மற்றுமொரு புத்தாண்டில் கால்பதிக்க உலகம் தயாராகி வருகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு புத்தாண்டை வரவேற்க ஒரு சாரார் தயாராகி வருகின்றனர். எதுவித நம்பிக்கையும் இன்றி பத்தோடு பதினொன்றாக புத்தாண்டை எதிர்கொள்ள இன்னொரு சாரார் காத்திருக்கின்றனர். தற்போதைய உலகின் மிகப் பெரும் போராகக் கருதப்படும் உக்ரைன் போர் முடிவுக்கு வரக்கூடும் என்ற எதிர்பார்ப்புகளோடு புத்தாண்டு பிறக்கிறது. மற்றொரு பெரும் போரான பலஸ்தீனப் போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருந்தாலும், 'மழை விட்டாலும் துவானம் விடவில்லை' என்ற பாணியில் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இது தவிர, சூடான், கொங்கோ ஜனநாயகக் குடியரசு, சிரியா என உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஆயுத மோதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. பெறுமதியான மனித உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. மோதல்களில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக சொந்த மண்ணிலும், அயல் நாடுகளிலும் அகதிகளாகத் தஞ்சமடைந்து வாழும் இலட்சக் கணக்கான மக்களின் துயரமும் உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதலாவது வருடத்தை நிறைவு செய்யத் தயாராக உள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பதவிக் காலத்தில் பல போர்களை முடிவுக்குக் கொண்டுவந்து சாதனை படைத்துள்ளதாகக் கூறிவரும் அதேவேளை, மத்திய அமெரிக்க நாடான வெனிசுவேலாவை மையப்படுத்தி மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் புதிய போர்முனை ஒன்றிக்கு வழிசமைக்கலாம் என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளது. வெனிசுவேலாவோடு தனது செயற்பாடுகளை ட்ரம்ப் மட்டுப்படுத்திக் கொள்வாரா அல்லது புதிய ஆண்டில் மேலும் பல நாடுகளில் தனது தலையீடுகளை மேற்கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
உக்ரைன் விவகாரத்தைப் பொறுத்தவரை வெளிப்படையாகவும், திரை மறைவிலும் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. தனது படையெடுப்புக்கான காரணங்களுள் ஒன்றாக ரஸ்யா முன்வைத்திருந்த 'நேட்டோவில் உக்ரைன் இணைதல்' என்ற விவகாரம் ஸெலன்ஸ்கியின் அறிவிப்போடு தற்காலிகமாக முற்றுப்புள்ளியை எட்டியிருக்கிறது. யேர்மனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் குறித்த அறிவிப்பை ஸெலன்ஸ்கி விடுத்திருந்தார். நேட்டோவில் இணையும் தமது நாட்டின் முடிவைக் கைவிடுவதாக அறிவித்துள்ள அவர் பதிலுக்கு மேற்குலகின் பாதுகாப்பைக் கோரி நிற்கிறார். எனினும், தனது திடீர் முடிவுக்கான காரணத்தை அவர் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
2002ஆம் ஆண்டிலேயே இந்த நிலைப்பாட்டை ஸெலன்ஸ்கி எடுத்திருந்தால் ஒரு கோர யுத்தம் தடுக்கப்பட்டிருக்கக் கூடும். பெறுமதியான மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கக் கூடும். கோடிக் கணக்கான டொலர்கள் பெறுதியான சொத்தழிவுகள் நடைபெறாமல் போயிருக்கக் கூடும். ஆனால், துர்வாய்ப்பாக அனைத்தும் நடைபெற்றுவிட்டது. மீள முடியாத இடத்துக்கு உக்ரைன் சென்றுவிட்டது. இயற்கை வளம் மிகுந்த உக்ரைன் இன்று வெளிநாட்டு உதவிகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது. போரில் இறந்தவர்கள் போக, ஏதிலிகளாக வெளிநாடுகளை நோக்கிப் படையெடுத்தவர்கள் மீள வர விரும்பாத சூழலில் இலட்சக்கணக்கான தனது குடிமக்களை, பெறுமதியான மனித வளத்தை இழக்க வேண்டிய நிலைக்கு உக்ரைன் தள்ளப்பட்டு உள்ளது.
போரைத் தொடர்ந்தும் நடத்திச் செல்வதற்காக மேற்குலக நாடுகளைப் பெரிதும் நம்பியிருந்த ஸெலன்ஸ்கி தற்போது மேற்குலகினால் முழுவதுமாகக் கைவிடப்பட்ட நிலையில் உள்ளார். முதலில் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா அவரைக் கைவிட்டது. தற்போது மேற்கு ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனைக் கைவிடும் நிலைக்குச் சென்றுள்ளன. ஐரோப்பாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஸ்ய நிதிவளங்களை உக்ரைனுக்குக் கைமாற்றும் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் கருத்தொருமிப்பு இல்லாத நிலையில், அந்தத் திட்டம் கைவிடப்பட்டு உள்ளதைப் பார்க்க முடிகிறது. இது தவிர, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ரஸ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்திக்கப் போவதாக வெளியாகிவரும் செய்திகள் ஸெலன்ஸ்கியைப் பொறுத்தவரை உவப்பானதாக இருக்கப் போவதில்லை என்பது வெளிப்படையானதே.
