாவின் பயணம் ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக மாறி வருவதைக் காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.
76வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 22 வரை நடைபெறுகிறது.


