அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தகப் போர் மற்றும் நாடுகளைக் கைப்பற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றால் அமெரிக்கா, கனடா உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனா செல்லும் கார்னி வரும் 16-ம் திகதி அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதுதொடர்பாக மார்க் கார்னி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளாவிய வர்த்தகக் குழப்பம் நிலவும் இந்த நேரத்தில் கனடா ஒரு போட்டித்தன்மை வாய்ந்த, நிலையான மற்றும் சுதந்திரமான பொருளாதாரத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
ஒரே வர்த்தகப் பங்காளியைச் சார்ந்திருந்த நமது பொருளாதாரத்தை மாற்றுவதற்காக நாங்கள் உலகம் முழுவதும் புதிய கூட்டாண்மைகளை உருவாக்கி வருகிறோம் எனதெரிவித்தார்.
கடந்த அக்டோபர் மாதம் தென் கொரியாவில் நடந்த ஆசியா-பசிபிக் பொருளியல் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மார்க் கார்னி சந்தித்தார்.
அப்போது சீனா வருமாறு அவர் விடுத்த அழைப்பை ஏற்று அங்கு செல்ல கார்னி ஒப்புக் கொண்டார். கனடா பிரதமரின் சீன பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


