TamilsGuide

கருச்சிதைவு ஏற்பட்ட பெண்ணின் உடலில் ஆண் குரோமோசோம்கள் - மருத்துவர்கள் ஆச்சர்யம்

பிரேசில் நாட்டில் பெண்ணொருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில், அவருக்கு கருச்சிதைவு ஏற்பட என்ன காரணம் என்பதை அறிவதற்காக மருத்துவர்கள் அவரது உடலிலுள்ள குரோமோசோம்களை சோதனை செய்தபோது, அவரது உடலில் ஆண் பெண் என இரண்டு வகை குரோமோசோம்களும் இருப்பது கண்டு மருத்துவர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளார்கள்.

பொதுவாக, பெண்கள் உடலில் பாலினத்தை நிர்ணயிக்கும் XX வகை குரோமோசோம்களும், ஆண் உடலில் XY வகை குரோமோசோம்களும் இருக்கும். ஆனால், இந்தப் பெண்ணின் இரத்தத்தில் XY வகை குரோமோசோம்கள் இருந்தன.

அதே நேரத்தில், அவரது தோல் முதலான மற்ற உடல் பாகங்கள் அனைத்திலும் XX வகை குரோமோசோம்கள்தான் இருந்தன. அவர் ஒரு பெண் என்பதில் மருத்துவ ரீதியாக எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால், அந்தப் பெண் 13 வயதில் பருவமடைந்திருந்தார். அவரது உடல் பெண்ணுக்குரிய அனைத்து அம்சங்களையும் சரியாக கொண்டிருந்தது.

அப்படியிருக்கும்போது, அவரது இரத்தத்தில் மட்டும் எப்படி XY வகை குரோமோசோம்கள் உள்ளன என மருத்துவர்களுக்கு வியப்பு உருவாகியுள்ளது. அதாவது, அந்தப் பெண் தன் தாயின் வயிற்றிலிருக்கும்போது, அவருடன் ஒரு ஆண் குழந்தையும் உருவாகியிருந்திருக்கலாம், அதாவது, அவர் இரட்டையர்களில் ஒருவராக இருந்திருக்கலாம்.

அவருடன் உருவான இரட்டைக் குழந்தை ஆண் குழந்தையாக இருந்திருக்கலாம். ஆனால், அந்தக் குழந்தை வளர்ச்சியடையவில்லை. அதன் உடலிலிருந்த XY வகை குரோமோசோம், தாயின் தாய் சேய் இணைப்புத் திசு (placenta) மூலமாக, இந்தப் பெண்ணின் எலும்பு மஜ்ஜையில் (bone marrow) வந்து அமர்ந்திருக்கலாம்.

ஆகவே, அந்த எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகும் இரத்தத்தில் இந்த XY வகை குரோமோசோம் உள்ளதால்தான், அவரது இரத்தத்தில் மட்டும் XY வகை குரோமோசோம் காணப்படுகிறது என மருத்துவர்கள் முடிவுசெய்துள்ளார்கள்.

அதேவேளை அந்த கருச்சிதைவிற்கு பிறகு மீண்டும் கருத்தரித்த அந்தப் பெண், தற்போது ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

அந்த ஆண் குழந்தையின் உடலில் சரியான குரோமோசோம்களே உள்ளன. அதாவது, தாயின் பிரச்சினை அந்த குழந்தையை பாதிக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.   
 

Leave a comment

Comment