TamilsGuide

டிரம்பின் மிரட்டலுக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய நாடுகளுக்கு விடுத்துள்ள வரி விதிப்பு அச்சுறுத்தல் தொடர்பில் டென்மார்க் பிரதமர் மேட்டே ஃபெடெரிக்சன், பதிலடி கொடுத்துள்ளார்.

"ஐரோப்பா யாராலும் மிரட்டப்படாது" (Europe won't be blackmailed) என டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு , டென்மார்க் பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை (Greenland) விலைக்கு வாங்க விரும்புவதும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு அவர் விடுத்துள்ள வரி விதிப்பு (Tariffs) அச்சுறுத்தலும் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெப்ரவரி மாதம் முதல் டென்மார்க், பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி உட்பட 8 ஐரோப்பிய நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள் மீது 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஜூன் மாதம் முதலாம் திகதிக்குள் கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இந்த வரி 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிக முக்கியமானது எனவும், அதை சீனா அல்லது ரஷ்யா கைப்பற்ற தான் அனுமதிக்கப் போவதில்லை எனவும் டிரம்ப் கூறுகிறார். நாங்கள் மிரட்டலுக்குப் பணிய மாட்டோம்" என ஐரோப்பிய நாடுகள் பதிலடி கொடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட 8 நாடுகளும் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

அதில், ட்ரம்பின் இந்த நடவடிக்கை "ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு" (dangerous downward spiral) வழிவகுக்கும் என எச்சரித்துள்ளன.

நேட்டோ (NATO) கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கு இடையே இத்தகைய பிளவு ஏற்படுவது ரஷ்யா மற்றும் சீனாவுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். Greenland இல் எண்ணெய், எரிவாயு மற்றும் அரிய வகை கனிமங்கள் (Rare Earth Minerals) அதிகளவில் உள்ளன.

இவை நவீன தொழில்நுட்பம் மற்றும் ராணுவ உபகரணங்கள் தயாரிக்கத் தேவைப்படுகின்றன. வட அமெரிக்காவுக்கும் ஆர்க்டிக் பகுதிக்கும் இடையே அமைந்துள்ளதால், ஏவுகணைத் தாக்குதல்களை முன்கூட்டியே கண்டறிய இது சிறந்த இடமாகும்.

கிரீன்லாந்து தலைநகர் நூக் (Nuuk) மற்றும் டென்மார்க்கில் ஆயிரக்கணக்கான மக்கள் ட்ரம்ப்பிற்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதேவேளை 2025-இல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 85 சதவீதமான கிரீன்லாந்து மக்கள் அமெரிக்காவுடன் இணைய எதிர்ப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.    
 

Leave a comment

Comment