• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புலவரின் மனதும் பாமர ரசனையும் - பாலமிட்ட நடிகர்திலகம்

சினிமா

எவ்வளவோ பேர் திரையில் தோன்றினார்கள். தோன்றுகிறார்கள். தோன்றுவார்கள். ஆனால் நிறைய மக்கள் நடிகன் என்று கொண்டாடுவது நடிகர் திலகத்தை மட்டுமே.
அதற்காக பல காரணங்களை பலநேரம் எழுதியுள்ளேன். இன்று. இரண்டு முக்கிய விஷயங்களை தொடப் போகிறேன்.உதாரணம் பல உணர்ச்சிகள் ஒரே நொடியில் தோன்றும் கதாசிரியரின் விவரணைக்கு .
"பத்மா கூறியதை கேட்டு நரசிம்மன் அதிர்ச்சிக்கு ஆளானேயாயினும் , வியப்பு , மகிழ்ச்சி , திகைப்பு , தவிப்பு என பல உணர்ச்சிகள் அவனை ஆட்கொண்டு பேச்சற்று மரம் போல் நிற்க வைத்தது. "
ஒரு எழுத்தாளன் எழுதி விட்டு தன் போக்கில் போய்விடலாம் . ஆனால் எந்த நடிகன் இவையெல்லாவற்றையும் சில நொடிகளில் ( simultaneous multiple emotion ) இவற்றை வெளிப்படுத்த முடியும்? ஒரே நடிகன் சிவாஜி கணேசன். அவன் முகத்தில் பல சுவிட்சுகளை விட்டு விட்டு ஒரே நேரத்திலும். இயக்கும் வல்லமை கொண்டவன். நொடிக்கும் குறைவான நேரத்தில் உணர்வுகளை மாற்றும் நேர்த்தி. மற்றவர்களால் சுயமாக இயக்க முடியாத முகத்தசைகளை கூட நினைத்த போது சுயமாக இயக்கும் பிறப்பாற்றல் பெற்றவன்.
கீழ்க்கண்ட காட்சிகளில் சிவாஜி நடித்ததை நான் எழுத்தாளனாக விளக்குகிறேன்.
1)தில்லானா மோகனாம்பாள் படத்தில் நலந்தானா பாட்டில் கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ அதை நானறியேன் என்ற வரிகளில் எழுத்தாளன் விவரிப்பில் நடிகர்திலகத்தின் நடிப்பு காட்சி .‌ ஷண்முகத்தின் தற்போது நிலமைக்கு மோகனா தானே காரணம் என்று வருந்துவதன் பின்னுள்ள காதலை எண்ணி அவன் அன்பின் ஆழம் அவன் கண்ணில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தாலும் , மோகனா வருந்துகிறாளே என்றெண்ணி உருக்கமாக கலங்கவும் செய்தான். ஊடே நாதஸ்வரத்தையும் பிசிறின்று வாசித்து திறமையையும் காட்டி கொண்டிருந்தான்.
2) பாசமலர் பாட்டில் மலராத பெண்மை மலரும். முன்பு தெரியாத உண்மை தெரியும் என்று தோழியர் ராதாவை கலாட்டா செய்து கொண்டிருந்த போது அதை கடந்து சென்ற ராஜசேகரன் ஒரு பிரம்மச்சாரியாக நாணமும் , தங்கையின் வாழ்வு மலர போவதை எண்ணி ஆனந்தமும் , என்னடா இவர்கள் அந்தரங்கமாக பாடிக் கொண்டிருக்கும் போது நாம் இங்கு வந்து விட்டோமே என்று கூச்சமும் வாட்ட வேகமாக கடந்தான்.

