TamilsGuide

நடிகர் திலகத்தைப் பற்றி நித்யா சொன்னது

பல ஆண்டுகளுக்கு முன் ‘வசந்த்’ தொலைக்காட்சியின் ‘சந்திப்போமா’ நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட, நாடக, சின்னத்திரை நடிகை மற்றும் டப்பிங் கலைஞரான நித்யாவின் பேட்டி ஒளிபரப்பானது. பேட்டி கண்டவர் இன்னொரு சின்னத்திரை நட்சத்திரமான ஐஸ்வர்யா. பேட்டியின்போது ‘நடிகர் திலகத்தை’ப் பற்றி நித்யா சொன்னது:

“பாலாஜி சாருடைய ‘தீர்ப்பு’ படத்தில் சிவாஜி சாருடைய மகளாக நடித்திருந்தேன். சரத்பாபு, விஜயகுமார் இருவரும் என் அண்ணன்கள். படத்தில் நான் தற்கொலை செய்து கொண்டு இறந்துபோகும் காட்சி வரும். என் உடலை தகனம் செய்யும் காட்சி சத்யா ஸ்டுடியோவின் வெட்டவெளி பொட்டலில் நடந்தது. என்னைக் கற்பழித்தவனைக் கொன்றுவிட்டு சிறையில் இருக்கும் என் தந்தை சிவாஜி சார், பரோலில் வந்து என் சிதைக்கு தீ வைப்பதாக காட்சி.

விறகுகளால் சிதை அமைத்து அதில் என்னைப் படுக்க வைத்து, உடல் முழுக்க வரட்டி அடுக்கி முகத்தை மட்டும் திறந்து வைத்து குளோசப் ஷாட்டுகளை எடுத்தனர். பின்னர் முகத்தையும் வரட்டியால் மூடி சிவாஜி அப்பா தீ வைப்பது போல காட்சி. அதை எடுத்து முடித்ததும் டைரக்டர் , சிவாஜி சாருடைய குளோசப் காட்சிகளை எடுத்து முடித்து அனுப்பி விடலாம் என்று மும்முரமானார்.

அதைக் கவனித்த சிவாஜி சார் டைரக்டரிடம், ‘ஏப்பா, அந்தப் பொண்ணை என்ன மலர்ப்படுக்கையிலா படுக்க வைத்திருக்கிறீர்கள்? பாவம், சிதையில் படுத்திருக்குப்பா! முதல்ல அதோட ஷாட்டுகளை எடுத்து முடிச்சு குழந்தையை அங்கிருந்து கிளப்புங்கப்பா. அப்புறம் என்னோட ஷாட்டுகளை எடுத்துக்கலாம். அந்தப் பெண்ணோட சீன்கள் முடிய எவ்வளவு நேரமாகும்?’ என்று கேட்டார்.

‘ஒரு மணி நேரம் ஆகும் அண்ணே’ என்று இயக்குனர் சொன்னதும், ‘இரண்டு மணி, மூன்று மணி நேரம் ஆனாலும் அப்பா நான் வெயிட் பண்றேன். முதல்ல அந்த குழந்தையோட சீன்களை முடிச்சு சிதையிலிருந்து எழுப்புங்க’ என்று சொன்னவர், அந்த வெட்டவெளியில் ஒரு குடையை மட்டும் பிடித்துக்கொண்டு ஒரு நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்.

திரைப்படங்களில் இது போன்ற சாவுக்காட்சிகள் எடுத்தால் அது முடிந்ததும் அதில் நடித்தவருக்கு திருஷ்டி கழிப்பார்கள். என்னுடைய காட்சிகள் எடுத்து முடித்ததும் எழுந்து வந்த சிவாஜி சார், ‘குழந்தைக்கு நான் திருஷ்டி கழிக்கிறேன்’ என்று திருஷ்டி கழித்தவர், ‘உனக்கு சாவே வரக்கூடாதுன்னு ஆசிர்வதிக்கிறேன்மா’ என்று ஆசிர்வதித்தார்.”

இந்த இடத்தில் நித்யாவின் கண்கள் பனித்தன. “அவரோடு ஒப்பிடும்போது நான் எல்லாம் ஒன்றுமே இல்லை. இருந்தாலும் தன்னுடன் நடிப்பவர்களில் சின்னவங்க, பெரியவங்க என்ற வித்தியாசம் எல்லாம் பார்க்காமல் அவர் மதிப்பு கொடுப்பதில் எல்லோரும் அவர்கிட்ட கத்துக்க வேண்டிய விஷயம்.”

அப்போது பேட்டி கண்ட ஐஸ்வர்யா சொன்னது: “அவரோட படங்களைப் பார்க்கும்போது சிவாஜி அங்கிள் எவ்வளவு பெரிய நடிகர், எவ்வளவு பெரிய கலைஞர், எவ்வளவு பெரிய சாதனையாளர் என்றுதான் தெரிந்து கொள்கிறோம். ஆனால் அவரோடு பழகிய உங்களைப் போன்றவர்கள் சொல்லும் இது போன்ற சம்பவங்கள் மூலம் தான் அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதும் நமக்குத் தெரிகிறது. இனி வரும் தலைமுறைகளும் அவரைப் பற்றி அறிந்து வியக்கத்தான் போகின்றன.”

Senthilvel Sivaraj

Leave a comment

Comment