யாழ்ப்பாணம், தென்மராட்சி. கச்சாய் கிராமத்தின் அந்தப் பரந்து விரிந்த வெண்மணல் பரப்பு, மாலை நேரத்துச் செவ்வானத்தில் தகதகவென மின்னிக் கொண்டிருந்தது. ஒருபுறம் கச்சாய் வயல் வெளிகள் தாலாட்ட, மறுபுறம் விண்ணை முட்டும் பனை மரங்கள் காவல் நிற்க, இயற்கையின் மடியில் குழந்தையைப் போல அமர்ந்திருந்தது அந்த ஆலயம்.
கார்மேகம், கொழும்பிலிருந்து வந்த ஆவணப்பட இயக்குநர். கச்சாய் அம்மன் பற்றிய உண்மைகளைத் தேடி வந்தவர். கோயிலின் எளிமை அவரை வியக்க வைத்தது. வானுயர்ந்த கோபுரங்கள் இல்லை. கருங்கல் மதில்கள் இல்லை.
வெண்மணல் பரப்பின் நடுவே ஒரு அளவான கோயில். அதற்குள் சாந்த சொரூபியாக, ஆனால் கண்களில் ஒருவித ஈர்ப்புடன் வீற்றிருக்கிறாள் கச்சாய் கண்ணகி அம்மன். அவளுக்கு நேர் எதிரே, வெளியே இரண்டு தனித்தனி கொட்டகைகளில் காவல் தெய்வங்கள் நிற்கின்றனர்.
"என்ன தம்பி, கோயிலை இவ்வளவு உத்து பாக்கிறீங்கள்?"
வாசலில் அமர்ந்திருந்த கோயில் பெரியவர் ஒருவர் கேட்டார்.
"இல்லை ஐயா... இவ்வளவு எளிமையான கோயில்ல பெரிய சக்தி இருக்குமான்னு யோசிக்கிறன்" என்றார் கார்மேகம்.
பெரியவர் மெதுவாகச் சிரித்தார். அவர் கண்கள் கச்சாய் வயல்வெளியை வெறித்துப் பார்த்தன.
"தம்பி... இவவை நாங்கள் சாமின்னு கும்பிடுறதை விட, 'எங்கட கிழவி' எண்டுதான் உரிமையா கூப்பிடுவம். மதுரையை எரிச்ச கண்ணகி, கோவம் தணிஞ்சு வற்றாப்பளைக்குப் போற வழியில, இந்தக் கச்சாய் மண்ணிலை இளைப்பாறினதா வரலாறு. அப்ப அவ கால்ல இருந்த சிலம்பு ஒண்டு கழண்டு இந்த மண்ணிலை விழுந்திருக்காம். அந்தச் சிலம்பு விழுந்த இடம்தான் இது. அவளோட ஒரு அம்சம் இங்கேயே தங்கிடுச்சு."
கார்மேகம் ஆர்வமானார். "சிலம்பா? அப்ப அவ இங்க குடி இருக்காளா?"
"குடி இருக்காளான்னு கேக்காதேங்கோ தம்பி... அவதான் இந்த ஊரையே காவல் காக்கிறா. அவளை வெறும் சிலையெண்டு நெனைச்சு வந்த ஒருத்தனுக்கு என்ன நடந்ததெண்டு தெரிஞ்சா, நீங்கள் அந்த கேள்வியைக் கேக்க மாட்டீங்க."
★
பல வருடங்களுக்கு முன்பு...
அமாவாசை இருள். ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. கச்சாய் கடல் காற்று மட்டும் ஊளையிட்டுக் கொண்டிருந்தது.
ரஞ்சன் வெளியூரிலிருந்து வந்த முரட்டுத் திருடன். அவன் கண்கள் கோயிலின் உண்டியலையும், அம்மன் கழுத்தில் கிடந்த தங்கத் தாலியையும் குறிவைத்தன.
