தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', 'அஞ்சான்', தனுஷின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'மௌனம் பேசியதே' படம் மீண்டும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை என்றாலும் காதல் தினத்தையொட்டி அடுத்த மாதம் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'மௌனம் பேசியதே'. த்ரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் என பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, பொங்கலையொட்டி விஜயின் 'தெறி' படமும் மீண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


