TamilsGuide

அன்பே வா படத்தின் ஆரம்ப பூஜை

8.12.1965 காலையில் ‘‘அன்பே வா’’ படத்தின் ஆரம்ப பூஜை வழக்கம்போல வாழைச்சருகு தொன்னையில் சுவையான சர்க்கரைப் பொங்கல் மற்றும் சூடான சுதேசிக் கொண்டைக்கடலைச் சுண்டலுடன் தொடங்கியது.

முதல் நாள் படப்பிடிப்பிற்கு வந்த எம்.ஜி.ஆர். தளத்தின் உள்ளே நுழைந்த மாத்திரத்தில் அங்கு அமைக்கப்பெற்றிருந்த அந்த அழகிய மாளிகையைப் பார்த்து மலைத்துத் திகைத்துப் போய்விட்டார்.

இதென்ன சினிமாப்பட செட்டா? அல்லது உண்மையாகக் கட்டப்பட்ட மாளிகைதானா என்று சந்தேகம் கொண்டு அங்கிருந்த ஒரு கருப்பு வண்ணக் கிரில்லை விரலால் சுண்டித் தட்டிப் பார்த்தார். அது ‘டிங் டிங்’ என்று ஓசை எழுப்பியது. ஆமாம். அது அசல் ஸ்டீலால் ஆன ஒரிஜினல் கிரில்தான் என்று அறிந்து கொண்டார். இதை நான் ஜாடையாகக் கவனித்தேன்

தளத்தை விட்டுத் தனது புதிய தனி மேக்–அப் அறைக்குள் அடி எடுத்து வைத்த ‘மக்கள் திலகம்’ மயக்கம் போட்டு விழாத ஒரு குறைதான்! குளிர்சாதன (ஏர்கண்டிஷன்) பெட்டியிலிருந்து தவழ்ந்து வந்த இளங்காற்று, நறுமணங்கமழும் இனிய ‘ஜேஸ்மின்’ ஸ்பிரேயுடன் கலந்து எம்.ஜி.ஆரின் மனதை மகிழ்வித்தது.

ஒப்பனை இட்டுக் கொள்வதற்காக உட்காரும் சுழல் நாற்காலி. (‘ரிவால்விங் சேர்’) அதன் எதிரே இருக்கும் பெரிய பெல்ஜியம் முகம் பார்க்கும் கண்ணாடி! ஏனைய ஒப்பனைக்குரிய சாதனங்கள் அத்தனையுமே புத்தம் புதியது.

எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் ‘‘வேட்டைக்காரன்’’ படம் 1964 ம் ஆண்டு பொங்கல் ரிலீஸ். இந்தப்படம் 100 நாட்கள் ஓடியது.

1965 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடித்த வாகினியின் ‘‘எங்க வீட்டுப்பிள்ளை’’ ரிலீஸ். 100 நாட்கள் ஓடியது. அவற்றைத்தொடர்ந்து வரும் 1966 பொங்கலுக்கு எம்.ஜி.ஆர். நடிக்கும் தங்கள் ‘‘அன்பே வா’’ படத்தை வெளியிட சகோதரர்கள் விரும்பினர்.

சரவணன் இதுபற்றி எம்.ஜி.ஆரிடம் தெரிவித்தார். அதற்கு எம்.ஜி.ஆர். ஏற்கனவே ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் ‘‘நான் ஆணையிட்டால்’’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்ண ஒத்துக்கிட்டிருக்கேன். அதனால் அவர்கிட்டே இதைப்பத்திப் பேசுங்க என்றார்.

அதன்படி சரவணன் ஆர்.எம்.வீ.யிடம் பேசினார். அவர் சம்மதித்து தன் படத்தை தள்ளி வைத்துக்கொண்டார்.

14.1.1966 பொங்கல் நன்னாள். சென்னை மவுண்ட் ரோடில் புகழ் பெற்ற பிரபல ‘காசினோ’ தியேட்டரில் எம்.ஜி.ஆர். நடித்த ஏவி.எம்.மின் ‘‘அன்பே வா’’ ரிலீஸ்.