3) பந்தபாசம் படத்தில் மாமியாரிடம் ஒப்பந்த பணத்தை பெறும் நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ என்ற பாடல் காட்சி.
கௌரியின் அம்மா பேசிய படி பணத்தை கொடுக்க அதை பவ்யமாக நன்றியுணர்வுடன் பெறும் பார்த்திபன் ஒரு நொடி தன் தந்தையின் கடன்களை தீர்க்கும் தருணம் நினைவு வந்து ஆறுதல் தந்தாலும் , ஒரு ஊனமுற்ற பெண்ணை இந்த மாதிரி பணத்தை வாங்கி மணக்க நேர்ந்த அவலத்தை ஒரு குற்ற உணர்வுடன் , கசப்புடன் விழுங்கினான். காதலை மறந்து கடமையை நினைக்க தலைப் பட்டான்.
4)நீல வானம் படத்தில் ஓஹோ ஹோ ஓடும் எண்ணங்களே பாட்டில் வருஷம் தோறும் வசந்தம் தேடி வருவோம் எங்கே இரண்டாம் முறையாக பாடப் படும் போது எத்தனை மகிழ்ச்சி இவளுக்கு என்ற ஆசுவாசத்துடன் , இந்த வருடம்தான் கடைசி என்பதை அறிந்து வெளியிடும் சங்கடம் , சூழல் புரிந்த இந்த கண் சந்தோஷமாவது இவளுக்கு தர முடிந்ததே என்ற சிறிய ஆறுதல்.
மேலே குறிப்பிட்ட அனைத்தும் நொடி நேர காட்சிகள்.
அடுத்ததாக அவர் நடித்த ஒரு 18 ஆம் நூற்றாண்டு சரித்திரப் படம் , 20 ஆம் நூற்றாண்டில் ஒரு தியாகியின் பயோபிக் இரண்டையும் பேச போகிறேன்.
நடிகர்திலகத்தின் நடிப்பில் சம்பந்த பட்ட நாயகர்களின் ஆவி புகுந்து நடிப்பு சாமியாட வைப்பதாக நடிகர் ராஜேஷ் , திரைக் கதாசிரியர் பூபதி ராஜா குறிப்பிட்டுள்ளனர்.
முதலில் வீரபாண்டிய கட்டபொம்மன் இறுதி காட்சி.
இதில் சம்பத்த பட்ட பானர்மேன் டைரியில் அன்றைய விசாரணை குறிப்பை தனது எழுத்தில் ( cursive writing) ஆவணப் படுத்தப் பட்டுள்ளது. அதில் பானர்மேன் , கட்டபொம்மன் நடத்தையை எப்படி விவரித்துள்ளானோ , அவன் தூக்குமேடைக்கு நடந்து சென்ற விதத்தை சொல்லியுள்ளானோ அதற்கு துளியும் விலகாமல் படக்காட்சியில் நடித்த சிவாஜியின் உடலில் கட்டபொம்மன் ஆவி புகுந்து ஆட்டுவித்திருக்கத்தான் வேண்டும்.
அடுத்து கப்பலோட்டிய தமிழன் படத்தில் பாரதி இறந்த செய்தி கேட்டு வ.வு.சி பேசி நடிக்கும் காட்சி. சிவாஜி தானே ஒரு வசனத்தை பேசி நடித்தார். அதை பார்த்த ஒருவர் வ.வு.சியுடன் பாரதி இறந்த நேரத்தில் உடனிருந்தவர் இதையேதான் வ.வு.சி பேசினார் , இதே மாதிரிதான் கலங்கினார் என உணர்ச்சி வசப் பட்டாராம். வ.வு‌சியின் ஆவி சிவாஜி உடலில் புகுந்த ஆற்றிய அதிசயத்தை வேறு எப்படி விவரிக்க?
மாமனிதர்கள் அத்தனையும் சங்கமமான உடலை சுமந்தவன் நமக்கு நடிப்பிறைதானே?
அவனுக்கு பிறப்பு மட்டுமே என்றும் இறப்பில்லை
கவிஞர் மனதுக்கும் நடிப்பின் சக்திக்கும் , பாமர மனதுக்கும் பாலம் போட்ட அதிசயம்.
ராமாயணத்தில் ,வால்மீகியும் ராமனின் நாலு வித நடைகளை குறிப்பிடுவார். சிங்க நடை தலைமை குணத்தை குறிப்பது. புலி நடை சீற்றத்தையும் கோபத்தையும் குறிப்பது.யானை நடை பெருமிதத்தை குறிப்பது.எருது நடை அகந்தை,அலட்சியம் இவற்றை குறிப்பது.
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை நான் பார்த்த போது ,அதிசயித்த விஷயம் வால்மீகியை படிக்காமல் நடிகர்திலகம் இவற்றை உணர்ந்த விதம்.
அவையிலும், நகர்வலம் செல்லும் போதும், மந்திரி மற்றும் நண்பர்களுடன் இருக்கும் நடை ஒரு சிம்மத்தின் தலைமை குணத்தை குறிக்கும் நடை.ஜாக்சன் தன்னை அவமதித்து கோபப் படுத்தும் போது ஒரு புலியின் சீற்றம் நடையில் தெரியும்.ஜக்கம்மாவிடம் போருக்கு விடை பெரும் போது ஒரு யானையின் பெருமிதம் தொனிக்கும்.கடைசியில் பானர்மன் தூக்கு தண்டனை விதித்ததும் தூக்கு மேடையை நோக்கி நடக்கும் கால்களில் ஒரு எருதின் அலட்சியம் தெறிக்கும்.
உலக நடிப்பு பள்ளியே சிலபஸில் வைக்க வேண்டிய அதிசய பாணி தந்த உலக நடிகன்.
நீல வானம் என்ற 1965 படத்தில் ஒரு காட்சி.
ஆபரேஷன் போகும் முன் தேவிகா குரூப் ஃபோட்டோ எடுக்க விரும்பும் காட்சி தமிழ் திரையுலகில் நடிப்பு உன்னதத்தின் உன்னதம்.
முதலில் படு இயல்பாக மாமா மாமியிடம் கௌரியின் விருப்பத்தை கனிவாக மென்மையாக வெளியிடுவார். ( இயல்பு நடிப்பு- natural acting) விரக்தியில் எகிறும் மாமனாரிடம் பதிலுக்கு ஆமாம் பாருங்க , இந்த வீட்டிலே கௌரி சாக போறான்னு சந்தோஷம் எனக்கு பாருங்க என எகிறி ( மிகையுணர்வு நடிப்பு- over the top play) பிறகு திரும்ப எத்தனித்து மறுபடியும் மாமனாரிடம் வறண்ட அடிக்குரலில் உறுதியோடு மெதுவாக கூறும் வாங்க ( குறை நடிப்பு - underplay)என்று மூன்றையும் கலந்து நடிப்பு பள்ளிக்கு சிலபஸ் தரும்.

 

என்றென்றும் உன்னை அதிசயித்து வணங்கும் 
கோபால்
 

Leave a Reply