காரணங்கள் எதுவாக இருந்தாலும் உக்ரைன் போர் முடிவுக்கு வருவது உலகிற்கு நல்லதொரு செய்தியே. அது புதிய புத்தாண்டில் நிகழ்வதற்கான சாத்தியங்களே அதிகம் தென்படுகின்றன. கள யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, பரஸ்பர விட்டுக்கொடுப்புகளுடன் ஒரு தீர்வு எட்டப்படுமானால் சமாதானம் நீண்ட நாட்களுக்கு நீடிக்கக்கூடும். இல்லாதுபோனால், மீண்டும் ஒரு மோதல் ஏற்படுவதைத் தடுத்துவிட முடியாது.
உலகின் நீண்டகால மோதல்களுள் ஒன்றாக உள்ள இஸ்ரேல்-பலஸ்தீன மோதல் புத்தாண்டிலும் தொடர்வதற்கான வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றன. தனது ஆக்கிரமிப்புக் கொள்கைகளைக் கைவிட விரும்பாத இஸ்ரேலியத் தலைமையும், அதற்கு மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் அதரவு வழங்கி நிற்கும் மேற்குலக நாடுகளின் போக்கும் இந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு ஒன்றிற்கான தடைகளாக உள்ளன. மக்கள் நலன் என்பதை விடவும் பூகோள அரசியல் நலனை அதிகம் பெறுமதி மிக்கதாகக் கருதி, முன்னுரிமை தந்து செயற்படும் போக்கு மேற்குலகின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக உள்ள நிலையில் பலஸ்தீனப் பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வு என்பது எட்டாக்கனியாகவே அமையும் என்பது நிச்சயம்.
இதுதவிர, பலஸ்தீனத் தனிநாட்டை கொள்கையளவில் ஆதரித்து நிற்கும், பலஸ்தீனத்துக்கான நிதியுதவிகளை தொடர்ச்சியாக வழங்கி நிற்கும் இஸ்லாமிய நாடுகள் தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமலும், பலஸ்தீனத் தனிநாட்டை அடைவதற்கான முறையான வழி வரைபடத்தைக் கொண்டிராத நிலை காரணமாகவும் பலஸ்தீன விவகாரத்துக்குத் தீர்வு காண்பதில் காலதாமதம் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. பாரிய கருத்து வேறுபாடுகள், முரண்கள் இல்லாத போதிலும் இஸ்லாமிய நாடுகள் தமக்கிடையே வேறுபட்டு நிற்பது இஸ்ரேலிய நலன்களுக்கே சாதகமானது எனத் தெரிந்தும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் தமக்கிடையேயான பேதங்களை மறந்து தற்காலிகமாகவேனும் ஒரு பொது வேலைத்திட்டத்தில் இணைந்து பயணிக்க முடியாதவர்களாக உள்ளனர். இந்த விடயத்தில் மேற்குலகின் பிரித்தாளும் தந்திரம் பல பத்தாண்டுகளாக வெற்றியளித்து வருவது கண்கூடு. இஸ்ரேலும் அதன் நட்பு நாடுகளும் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி வருவதையும் மறுப்பதற்கில்லை.
கடந்த இரண்டு வருடங்களாக நீடித்த பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் போர் ஐக்கிய நாடுகள் சபையின் இயலாமையை மீண்டும் ஒருமுறை முழு உலகிற்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. உலகப் பொதுமன்றம் என்று தன்னைப் பறைசாற்றிக் கொண்டாலும், அமெரிக்காவின் வல்லமையோடு ஒப்பிடும்போது தனது வல்லமை குறைவானதே என்பதை ஐ.நா. சபை ஒத்துக்கொண்டே ஆகவேண்டிய பரிதாபகரமான நிலையிலேயே உள்ளது.
உலகம் எதிர்கொண்டுவரும் மற்றுமொரு பாரிய பிரச்சனை பொருளாதார அசமத்துவம். ஏழைகள் மென்மேலும் ஏழைகளாகிச் செல்வதும் செல்வந்தர்கள் மென்மேலும் செல்வந்தர்கள் ஆவதும் உலகின் தற்போதைய போக்காக உள்ளது. விளிம்பு நிலையில் வாழும் மக்கள், பட்டினி நிலைமையை எதிர்கொள்ளும் மக்கள் என உலக சனத்தொகையின் பெரும்பாலானோர் கடின வாழ்வை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றனர். புதிய ஆண்டிலும் இத்தகைய நிலையே நீடிக்கும் என்பது தொடர்பான எதிர்வுகூறல்கள் உள்ளன. மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட சமூகநீதித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பின்நிற்கும் பெரும்பாலான அரசாங்கங்கள் மறுபுறம் செல்வந்தர்களுக்கான வரிச் சலுகைகளை வழங்குவதில் போட்டிபோட்டுச் செற்படுவதைப் பார்க்க முடிகின்றது.
மொத்தத்தில், புத்தாண்டில் ஒரு போர் முடிவுக்கு வருகின்றது என நினைத்து மகிழ்வதா? நீண்ட கால மோதல் ஒன்று தங்கு தடையின்றித் தொடர்கின்றதே எனக் கவலை கொள்வதா? புரியவில்லை.
சுவிசிலிருந்து சண் தவராஜா


