தனது அதிகாரத்தை எம்.ஜி.ஆர். எப்போதுமே தவறாகப் பயன்படுத்தியதில்லை
சினிமா
தமிழக அமைச்சராகவும் சட்டப் பேரவைத் தலை வராகவும் இருந்த க.ராசாராமுக்கு வேண்டிய தமிழ்ப் பேராசிரியர் க.திருநாவுக்கரசு. திருக்குறள் சம்பந்தமான ஆய்வு நூல்களை எழு தியவர். திருக் குறள் ஆராய்ச்சி தொடர்பாக படித்தும் எழுதியும் திருநாவுக் கரசுக்கு கண் பார்வையே மங்கி விட்டது. ஒருநாள் அவர் ராசாராமை சந்தித்து, ‘‘எனது மகள் மருத்துவக் கல்லூரியில் சேர விரும்புகிறாள். ஆனால், தேவை யான மதிப்பெண் களைவிட, ஒன் றிரண்டு குறைவாக உள்ளது. என் மக ளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க முதல் வரிடம் கூறி ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.
இதை முதல்வர் எம்.ஜி.ஆரின் கவனத்துக்கு ராசாராம் கொண்டு சென்றார். திருநாவுக்கரசு எழுதிய நூல்களையும் முதல்வரிடம் அளித்தார். ராசாராம் கூறி யதை அமைதியாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., தமிழுக்குத் தொண்டு செய்தவரின் மகளுக்கு உதவ முடிவு செய்தார். அவர் மனதுக்குள் தீர்மானித்து விட்டாலும் உடனடியாக வெளியே சொல்லவில்லை. எம்.ஜி.ஆர். மவுனமாக இருக்கவே, ‘‘எப்படியாவது அந்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தினார் ராசாராம்.
அதற்கு, ‘‘செய்துவிடலாம்’’ என்று எம்.ஜி.ஆரிடமிருந்து பதில் வந்தது. ‘என்ன இவ்வளவு சாதாரணமாக சொல்கிறராரே? நமக்காக ஒப் புக்கு சொல் கிறாரோ?’ என்ற எண்ணம் மேலிட, ‘‘என்ன செய்யப் போகிறீர்கள்?’’ என்று ராசாராம் வினவினார்.
‘‘தமிழ்த் தொண்டு செய்த குடும்பங்களைச் சேர்ந்தவர் களுக்கு மருத்துவக் கல்லூரி யில் இந்த ஆண்டு முதல் இரண்டு இடங்கள் ஒதுக் கப்பட வேண்டும் என்ற புதிய விதி முறையை உருவாக்கி விட் டால் சரிதானே?’’ என்று புன்ன கைத்தபடியே கேட்டார் எம்.ஜி.ஆர்.! அசந்துபோய் நின்றார் ராசாராம்.
எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் அந்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்க சிபாரிசு செய்திருக்கலாம். முதல்வரே சொல்லும்போது மாணவிக்கு இடம் கிடைக்காமல் போய்விடுமா? ஆனால், தனது அதிகாரத்தை எம்.ஜி.ஆர். எப்போதுமே தவறாகப் பயன்படுத்தியதில்லை. மரபுகளையும் விதிகளையும் மீறாமல் அதே நேரம் அந்த மாணவிக்கு மருத்துவக் கல்லூரி யில் இடம் கிடைக்கவும் ஏற்பாடு செய்துவிட்டார். அந்த மாணவி மட்டுமின்றி, தமிழ்த் தொண்டு செய்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எதிர் காலத்தில் பயனடையும்படியும் செய்து விட்டார். தமிழறிஞர் திருநாவுக்கரசு எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்து வாழ்த்தினார்.
- தி இந்து





















