பல்கலைக்கழகங்களின் துறைத்தலைவர்கள் மற்றும் பீடாதிபதிகளின் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கம் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.
வவுனியா பல்கலைக்கழக வாயிலில் இன்று கூடிய பல்கலைக்கழக ஆசிரியர் தொழிச்சங்க பிரதிநிதிகள் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த பல்கலைக்கழக ஆசிரியர் தொழிச்சங்கத்தின் தலைவர் பி. தர்மதா,
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் அடையாள பணி பகிஷ்கரிப்பினை இன்று (30) நடத்துகிறது.
பல்கலைக்கழகங்களின் துறைத்தலைவர்கள் மற்றும் பீடாதிபதிகளின் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக சட்ட திருத்தம் பற்றிய பிரேரணை ஒன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.
இதன் அடிப்படையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் டிசம்பர் மூன்றாம் திகதி அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அக்கடிதத்தில் துறைத்தலைவர்கள் மற்றும் பீடாதிபதிகளின் நியமனம் தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையும் மறு அறிவித்தல் வரை உடனடியாக ஒத்திவைக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக மானியங்களின் இத்தகைய முறையற்ற தலையீடானது அரசு பல்கலைக்கழகங்களின் சுயாதீன செயல்பாட்டை பாதிக்கும் என்பதன் அடிப்படையில் பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனமானது அதன் எதிர்ப்பினை கடுமையாக வெளிப்படுத்தியதுடன் மூன்றாம் தேதி அனுப்பப்பட்ட அக்கடிதத்தினை மீளப்பெற வலியுறுத்தி இருந்தது.
எனினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவானது துறைத்தலைவர்கள் மற்றும் பீடாதிபதிகளின் நியமனம் தொடர்பான தமது கருத்தினை நியாயப்படுத்தி மீண்டும் ஒரு பதில் கடிதத்தினை டிசம்பர் 18ஆம் தேதி அனுப்பி இருந்தது.
இதன் அடிப்படையில் பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பான எந்த ஒரு சாதகமான முடிவும் எட்டப்படாத நிலையில் பல்கலைக்கழக ஆசிரியர் தொழிற்சங்கங்களின் சம்மேளனமானது அக்கடிதங்களை மீளப்பெற வலியுறுத்தி இன்றைய தினம் ஒரு அடையாள பணி பகிஷ்கரிப்பு ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானித்திருந்தது.
இந்த வகையில் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் இத்தொழிற்சங்க நடவடிக்கையில் பங்குபற்றி எமது முழு ஆதரவினையும் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.


