கனடிய பிரதமர் பிரான்ஸிற்கு விஜயம்
கனடா
உக்ரைனில் நடைபெறும் ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக, கனடா பிரதமர் மார்க் கார்னி பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின் போது, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய “கோலிஷன் ஆஃப் த வில்லிங்” (Coalition of the Willing) எனப்படும் கூட்டணியின் தலைவர்களுடன் கார்னி சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
ரஷ்யா உக்ரைனைத் தாக்கியதற்கு நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், பேச்சுவார்த்தை மூலம் அமைதி உடன்படிக்கையை விரைவுபடுத்துவதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
உக்ரைனை வலுப்படுத்துவதும், எதிர்காலத்தில் ரஷ்யாவின் தாக்குதல்களைத் தடுப்பதும் தான் தனது முதன்மை இலக்கு என கார்னி தெரிவித்தார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து உக்ரைன் பாதுகாப்பு உத்தரவாதங்களை நாடி வரும் நிலையில், கனடா தொடர்ந்து உறுதியான ஆதரவை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
கடந்த மாத இறுதியில் ஹாலிஃபாக்ஸில் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியை கார்னி சந்தித்தபோது, 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி மற்றும் கடன் உத்தரவாதங்களை கனடா அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
