"வாட்ச்மேன் கூட இல்லாத கோயில். ரெண்டு நிமிஷத்துல கதையை முடிச்சிடலாம்" என்று நினைத்தான். காவல் தெய்வங்களைக் கடந்து, கர்ப்பக்கிரகத்தின் கதவை நெம்பித் திறந்தான்.
உள்ளே நிசப்தம். அம்மன் சிலைக்கு முன் எரிந்த நெய் தீபம் காற்றில் ஆடியது. அம்மனின் கண்கள் அவனைப் பார்ப்பது போலவே இருந்தது.
"சிலைதானே... என்ன பண்ணிடும்?" என்று ஏளனமாகச் சிரித்தபடி, அம்மனின் கழுத்து நகையைப் பறிக்கக் கையை நீட்டினான்.
அதே விநாடி...
ஊருக்குள் கோயிலின் தர்மகர்த்தா ஐயாவின் வீட்டில் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். திடீரென ஒரு கனவு. கனவில் கச்சாய் அம்மன் தலைவிரி கோலமாக, ஆவேசமாக வந்து நின்றாள்.
"டேய்! நிம்மதியா நித்திரை கொள்ளுறியா நீ? நான் வற்றாப்பளைக்குப் போகாமை இஞ்சை இருக்கிறது, என்ரை பிள்ளையளைக் காக்கத்தான்டா! ஆனா என்ரை வீட்டுக்குள்ளையே ஒருத்தன் அத்துமீறி வந்திட்டான்! என்ரை பிள்ளையள் எனக்காகத் தந்ததை அவன் களவெடுக்கப் பாக்கிறான். அவனுக்குப் பாடம் புகட்டிட்டேன்... நீ வந்து பாரு!"
தர்மகர்த்தா அலறியடித்துக்கொண்டு விழித்தார். "கிழவிக்கு ஆபத்து!" என்று கத்தியபடி லாந்தர் விளக்கை எடுத்துக்கொண்டு கோயிலை நோக்கி ஓடினார்.
கோயிலுக்குள்...
ரஞ்சனின் கை அம்மனின் நகையைத் தொட்ட அந்த நொடி... கர்ப்பக்கிரகத்தின் உள்ளிருந்து, அந்தச் சிலையிலிருந்து ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக உதித்தது போன்ற ஒரு பேரொளி பீறிட்டது.
"ஆஆஆ!"
ரஞ்சனின் அலறல் சத்தம் கச்சாய் கிராமத்தையே உலுக்கியது. அந்த ஒளியின் வெப்பம் தாங்காமல் அவன் கண்கள் நிலை குத்தின. பார்வை மங்கி, உலகம் முழுவதும் இருண்டது.
"ஐயோ! கண்ணு எரியுதே! அம்மா... என்னை மன்னிச்சிடு! ஒண்டுமே தெரியேல்லையே! இருட்டா இருக்கே!"
அவன் பார்வையிழந்து, கர்ப்பக்கிருக வாசலிலேயே தட்டுத் தடுமாறி தூணில் முட்டி விழுந்து கதறினான்.
★
பெரியவர் சொன்ன கதையைக் கேட்டு கார்மேகத்தின் உடல் சிலிர்த்தது. நேரம் மாலையைக் கடந்து இருள் சூழத் தொடங்கியது.
"ஐயா, இந்தக் கோயிலுக்குப் பின்னாலை ஒரு பழைய கிணறு இருக்கெண்டு கேள்விப்பட்டேன். அதுல தான் அந்தச் சிலம்பு விழுந்துதா?" என்று கேட்டார் கார்மேகம்.
"ஓம் தம்பி... பாதாள கிணறு ஒண்டு இருந்தது எண்டு ஒரு கதை உலாவுது தான் ஆனால் நாங்கள் ஒருத்தரும் அதைப் பாத்தது இல்லை. கார்மேகம் பெரியவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டே கோயிலின் வளவின் பின்புறம் சென்றான்.
