'என் கால் முறிந்து நான் நடக்க முடியாதிருந்தபோது திரு. அ.பொ அரசு அவர்களும் மற்ற நண்பர்களும் 'கழக மாநாட்டில் நான் கலந்துகொள்வேன்’ என்று விளம்பரம் செய்துவிட்டார்கள். ஆனால், மருத்துவரோ, 'கூட்டத்தின் நெரிசலில் சிக்கிவிட்டால் காலுக்கு ஊனம் ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் அது மிகப் பெரிய விபத்தாகிவிடும்!’ என்று சொல்லி, 'கூடாது’ என்று தடுத்துவிட்டார். நானும் நடந்து பழகுவதற்காக என் அண்ணனுடன் தோட்டத்துக்குச் சென்றுவிட்டேன்.
ஆனால், நாவலர் திரு.நெடுஞ்செழியன் அவர்களும் மற்றும் கழகத் தலைவர்களும் அங்கு வந்து, 'நீங்கள் வராவிட்டால் மக்கள், கழகத்தைக் குறை சொல்லிப் பேசுவார்கள். நடிகரின் பெயரை வெளியிட்டு, ஏமாற்றிவிட்டார்கள் என்று. எனவே, நீங்கள் வந்து தலையைக் காட்டிவிட்டுத் திரும்பிவிடுங்கள் என்று அண்ணா சொல்லி அனுப்பினார்’ என்று கூறியதற்கு இணங்க, அந்த மாநாட்டுக்குச் சென்றேன். நான் சென்றபோது யாரோ பேசிக் கொண்டு இருக்கும் சத்தம் கேட்டது. 'பேச்சு முடியட்டும்... மேடைக்கு வருகிறேன்’ என்றேன். 'பெரிய தலைவர்கள் யாரும் பேசவில்லை; வாருங்கள்’ என்று கூறி, மேடைக்கு அழைத்துப் போய்விட்டார்கள்.
மேடைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது. முன்னால் போடப் பட்டு இருந்த தனி மேடையில் அண்ணா அவர்கள் பேசிக் கொண்டு இருக்கிறார் என்பது. எல்லோருமே மிக்க வேதனைப்பட்டோம்.
சிறு குழப்பம். அண்ணா அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். கொஞ்சங்கூட வெறுப்போ, கலவரமோ அடையாமல், திரும்பி வந்து என்னை விசாரித்தது மட்டுமின்றி, மேடையில் இருந்த 'மைக்’கில் என்னைப் பேசச் செய்தார்கள். நான் பேசி முடித்ததும், உடனே என்னைப் பத்திரமாக பாதுகாப்போடு அனுப்பி வைத்தார்கள்.
சிறிதுகூடச் சலித்துக்கொள்ளா மல், என் மீது குற்றம் காணாமல், தான் எத்தனையோ லட்சக் கணக்கான தம்பிமார்களுக்குத் தனிப் பெருந்தலைவராக இருக்க, சாதாரணமான யாரோ ஒருவன் வந்து, கூட்டத்தினர் தன் பேச்சைக் கேட்க முடியாமல் செய்து (சிறு குழப்பமாயிருப்பினும்), தனது பேச்சை இடையில் நிறுத்துமாறு செய்துவிட்டானே என்று எண்ணாமல், தாய்ப் பாசத்தோடும் பரிவோடும் வரவேற்று அன்பு செலுத்திய அண்ணா அவர்களின் அந்தப் பெருந்தன்மையை நினைத்து நினைத்துப் போற்றி வருகிறேன்!''
- ' நான் ஏன் பிறந்தேன் ' தொடரில் எம்ஜியார்


