இப்போது வரும் சில படங்கள் 200 கோடிகளில் தயாரிக்கப்பட்டது, 300 கோடிகளில் தயாரிக்கப்பட்டது என்று விளம்பரங்கள் செய்யப்பட்டு படங்கள் வெளிவருகின்றன. இவ்வளவு செலவு செய்தால் கண்டிப்பாக அதில் விஷயங்கள் இருக்கும் என்றும் நம்பித்தான் மக்கள் அந்தப் படங்களை பார்க்கச் செல்கிறார்கள்.
படங்களை பார்க்கச் செல்லும் மக்களும் அந்தப் படத்தின் காட்சிகளில் வரும் ஏராளமான குண்டர்கள், தொண்டர்கள், பறக்கும் குப்பைகள், கிராபிக்ஸ் உத்திகள், பாய்ந்து பறந்து செல்லும் அடியாட்கள், ஜிகினாத் தாள்கள், உரக்கக் கத்தும் கதாநாயகன், வில்லன்கள் என இன்னும் பல படத்திற்கு பொருத்தமில்லாத காட்சியமைப்புகளை பார்க்கும் மக்கள் மயங்குகிறார்கள் அல்லது மயக்கப்படுகிறார்கள்.
மக்களின் ரசனையும் பாழாக்கப்படுகிறது. அப்படியே பார்த்துப் பார்த்து அது தொலைந்தும் போகிறது. பெரும்பாலும் இவற்றில் ஒன்று இரண்டு படங்கள் இயக்குநர்களின் திறமையால் விதிவிலக்காக அமைந்து விடுகின்றன. காலமாற்றம், ரசனை மாற்றம் இருக்கத்தான் செய்யும். அதை நல்ல படைப்புகளாகத் தேர்ந்தெடுத்துச் செய்தால் என்ன? அதைத்தான் நாம் குறை சொல்கிறோம்.
நல்ல கதை, பொருத்தமான நடிகர்கள், நல்ல நடிப்பு இருந்தால் அதை வைத்தே பிரம்மாண்டமாக ஒரு படத்தைத் தயாரித்து அளிக்க முடியும். ஏராளமான தேவையற்ற பொருள் செலவு செய்துதான் ஒரு பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்க முடியும் என்ற அவசியம் இல்லை. வரலாற்றுப் படங்கள், புராணப் படங்கள், அறிவியல் படங்கள் என்றால் தயாரிப்பில் செலவாகத்தான் செய்யும். அது தவறில்லை. குப்பையான திரைக்கதைக்குத் தேவையற்ற செலவு செய்யும் போதுதான் அது விவாதத்திற்கு வருகின்றது.
இவர்களுடைய படங்களைப் பார்த்தால் பழைய படங்களை ஒப்பீடு செய்யும் எண்ணம் வரத்தான் செய்யும்.
ஒரு சிவாஜி ரசிகன் என்ற முறையில் சிவாஜியின் நடிப்பும் பிரம்மாண்டமும் எப்படி இருந்தது என்பதற்கு சிவாஜி நடித்த சில படங்களைப் பட்டியலிடுகிறேன் இங்கே.
வணங்காமுடி: கதைப்படி நாடுகடத்தப்படும் கதாநாயகன் ஒரு மலைக்குச் செல்கிறான். அந்த மலையில் உள்ளவர்கள் இவரை அரசனாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். நாடுகடத்தும் அரசனின் படைகளும் கதாநாயகனும் இறுதியில் போர் செய்கிறார்கள். படத்தின் கதையில் இந்தப் பகுதி வரும் பகுதிகள் மட்டும் போர் வீரர்கள், யானைகள், குதிரைகள் என்று பயன்படுத்தப்பட்டிருக்கும். படத்தில் மற்ற அனாவசிய செலவுகள் எதுவும் கிடையாது. படம் பிரம்மாண்டமாகத் தெரிய சிவாஜியின் நடிப்பே பிரதானமாக இருக்கும்.
