ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் “Rebuilding Sri Lanka” தேசிய வேலைத்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ இணையதளம் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
நாடு எதிர்கொண்ட அனர்த்தத்திற்கு பின்னர், இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக பொதுமக்கள், தனியார் துறை மற்றும் சர்வதேச சமூகம் ஆகியோரை ஒரே தளத்திற்கு கொண்டு வருவதும், ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நம்பிக்கையான செயன்முறையை உருவாக்குவதும் இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
கடந்த 13ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின்லோட்டஸ் மண்டபத்தில் நடைபெற்ற ஆரம்ப விழாவின் போது www.rebuildingsrilanka.gov.lk என்ற இணையதளம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்கள் நிதி ரீதியாக மட்டுமன்றி பொருட்கள், நிலம் மற்றும் ஏனைய வளங்களையும் இந்த இணையதளத்தின் ஊடாக வழங்க முடியும்.
நன்கொடையாளர்கள் தாங்கள் வழங்கும் பங்களிப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை வெளிப்படையான முறையில் கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கிடைக்கும் நிதி நன்கொடைகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படும்.
அத்துடன் மாவட்ட ரீதியாக ஏற்பட்ட பாதிப்புகள், குறிப்பிட்ட நிதியுதவியின் மூலம் முன்னெடுக்கப்படும் மீளக் கட்டியெழுப்பும் திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை பொதுமக்கள் இந்த இணையதளத்தின் வாயிலாக உடனுக்குடன் அறிந்துகொள்ளலாம்.
அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்தத் தளம், சமூக நீதி மற்றும் நிலையான அபிவிருத்தி ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் உட்கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதன்படி, www.rebuildingsrilanka.gov.lk இணையதளமானது இந்தத் தேசிய வேலைத்திட்டத்தின் நம்பகமான தகவல் மையமாகச் செயற்படும்.