“தம்பி இந்தக் கும்மிருட்டிலை அங்கை போக வேண்டாம். அது ஆபத்து" என்று பெரியவர் எச்சரித்தார்.
ஆனால் ஒரு ஆவணப்பட இயக்குநராகத் துணிச்சல் கொண்ட கார்மேகம், பெரியவர் பார்க்காத நேரம் பார்த்து மெதுவாகக் கோயிலைத் தாண்டி அதன் பின்பக்கம் சென்றார். அங்கே முட்செடிகள் மண்டிய இடத்தில் அந்தப் பாதாளக்கிணறு கார்மேகத்தின் கண்களுக்கு மட்டும் தெரிந்தது.
கார்மேகம் கிணற்றுச் சுவரில் கையை வைத்து உள்ளே எட்டிப் பார்த்தார். உள்ளே காரிருள்.
திடீரென்று... கிணற்றின் ஆழத்திலிருந்து ஒரு சலசலப்பு.
வறண்டு கிடந்த கிணற்றில், திடீரென நீர் மட்டம் மளமளவென்று உயரத் தொடங்கியது. அது சாதாரண தண்ணீர் அல்ல. கறுப்பு நிறத்தில் சுழன்று கொண்டே மேலே வந்தது. அந்தத் தண்ணீரின் சத்தம் 'ஸ்ஸ்ஸ்ஸ்' என்று நூறு பாம்புகள் சீறுவது போல இருந்தது.
கார்மேகத்தால் நகர முடியவில்லை. ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி அவரை அந்தக் கிணற்றுக்குள் இழுப்பது போல இருந்தது. தலை சுற்றியது. கால்கள் தள்ளாடின. கிணற்று நீர் விளிம்பு வரை வந்துவிட்டது. அதற்குள் இருந்து என்ன வருகிறது என்று பார்ப்பதற்குள், அவர் கிணற்றுக்குள் விழப் போனார்.
"கவனம்!"
எங்கிருந்தோ வந்த ஒரு இரும்புக் கரம், கார்மேகத்தின் தோளைப் பற்றிப் பின்னால் இழுத்தது.
கார்மேகம் நிலைகுலைந்து மணலில் விழுந்தார். அவர் கண் முன்னே சுமார் 25-28 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் நின்றிருந்தான்.
அவன் முகம் சாந்தமாக இருந்தாலும், கண்களில் ஒருவிதமான சோகமும், தீர்க்கமும் இருந்தது. அவன் உடலிலிருந்து விபூதி மணம் வீசியது. கழுத்தில் உருத்திராட்சம் இருந்தது.
"ஆர்... ஆர் நீங்கள்?" கார்மேகம் மூச்சு வாங்கிக் கேட்டார்.
அந்த இளைஞன் பதில் சொல்லவில்லை. கிணற்றை ஒருமுறை உற்றுப் பார்த்தான். அவன் பார்த்த மாத்திரத்தில், விளிம்பு வரை பொங்கி வந்த அந்த மர்ம நீர் தானாகவே அடங்கிப் பாதாளத்திற்குச் சென்று கிணறு காணாமல் போனது.
அவன் கார்மேகத்தைப் பார்த்து, "தனியா வராதேங்கோ. இது அம்மன்ரை எல்லை" என்று சொல்லிவிட்டு இருளில் நடந்து சென்றான். கார்மேகம் எழுந்து "தம்பி! நில்லுங்கோ!" என்று கத்திவிட்டு டார்ச் லைட்டை அடித்தார்.
ஒளி பட்ட இடத்தில் யாரும் இல்லை. அந்த இளைஞன் காற்றோடு கரைந்தது போல காணாமல் போயிருந்தான்.
கார்மேகம் அலறியடித்துக்கொண்டு முன்வாசலுக்கு ஓடினார். அங்கே இருந்த பெரியவரிடம் நடந்ததைச் சொன்னார். இளைஞனின் அங்க அடையாளங்களைச் சொன்னதும், பெரியவர் கைகூப்பித் தொழுதார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.
