எதிர்க்கட்சிகளின் அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியா ஃப்ரீலண்ட் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நாளைய தினம் விலகுவதாக அறிவித்துள்ளார்.
எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இந்த வெள்ளிக்கிழமை முதல் துறக்க உள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகருக்கு இன்று எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக சமூக ஊடகப் பதிவொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
2013 ஆம் ஆண்டிலிருந்து கனடாவின் நாடாளுமன்றத்தில் தனது தொகுதி மக்களுக்கும், கனடிய மக்களுக்கும் சேவை செய்தது மிகப் பெரிய பெருமை என ஃப்ரீலண்ட் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்திலும் கனடாவை கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளுக்கு என்னால் இயன்ற அனைத்து வகையிலும் ஆதரவளிப்பேன். அதேபோல் உக்ரைன் மக்களின் தைரியமான போராட்டத்திற்கான ஆதரவையும் தொடருவேன் என தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, பொருளாதார வளர்ச்சி தொடர்பான ஆலோசகராக ஃப்ரீலண்டை நியமித்துள்ளதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, உக்ரைனின் மறுசீரமைப்பு தொடர்பான கனடாவின் சிறப்பு பிரதிநிதி பதவியிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்ததுடன், “வரும் வாரங்களில்” நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், வெளிநாட்டு அரசாங்கத்துக்கான ஆலோசகர் பதவியை ஏற்றுக்கொண்ட உடனேயே அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும், ஒழுக்க நெறி விமர்சகர்களும் கேள்வி எழுப்பினர்.
கனடிய மக்களுக்கு சேவை செய்வது பகுதி நேரப் பணி அல்ல. வெளிநாட்டு அரசாங்கத்தில் ஏற்றுக்கொண்டுள்ள இந்தப் பதவி, யாருடைய நலன்கள் முன்னுரிமை பெறும் என்ற கேள்வியை எழுப்புகிறது என கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைக்கேல் பாரெட் சமூக ஊடகத்தில் விமர்சித்தார்.


