TamilsGuide

உலகப் புகழ் பெற்ற நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து

தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக உலகப் புகழ் பெற்ற முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் புத்தாண்டு தினத்தன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீட்டப்பட்ட சதித்திட்டத்தை எப்.பி.ஐ. அதிகாரிகள் சமீபத்தில் முறியடித்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், உலக நாடுகள் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கூட்ட நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் தற்போது எழுந்துள்ள தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, பல்வேறு நாடுகளில் 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் (இன்றிரவு) நடைபெறவிருந்த பொது நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், சாம்ப்ஸ்-எலிசீஸ் பகுதியில் நடைபெறவிருந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் புகழ்பெற்ற ஷிபுயா ரயில் நிலைய பகுதியில் நடக்கும் கவுண்டவுன் நிகழ்ச்சிக்கும், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரை வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செர்பியாவின் பெல்கிரேட் மேயர் அலெக்சாண்டர், ‘குழந்தைகளின் பாதுகாப்பு கருதி கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது’ என்று அறிவித்துள்ளார்.

இதேபோல் ஹாங்காங் மற்றும் இந்தோனேசியாவின் ஜகார்த்தா ஆகிய நகரங்களிலும் வாணவேடிக்கை உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கலிபோர்னியாவின் புல்லர்டன் நகரில் மோசமான வானிலை காரணமாக கொண்டாட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. கொண்டாட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்படாத நகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
 

Leave a comment

Comment