• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசா சிறுவனுக்காக கண்ணீர் விட்ட ஜாக்கி சான் - மேடையில் உருக்கம்

71 வயதான ஜாக்கி சான் 'Unexpected Family" என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சீன தலைநகர் பீஜிங்-இல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜாக்கி சான் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பேசிய ஜாக்கி சான், அண்மையில், காசா குழந்தைகளின் துயரங்களை விவரிக்கும் வீடியோ ஒன்றை பார்த்து மனமுடைந்தேன்.

அந்த வீடியோவில், ஒரு பாலஸ்தீன சிறுவனிடம், பெரியவனானதும் நீ என்னவாக விரும்புகிறாய்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அந்தச் சிறுவன் எவ்வித உணர்ச்சியுமின்றி, மிகச் சாதாரணமாக, "எங்கள் ஊரில் குழந்தைகள் வளர்வதே இல்லை. ஏனெனில் வளர்வதற்கு முன்பே கொல்லப்பட்டு விடுகிறோம்" என்று பதிலளித்தான்.

அந்தச் சிறுவன் பேசத் தொடங்கிய மாத்திரத்திலேயே என் கண்கள் குளம் போன்றதாகிவிட்டன.

என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்தப் பிஞ்சு சிறுவனின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அவன் மரணத்திற்குப் பழகிப் போய்விட்டான்.

நாம் முதுமையை ஒரு சுமையாக நினைக்கிறோம். ஆனால் கோடிக்கணக்கான குழந்தைகளுக்கு அந்த முதுமை மறுக்கப்படுகிறது. அவர்கள் வளர்வதற்கு முன்பே போரினால் சிதைக்கப்படுகிறார்கள்.

வன்முறை என்பது ஒரு குழந்தையின் அன்றாட வாழ்க்கையில் எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருந்தால், மரணத்தைப் பற்றி அந்தச் சிறுவனால் இவ்வளவு சாதாரணமாகப் பேச முடியும் என்பதுதான் உலகிற்கு அது சொல்லும் செய்தி" என்று உருக்கமாக தெரிவித்தார்.

2 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் காசா போரில் இதுவரை 71,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது கடந்த 23 மாதங்களில் காசாவில் 1 மணி நேரத்துக்கு 1 குழந்தை கொல்லப்பட்டுள்ளது.
 

Leave a Reply