சமீபத்தியத் திரைப்படங்களின் இரைச்சல்களும், காதுகளைப் பிளக்கும் 'கீச்சு' சத்த வசனங்களும், ஈர்ப்பு விசைக்கே சவால் விடும் அந்தரத்தில் பறக்கும் சண்டைக் காட்சிகளும் நம் பொறுமையைச் சோதித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு மருந்தாக வந்து சேர்கிறது அந்த இரண்டு நிமிட வீடியோ. அது "ராமன் எத்தனை ராமனடி" படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காட்டிய நடிப்பு வேட்டை. இரண்டரை மணி நேரப் படங்களால் தர முடியாத ஆத்ம திருப்தியை, அந்த 120 விநாடிகள் தந்துவிடுகின்றன.
வசனகர்த்தா எழுதிய அந்த வரி, "உன்னைப் பார்த்தால் வசனம் பேசுற முகம் மாதிரி தெரியலையே?" என்பது ஏதோ தற்செயலாக வந்ததல்ல. 'பராசக்தி' உருவான காலத்தில், ஒரு இளம் கலைஞனாக நின்ற சிவாஜியைப் பார்த்து ஒரு இயக்குனர் எள்ளி நகையாடிய அந்த வரலாற்று வடுவின் சாட்சி அது. ஆனால், அந்த ஏளனத்தைச் சுட்டெரிக்கும் விதமாக அவர் காட்டிய அந்த 'வெகுளித்தனம்' ஒரு அபூர்வமான கலை வடிவம். "இந்த நாட்டுல ஏழைகளுக்கு வாழை இலையே இல்லையா?" என்று அவர் மாற்றிப் பேசும் தொனியில், அந்தப் பாத்திரத்தின் அறியாமையும், அதே சமயம் ஒரு துள்ளலும் கலந்திருக்கும்.
அவர் பாடிக் காட்டும் அந்தச் சோகப்பாடல், ஒரு வெகுளிப் பாத்திரத்தின் வழியாக வெளிப்படும் போது அதன் உண்மை வடிவம் சிதையாமல், ஒரு புதுப் பரிமாணத்தை எட்டுகிறது. "போகாதே போகாதே என் கணவா..." என்று அவர் பாடும் போது, அந்தப் பெண்மை கலந்த நளினம் நடனத் தாரகைகளையே தள்ளி நிற்க வைக்கும். "நானும் கண்டேனய்யா..." என அவர் குரலை இழுக்கும் அந்த 10 விநாடிகளில், ஒரு பாடகராகவும் அவர் சிகரம் தொடுகிறார்.
அடுத்த சில விநாடிகளில் அவர் காட்டும் சித்துகள் ;
அசுரத்தனமானவை:
மோர்ஷிங் & புல்லாங்குழல்: வெறும் இரண்டு விநாடி மோர்ஷிங் பாவனையில் அந்தக் கலைஞர்களே பிரமிக்கும் வேகம். எட்டு விநாடி புல்லாங்குழல் வாசிப்பில், ஆடத் தெரியாதவனையும் ஆட வைக்கும் அந்த உடல் மொழியில் தெறிக்கும் நடிப்பின் வெறி!
வாள் வீச்சு: மூன்றே விநாடி சைகையில் ஒரு மாவீரனின் மிடுக்கு.
கர்ஜனையும்... கலக்கமும்... அடுத்த நொடியே, வில்லாதி வில்லன் வீரப்பாவின் மிமிக்ரியைச் செய்து காட்டும் போது திரையரங்கே அதிர்கிறது. அந்த உறுமலான குரல், எகத்தாளமான சிரிப்பு, பின் "மடையா!" என்று அவர் உச்சரிக்கும் அந்தப் பிரம்மாண்டமான மாடுலேஷன்... காத்தாடி ராமமூர்த்தியை பயந்து தள்ளி நிற்க வைக்கும் அந்தச் சிம்மக் குரல் கர்ஜனை, தமிழ் சினிமா அதுவரை கண்டிராத ஒரு உச்சம்.
ஆனால், அடுத்த நான்கே விநாடிகளில் அந்த ராட்சசக் குரல் தேய்ந்து, ஒரு குழந்தையின் அழுகையாக மாறுகிறது பாருங்கள்... அங்கேதான் அவர் 'நடிகர் திலகம்' ஆகிறார். அழுகையையும் அழகாக்கிக் காட்டும் அந்த வித்தை அவருக்கு மட்டுமே கைவந்த கலை.
இயக்குனரின் பார்வை - அந்த ஒரு "டச்" இந்தக் காட்சியின் உச்சகட்டமே இயக்குனர் நாகையாவின் அந்தத் திரும்புதல்தான். அவர் அழுது கொண்டிருப்பதை உணர்ந்து இயக்குனர் மெல்லத் திரும்பும் போது ஒலிக்கின்ற அந்த இசை, ஒரு மகா கலைஞன் உலகிற்கு அடையாளம் காட்டப்பட்டுவிட்டான் என்பதற்கான பறைசாற்றல். "பத்து பேர் சாப்பிடும் சாப்பாட்டை நான் ஒருவனே சாப்பிடுவேன்" என்று அவர் அந்த வெகுளித்தனமான காமெடியைச் சொல்லும் போது, நம் கண்களில் ஈரமும் உதட்டில் சிரிப்பும் ஒருசேரத் ததும்பும்.
"தம்பி! உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு!" என்று நாகையா வாழ்த்த, கை கூப்பும் கலைஞனின் பின்னால் அந்த ஸ்டுடியோவின் போகஸ் லைட் பிரகாசமாக ஒளிர்வது, ஒரு புதிய சூரியன் தமிழ் சினிமாவில் உதயமாகிவிட்டான் என்பதைக் குறிக்கும் ஒரு அபாரமான 'டச்'.
அர்த்தமற்ற சண்டைகளும், ரசிக்க வைக்காத காமெடிகளும் மலிந்த இன்றைய சூழலில், நடிப்பின் இலக்கணமாகத் திகழும் இந்த இரண்டு நிமிடக் காட்சி ஒரு பொக்கிஷம். சாமிக்கு மட்டுமல்ல, ரசனை உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் இந்தப் புண்ணியம் புரியும்!
செந்தில்வேல் சிவராஜ்