இந்த வரிசையில் உத்தமபுத்திரன், காத்தவராயன் இன்னும் பல படங்களையும் சொல்லலாம். இந்தப் படங்களிலும் சில உத்திகள் கையாளப்பட்டிருக்கின்றன. இன்றளவும் சிவாஜி நடிப்புதான் பேசப்படுகிறதே தவிர மற்ற விஷயங்கள் அல்ல. கதாநாயகனான சிவாஜி மட்டுமல்ல, அதில் நடித்த மற்ற நடிகர்களும் பொருத்தமான பங்களிப்பைக் கொடுத்துப் படத்தை உயர்தரமாக்கி இருப்பார்கள்.
பாசமலர் என்றாலே மிகவும் பெரிய படம் என்றுதான் எல்லோருக்கும் நினைவு வரும். படம் அதிக செலவு செய்து எடுக்கப்பட்டதும் அல்ல. படத்தைய இன்றளவும் போற்றக் காரணம் கதை, திரைக்கதை, பொருத்தமான, திறமையான நடிகர்கள், கச்சிதமான நடிப்பு போன்ற இவைதான் காலத்தால் மாற்ற முடியாத படைப்பாகிவிட்டது.
கலையைச் சொன்ன தில்லானா மோகனாம்பாள், கிராமியப் பண்பாட்டைச் சொன்ன பட்டிக்காடா பட்டணமா, ஊனமான இளைஞனை வைத்து சாகச வசூல் செய்த பாகப்பிரிவினை, ஒன்பது ஒப்பனையும் வேடமும் கொண்டு பிரம்மாண்டத்திற்கு மேலான படைப்பான நவராத்திரி, படத்தில் மட்டுமே இவ்வளவு சொத்து எனச் சொல்லி உயர்ந்து நின்ற உயர்ந்த மனிதன்.. இப்படி எத்தனை படங்களை சொல்லிக்கொண்டே போவது.
சிவாஜி படங்களில் மிகப்பெரிய செலவு என்று பார்த்தோமானால் வீரபாண்டிய கட்டபொம்மன், சிவந்த மண், கர்ணன், ராஜ ராஜ சோழன் என்று இன்னும் சில படங்களை சொல்லலாம். இந்தப் படங்களைப் பார்த்தோமானால் இந்தச் செலவு கூடச் செய்யாமல் அந்தப் படங்களை எடுத்திருக்க முடியாது என்ற வகையிலேதான் அந்தப் படத்தின் காட்சிகள் இருக்கும். தேவையற்ற செலவு என்று எந்தக் காட்சியையும் சொல்ல முடியாது.
பாவமன்னிப்புப் படத்தை எடுத்துக்கொண்டால் ஏராளமான பெரிய நடிகர்கள் நடித்திருப்பார்கள். ஏனெனில் படத்தின் கதையமைப்பு அப்படி. அற்புதமான கதையமைப்பு கொண்ட அந்தப் படத்திற்கு கண்டிப்பாக அந்த நடிகர்கள் தேவை. அந்தப் படத்தின் செலவு என்று பார்த்தால் அந்த நடிகர்களின் சம்பளம்தான்.
மூன்று தலைமுறை பார்த்தாயிற்று இந்தப் படங்களை. அடுத்த தலைமுறையும் பார்க்கும்.
இன்று வரும் சில இயக்குநர்கள் அதிக செலவுகள் செய்து பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் வாங்க வேண்டும் என்ற ஆசையைத் தான் கொண்டிருக்கிறார்களே தவிர, கதைக்குத் தேவையான பிரம்மாண்டத்தைச் செய்வதில்லை. படம் ஓடினாலும் மூன்று நாள்தான் அதன் தலைவிதி என்பதும், அடுத்த வாரம் வெளியாகும் ஒரு பிரம்மாண்ட படத்தோடு அதன் ஞாபகம் அத்தோடு ஒழிந்தும் போகின்றன. இந்த நிலையில் அடுத்த தலைமுறை எப்படிப் பார்க்கும்?
நன்றி.
செந்தில்வேல் சிவராஜ்.


