TamilsGuide

மன்னர் பெயரை சூடி இருந்தாலும் மக்களுக்காக வாழ்ந்தவர்

முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் தன் அறையில் 'ராஜ நித்திரை' கொள்ளும் இந்த புகைப்படம் ஜீவனுள்ளதாக இருக்கிறது. அவர் அமைச்சராக இருந்த போது இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

'புத்தகங்களின் வாசனை, செல்லப்பிராணியின் அருகாமை, பிடித்தமான தலையணை ஆகியவை போதுமே நன்றாக தூங்குவதற்கு. சொகுசான நட்சத்திர விடுதிகள் எதற்கு?' என கேட்கிறார். உண்மை தானே, குப்பையோ, குடிசையோ தன் சொந்த படுக்கையில் 'ஹாயாக' தூங்குவதைப் போல சுகமுண்டோ?

ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மிக எளிய பின்னணியில் இருந்து மேலெழுந்து வந்தவர். அவரது அம்மாவுக்கு இங்கிலாந்து கிங் ஜார்ஜை பிடிக்குமாம். அதனால் அந்த பெயரை மகனுக்கு சூட்டியிருக்கிறார். மன்னர் பெயரை சூடி இருந்தாலும் மக்களுக்காக வாழ்ந்தவர்.

பாதிரியார் ஆக வேண்டி மங்களூருவில் இருந்து பெங்களூருவுக்கு பெற்றோர் அனுப்பி வைத்தனர். இவரோ பத்திரிக்கையாளர் ஆனார். பாலப்பா, ராம் மனோகர் லோஹியா ஆகியோரின் சகவாசம் சோசலிஸ்ட் ஆக மாற்றியது. நாட்டை அதிர வைக்கும் போராட்டங்களை முன்னெடுத்த தொழிற்சங்கவாதியாக திகழ்ந்தார்.

இந்திரா காந்தியை எதிர்த்ததால் எமர்ஜென்சி காலக்கட்டத்தில் சிறைக்கு சென்ற இவர், பெரிய அரசியல்வாதியாக வெளியே வந்தார். கையில் சங்கிலியோடு புஜத்தை உயர்த்தி காட்டும் புகைப்படம் ஃபெர்னாண்டஸின் போராளி முகத்துக்கு ஓர் எடுத்துகாட்டு.

ரயில்வே மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போதும் எளிதில் அணுக கூடியவராக இருந்தார். கர்நாடக தமிழருக்கும் விடுதலை புலிகளுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் உற்ற தோழமையாக இருந்தார். இன்றைய பகட்டு அரசியல் வாடை, அறியாத பாமர அரசியல்வாதியாகவே மறைந்து போனார்.


 

Leave a comment

Comment