TamilsGuide

மருதமுனையில் டெங்கு அபாயம் - சில வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

கல்முனை பிராந்தியத்தில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து, கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில், மருதமுனை பிரதேசத்தில் இன்று விசேட டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் விசேட அறிவுறுத்தலின் பேரில், பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்தியர் டொக்டர் எம்.ஐ.றிஸ்னீன் முத் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கல்முனை தெற்கு பதில் சுகாதார வைத்திய அதிகாரி சமூக நல விசேட வைத்தியர் டொக்டர் எம்.எம்.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையில், பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் நுளம்பு கட்டுப்பாட்டுக் கள உதவியாளர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

மருதமுனை பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் குழுக்களாகப் பிரிந்து சென்ற அதிகாரிகள், வெற்றுக்காணிகள், வீடு உள்ளிட்ட சுற்றுச்சூழல் மற்றும் கட்டட இடிபாடுகள் ஆகியவற்றை தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன்போது, நுளம்பு பெருகக்கூடிய வகையில் நீர் தேங்கி நின்ற கொள்கலன்கள், பயன்படுத்தப்படாத டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் உடனடியாக அகற்றப்பட்டன.

சுற்றுச் சூழலை மிகவும் அசுத்தமாகவும், டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சூழலைக் கொண்டிருந்த 12 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை (Red Notice) வழங்கப்பட்டதுடன் மூன்று பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், டெங்கு நோயின் ஆபத்துக்கள், அதன் அறிகுறிகள் மற்றும் நோய்த் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து இதன்போது பொதுமக்களுக்கு  அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
 

Leave a comment

Comment