ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் (Kamchatka Peninsula) ஜனவரி 12 ஆம் திகதி முதல் பெய்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு, அப் பிராந்தியத்தையே உறைய வைத்துள்ளது.
60 ஆண்டுகளுக்கும் மேலான சாதனைகளை முறியடித்துள்ள இந்தப் பனிப்பொழிவை உள்ளூர் மக்கள் "பனி அபோகாலிப்ஸ்" (Snow Apocalypse) என அழைக்கின்றனர். பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி (Petropavlovsk-Kamchatsky) நகரில் 2 மீட்டருக்கும் அதிகமான பனி கொட்டியுள்ளது.
சில இடங்களில் பனிச்சரிவுகள் 5 மீட்டர் (16 அடி) உயரம் வரை குவிந்துள்ளன. கட்டிடங்களின் கூரைகளில் இருந்து திடீரென சரிந்த பனிக் கட்டிகளில் சிக்கி இரண்டு முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து நகரில் அவசரநிலை (State of Emergency) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பனி வீடுகளின் வாசல்களை மறைத்ததால், மக்கள் சுரங்கங்கள் தோண்டி வெளியே வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
பல அடுக்குமாடி குடியிருப்புகளின் இரண்டாவது மாடி வரை பனி மூடியுள்ளது. பாடசாலைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு, பொது போக்குவரத்து முற்றிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி முதல் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, வீதிகளைச் சீரமைக்க மேலதிக இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
இராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் களமிறக்கப்பட்டனர். அதேவேளை போக்குவரத்து முடங்கியதால் கடைகளில் பால், ரொட்டி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
தற்போது வீதிகள் மெதுவாகச் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 21 ஆம் திகதிக்குள் முக்கிய வீதிகளை முழுமையாகச் சீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குளிர் காற்று வீசுவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.


