போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள தயாராக இருப்பதாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.
அந்நாட்டின் அரச தொலைக்காட்சியில் நேற்று (01) ஒளிபரப்பப்பட்ட நேர்காணல் ஒன்றின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அச்சுறுத்தல்கள், மிரட்டல் மற்றும் பலவந்தம் மூலம் தங்களை அடிப்பணிய வைக்க முயற்சிப்பதாக கூறிய அவர், இரு நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார்.
வெனிசுலா அமெரிக்க முதலீட்டிற்கு தயாராக உள்ளது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கரீபியன் கடலில் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த நடவடிக்கைகள் பின்னர் கிழக்கு பசிபிக் பெருங்கடல் வரை விரிவடைந்துள்ளன. இதுவரை 35 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும், 115 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


