போச்சி,போச்சி இனிமேல் தமிழ் நாட்டுக்கு தலைவனே இல்லை
சினிமா
எம் ஆர் ராதாவிற்கு தந்தை பெரியார் இறந்து விட்டார் என்ற செய்தி கிடைத்தது. அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட அடுத்த நொடி ராதா நேராக தந்தை பெரியாரின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி மண்டபத்துக்கு சென்றார்
”போச்சி,போச்சி இனிமேல் தமிழ் நாட்டுக்கு தலைவனே இல்லை”என்று பெரியாரின் உடல் மீது விழுந்து புரண்டு கதறிய எம்.ஆர்.ராதாவை யாராலும் தேற்ற முடியவில்லை.
தந்தை பெரியாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த எம்.ஜி.ஆர் ராதாவைப் பார்த்து வணக்கம் கூறியதும் பதிலுக்கு அவருக்கு வணக்கம் தெரிவித்த எம்.ஆர்.ராதா
”உன் கூட இருக்கின்ற எவரையும் நம்பாதே.சமயம் பார்த்து கழுத்தை அறுத்து விடுவார்கள்”என்று தனக்கே உரிய பாணியில் எம்.ஜி.ஆருக்கு அறிவுரை கூறினார்.
அதற்குப் பிறகு மனோரமாவின் மகன் பூபதியின் திருமண வரவேற்பின்போது இரண்டாவது முறையாக அவர்கள் இருவரின் சந்திப்பு நடந்தது
“மனோரமாவின் மகன் பூபதிக்கும் 'இதயம் பேசுகிறது' பத்திரிகையின் ஆசிரியரும் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பருமான மணியனின் மைத்துனிக்கும் திருப்பதியிலே நடந்த திருமணத்தை ஒட்டி அவர்களது வரவேற்பு விழா ஏவி.எம்.ராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெற்றது.
கே.ஜே.ஜேசுதாசின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் முன் வரிசையில் அமர்ந்து இசைக் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று அங்கே சலசலப்பு ஏற்பட எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.அப்போது நான்கு புறமும் பார்த்தபடி எம்.ஆர்.ராதா வேகமாக முன் வரிசையை நோக்கி நடந்து வந்தார்.
எம்.ஜி.ஆரைப் பார்த்து ராதா சிரித்தபோது அவர் பதிலுக்கு சிரிக்கவில்லை என்றாலும் ராதா தன்னை நோக்கி கும்பிட்டபோது எம்.ஜி.ஆரும் தன்னுடைய கரங்களைக் குவித்து கும்பிட்டார்.அதைப் பார்த்து அங்கே கூடியிருந்த கூட்டம் பலத்த கரவொலியை எழுப்பியது
எம்.ஜி.ஆருக்கு இடது பக்கத்தில் சற்றுத் தள்ளி எம்.ஆர்.ராதா அமர்ந்தார்.அவர்கள் இருவரும் அமைதியாக ஜேசுதாசின் கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார்கள் என்றாலும் அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இருந்த அனைவரையும் இனம் தெரியாத ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது.அதை அதிகப்படுத்துவது போல எம்.ஜி.ஆர் அருகில் ராதா அமர்ந்த அடுத்த நிமிடம் ரிவால்வர் பெல்ட் அணிந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் ஓடி வந்து எம்.ஜி.ஆர் அருகில் நின்று கொண்டார்.
அந்த திருமண மண்டபத்தில் இருந்த மகிழ்ச்சியான சூழ்நிலை மாறிஅங்கே ஒருவித பதற்றம் நிலவுவதைப் பார்த்த எம்.ஜி.ஆர் அதற்கு மேலும் தான் அங்கே இருப்பது சரியல்ல என்று முடிவெடுத்து அங்கிருந்து கிளம்பி விட்டார்.
நாடகமேடை தோடங்கி பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றிய அவர்களை காலம் பிரித்து வைத்து வேடிக்கை பார்த்ததை அந்த மணவிழா மண்டபத்தில் இருந்த அனைவரும் கண்கூடாகப் பார்த்த நிகழ்ச்சியாக அந்த வரவேற்பு நிகழ்ச்சி அமைந்தது.
Devaraj Andrews























