தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களிடையே வெற்றி பெற்றுள்ளது. மேலும் இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.
இதனிடையே, 'ஜெய் ஹிந்த்', 'தாயின் மணிக்கொடி', 'வேதம்', 'ஏழுமலை' உள்ளிட்ட பல படங்களை அர்ஜூன் இயக்கியுள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தனது மகள் ஐஸ்வர்யாவை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து 'சொல்லிவிடவா' என்ற படத்தை இயக்கி இருந்தார்.
இதனை தொடர்ந்து, தற்போது 'சீதா பயணம்' என்ற புதிய படத்தை அர்ஜூன் இயக்கியுள்ளார். இதில் நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் கதை மற்றும் திரைக்கதை எழுதுவதோடு மட்டுமல்லாமல், அர்ஜுன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.


