ஏ.வி.எம் விடுத்த அழைப்பு, ஃபுல் மது போதையில் வாலி எழுதிய பாடல்
சினிமா
ஃபுல் மது போதையில் கவிஞர் வாலி எழுதிய மெகா ஹிட் பாடல் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர்களில் ஏவி மெய்யப்ப செட்டியாரும் ஒருவர். அவரின் ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்த ஏராளமான ஹிட் படங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளன. அந்த காலகட்டத்தில் ஏ.வி.எம் நிறுவனம் பல்வேறு புதுமையான முயற்சிகளையும் செய்யத் தவறியதில்லை. அப்படி அவர்கள் புதுமைகளுடன் தொடங்கிய படம் தான் ’சர்வர் சுந்தரம்’.
இதில் இரண்டு விதமான புது முயற்சியை எடுத்திருப்பார். ஒன்று அந்த காலகட்டத்தில் நம்பர் 1 காமெடியனாக வலம் வந்த நாகேஷை கதாநாயகனாக வைத்து இப்படத்தை எடுத்தது. இன்றைய காலகட்டத்தில் காமெடி நடிகர் சூரியை வெற்றிமாறன் கதாநாயகனாக மாற்றிக்காட்டியதை எப்படி வியந்து பேசுகிறோம். அந்த ரிஸ்கை ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியார் அந்த காலத்திலேயே எடுத்திருக்கிறார். அதேபோல் ’சர்வர் சுந்தரம்’ படத்தில் அவர் மேற்கொண்ட மற்றொரு முயற்சி, ஒரு பாடல் எப்படி உருவாகிறது, சினிமா படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என்பதை திரையில் காட்டி இருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பாடலாக உள்ளது. இந்த பாடலை வாலி எப்படி எழுதினார் தெரியுமா? அது குறித்து அவர் பேசிய பழைய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் வாலி பேசியதாவது, “நான் வீட்டிற்கு வந்துவிட்டால் பேட்சுலர் போன்று உணர்வேன். மாலை நேரத்தில் மது குடிக்க ஆரம்பித்துவிட்டேன். அப்போது ஏ.வி.எம்மில் இருந்து புரொடக்ஷன் மேனேஜர் ஓடி வந்து ‘சர்வர் சுந்தரம்’ படத்திற்கு நீங்கள் பாட்டு எழுத வேண்டும். கிருஷ்ணன் பஞ்சு எல்லோரும் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று சொன்னார். நான் நிதானத்திலேயே இல்லை. அவரையும் உட்கார வைத்து மது ஊற்றிக் கொடுத்தேன்.
நேரமாகி கொண்டே இருக்கிறது. வாலியை தேடிப்போன ஆட்கள் யாரையும் காணவில்லையே என்று இசையமைப்பாளர் கோவர்த்தனே என் வீட்டிற்கு வந்துவிட்டார். அவர் என்ன நீங்க இப்படி உட்கார்ந்து இருக்கிறீர்கள். உங்களுக்கா மெய்யப்ப செட்டியார் எல்லாம் காத்திருக்கிறார்கள் என்றார். கண்ணதாசன் உடன் தானே மாலை ப்ரோகிராம் என்று விஸ்வநாதன் சொன்னார் என்றதும் ‘தெய்வத்தாய்’ படத்தை பார்த்துவிட்டு ஒரு பாடலை மட்டும் வாலி எழுதினால் நன்றாக இருக்கும் என்று செட்டியார் சொன்னதாக கூறினார். உடனே நான் அவசர அவசரமாக குளித்து உடையெல்லாம் போட்டுக் கொண்டு ஸ்டுடியோவிற்கு சென்றேன். நான் ஒரு அரை மணிநேரத்தில் பாட்டை எழுதி முடித்துவிட்டேன். ரூமிற்கு வந்த செட்டியார் என்ன ஒரு மாதிரி வாசனை அடிக்கிறது. ஊதுபத்தி ஏற்றி வையுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். அப்படி எழுதிய பாடல் தான் ‘அவழுக்கென்ன அழகிய முகம்’ பாடல்” என்றார்.
தமிழச்சி கயல்விழி