"தம்பி... உங்களைக் காப்பாத்தினது மனுஷன் இல்லை. அவன் தான் மோகனன்."
"மோகனனா? ஆர் ஐயா அது?"
பெரியவர் குரல் தழுதழுத்தது.
"அது ஒரு ரத்த சரித்திரம் தம்பி. பல வருசங்களுக்கு முதல் பேராசை பிடிச்ச ஒரு கும்பல் இஞ்சை இருக்கிற 'கச்சாய் கோட்டை' வளவுக்குள்ளை பெரிய புதையல் இருக்கெண்டு தெரிஞ்சு கொண்டு அதைத் தோண்ட முயற்சி செஞ்சாங்கள். மண்ணுக்குள்ளை இருந்து விஷப் பாம்புகளும், தேள்களும், பூரான்களும் வந்து அவங்களைத் தடுத்திருக்கு."
"பிறகு?"
"அந்தப் பாம்புகளைக் கட்டுப்படுத்தணும்னா ஆயில்யம் நட்சத்திரத்திலை பிறந்த ஒருத்தரை நரபலி குடுக்கணும் எண்டு ஒரு மந்திரவாதி சொல்லியிருக்கான். பாவியள்... ஊரிலை ஆடு மாடு மேய்ச்சுக்கொண்டு திரிஞ்ச அப்பாவிப்பொடியன் மோகனனைத் தூக்கிக் கொண்டு போயிட்டாங்கள். அவனுக்கு அப்போ 25 வயசுதான்."
கார்மேகத்திற்குப் புல்லரித்தது.
"அவன் ஆயில்யம் நட்சத்திரம். அவனைக் கோட்டைக்குள்ளை வச்சுத் துடிக்கத் துடிக்கக் கழுத்தை அறுத்தாங்கள். அப்போ அவன், 'அம்மா... தாயே... என்னைக் காப்பாத்து!' எண்டு கத்திக்கொண்டே உசிரை விட்டான். அந்தச் சத்தம் கச்சாய் கண்ணகை அம்மனுக்குக் கேட்டிச்சு. அம்மன்ரை ஆயிரக்கணக்கான கண்களும் ஒரே நேரத்தில திறந்தது.”
பெரியவர் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
"அவன் ரத்தம் சிந்தின அதே இடத்தில, அந்தப் புதையல் தேடின அத்தனை பேரும் மர்மமான முறையில செத்து விழுந்தாங்க. அது அந்த அம்மனோட சீற்றம்! மோகனன் சாகலை தம்பி... அவனோட ஆன்மா அந்த அம்மன் காலடியிலேயே தான் இருக்குது.”
"அப்போ... என்னைக் காப்பாத்தினது?"
"ஓம் தம்பி. அண்டைக்கு அவன் 'அம்மா தாயே'னு கூப்பிட்டுக் கதறினானே... அதுக்கு அந்தக் கச்சாய்க் கிழவி செஞ்ச கைமாறு இது. அவனுக்கு முக்தி கொடுத்துத் தன் கூடவே வச்சிருக்கா. இந்த மண்ணிலை யாருக்காவது ஆபத்தெண்டா, மோகனன் பெடியின்ரை ஆவி திடீரெண்டு வந்து அவங்களைக் காப்பாத்திட்டு மறையும். இதுதான் அவனுக்கும் அந்த அம்மனுக்கும் இருக்கிற பந்தம்."
கார்மேகம் மீண்டும் அந்தக் கிணற்றுப் பக்கம் பார்த்தார். அங்கே அந்தக் கிணறு இல்லை. இப்போது ஒருவித நிசப்தம் நிலவியது.
அவர் மனக்கண்ணில், 'அம்மா தாயே காப்பாத்து' என்று கதறிய அந்த மோகனனின் முகமும், அவனுக்கு அபயம் அளித்த அந்தக் கச்சாய் அம்மனின் முகமும் மாறி மாறித் தெரிந்தன.