காசினோவில் காலைக்காட்சிக்கே கட்டுக்கடங்காத கூட்டம். ஒரு வாரத்திற்கான எல்லா வகுப்பு டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. ஆனாலும் தியேட்டரின் முன்னால் கூட்டம் அலைமோதியது.

வழக்கம்போல நான் காலைக்காட்சிக்கே சென்று தியேட்டரின் மேல் மாடி வாயிலுக்கு அருகில் நின்றபடி மக்களோடு சேர்ந்து மக்கள் திலகத்தின் ‘‘அன்பே வா’’வைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன்.

இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது மானேஜர் சங்கர் மேலே ஓடிவந்து என்னிடம், ‘‘எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்திலிருந்து உங்களுக்கு போன் வந்திருக்கு. சீக்கிரம் வாங்க’’ என்றார். நான் விரைந்து கீழே வந்து சங்கரின் அலுவலக அறையில் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த போன் ரிசீவரை எடுத்து ஹலோ சொன்னேன். எதிர் முனையில் இருந்து எம்.ஜி.ஆரின் அன்றாட உணவுக் கவனிப்பாளரான அண்ணன் ரத்தினம் பேசினார்.

‘‘அண்ணன் (எம்.ஜி.ஆர்.) ஒங்ககிட்டே பேசணுன்னாரு. ஒரு நிமிஷம் இருங்க.’’ இப்போது எம்.ஜி.ஆரின் குரல்:–

எம்.ஜி.ஆர்:– வணக்கம். பொங்கல் வாழ்த்துக்கள். வீட்டுக்குப் போன் பண்ணுனேன். நீங்க காசினோவுக்கு படம் பார்க்கப் போயிருக்கிறதா தங்கச்சி சொன்னுது. அங்கே எப்படி இருக்கு?

நான்:– கைத்தட்டல் ஒலி அதிர்ச்சியிலேயும் விசில் சத்தத்திலேயும் காசினோவே இடிஞ்சி விழுந்திடும் போலருக்கு.

எம்.ஜி.ஆர்:– (சிரித்தபடி) சரி. இன்னும் அரை மணி நேரத்துல நீங்க இங்கே வரணும். இன்னிக்கு என்னோட பொங்கல் சாப்பிடுங்க. அதோட ஒரு சந்தோஷமான செய்தி உங்களுக்கு சொல்லப்போறேன். ஒங்க கார் அங்கே இருக்கா? இல்லே நான் அனுப்பட்டுமா?

நான்:– வேண்டாண்ணே. என் காருலதான் வந்திருக்கேன். இதோ – இப்பவே புறப்படுகிறேன்.

ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லம். என்னை எதிர்பார்த்து வாசல் வராந்தாவில் அண்ணன் உலவிக்கொண்டிருந்தார். பாதம் பணிந்தேன். பொங்கல் வாழ்த்து தெரிவித்தேன். உள்ளே டைனிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றார். சுவையும் சூடுமான சர்க்கரைப்பொங்கல். வெண் பொங்கல். அவியல். ஓலம். மெதுவடை. வகையறாக்களை அம்மா பரிமாறினார்கள். கொண்ட மட்டும் உண்டு மகிழ்ந்தேன்.

வழக்கம்போல பொங்கல் அன்பளிப்பாக நூற்றி ஒரு ரூபாய் வழங்கினார். வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஹாலில் வந்து அமர்ந்தோம்.

(சிவாஜி தீபாவளி, பொங்கல் இரண்டையுமே கொண்டாடுவார். ஆனால் எம்.ஜி.ஆர். பெரியார் – அண்ணா கொள்கையைப் பின்பற்றி பொங்கல் விழாவை மட்டும்தான் கொண்டாடுவார்.)

நன்றி : ஆரூர்தாஸ் , தினத்தந்தி

Leave a comment

Comment