உலகம் சுற்றும் வாலிபன்தான்.... இயற்கையான இந்த நடிப்பு வேறு ரகமே...
சினிமா
இந்த ஆண்டின் கடைசி பதிவாக குறிப்பிடுவது எம் ஜி ஆர் பிக்சர்ஸ் "உலகம் சுற்றும் வாலிபன்தான்.... படம் காணப்போகும் எல்லாருமே ரொம்ப ஆவலாக எதிர்பார்ப்பது புத்தர் கோயிலில் நம்பியாருடன் மக்கள் திலகத்தின் சண்டைக் காட்சியைத்தான். அணு ஆயுத தயாரிப்பின் ரகசிய பார்முலா அங்குதான் புதைக்கப்பட்டிருக்கும். அந்தப் பெட்டியை மக்கள் திலகம் தரையைத் தோண்டி எடுத்ததும் புத்த பிட்சு வேடத்தில் இருக்கும் நம்பியார் வேகமாக வந்து மக்கள் திலகத்தை தாக்குவார். பார்முலா வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை தரச்சொல்லியும், அதை பைரவனிடம் (அசோகன்) கொடுத்தால் தனக்கு கோடி டாலர் கிடைக்கும் என்றும் நம்பியார் கூறுவார். அதிர்ச்சியடையும் மக்கள் திலகம், அணு ஆயுத ரகசிய பார்முலா உள்ள பெட்டியை தனது நெஞ்சுக்கு நேராக பிடித்தபடி,, எல்லாத்தையும் துறந்த நீங்களா (புத்த பிட்சு என நினைத்து) இந்த அற்ப ஆசைக்கு அடிமையாகிட்டீங்க?"...என்பார். "நான் புத்த பிட்சு அல்ல..இதெல்லாம் வேஷம்" ..என்று கூறி அங்கியை கழற்றி முரட்டு உடம்போடு காட்சியளிக்கும் நம்பியாரின் உண்மை தோற்றம் வெளிப்பட்டதும் மக்கள் திலகத்தை நன்கு கவனியுங்கள். ஆபத்தை உணர்ந்து பின்னால் இரண்டு அடி நடந்து அதுவரை நெஞ்சுக்கு
நேரே வைத்திருந்த பெட்டியை முதுகுக்கு பின்னே வைத்து மறைத்துக் கொள்வார். அணு ஆயுத ரகசியம் கொடியவர்களின் கைகளில் கிடைக்கக் கூடாது, தன் உயிர் போனாலும் பரவாயில்லை உலகை அழிக்கும் அந்த ரகசியத்தை காப்பாற்றிவிட வேண்டும் என்ற கவலையையும் எச்சரிக்கை உணர்வையும் அந்த ஒரு செய்கையிலேயே மக்கள் திலகம் தனது நடிப்பில் நுட்பமாக வெளிப்படுத்தி இருப்பார். இந்த நுணுக்கங்களை அவர் எங்கிருந்து கற்றாரோ...எல்லாம் உலகை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் கூடிய நுட்பமான, இயற்கையான இந்த நடிப்பு வேறு ரகமே...
நன்றி...























