• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்கள் திலகத்தின் படங்கள் இந்தக் காலத்திலும் மக்களால் ரசிக்கப்படுகின்றன. 

சினிமா

மக்கள் திலகத்தின் படங்கள் இந்தக் காலத்திலும் மக்களால் ரசிக்கப்படுகின்றன. அதற்கு காரணம், அவர் படங்களின் விறுவிறுப்பான கதையமைப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள், பாடல்கள் மட்டுமின்றி; படத்தை உருவாக்குவதில் சிறிய விஷயங்களில்கூட அவர் கவனம் செலுத்தியதுதான்.
காட்சிகளை அவர் படமாக்கியிருக்கும் விதமும் அதன் அழகும் படத்தோடு நம்மை கட்டிப்போடும்.
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படமே பிரம்மாண்டமான தயாரிப்பு. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா வீசிய அணுகுண்டுகள் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களை உருக்குலைத்தன. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில், மனித குலத்துக்கே அச்சுறுத்தலாய் விளங்கும் அணுசக்தி பற்றிய ரகசிய குறிப்பை வில்லன் கோஷ்டியிடம் இருந்து அதே ஜப்பானிலேயே மக்கள் திலகம் மீட்பதுபோல காட்சி. இதற்காகவே, அவருக்கு சபாஷ் போடலாம்.
முன்னதாக, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு மக்கள் திலகம் செல்வார். அங்கே ‘துஸித் தானி’ என்ற பெயரில் ஒரு பிரம்மாண்டமான ஓட்டல். அந்த ஓட்டலில் படக்குழுவினர் தங்கியிருந்தனர். ஓட்டலின் அழகைப் பார்த்த மக்கள் திலகம் அங்கேயே காட்சிகளை படமாக்க முடிவு செய்தார்.
படம் வெளியானது 1973-ம் ஆண்டு. அந்தக் காலகட்டத்தில், கிராமங்களை விடுங்கள்; சிறிய நகரங்களில் கூட ஓட்டல் என்றால் குண்டு பல்பின் மங்கிய ஒளியில் கால் உடைந்த ஸ்டூல்களும், ஈக்கள் மொய்க்கும் மேஜையும், நசுங்கிய டம்ளர்களும்தான் நினைவுக்கு வரும். அதைத் தகர்த்தெறிந்து இப்படியெல்லாம்கூட இருக்குமா என்று வியக்க வைத்தது ‘துஸித் தானி’ ஓட்டல்.
பாங்காக்கில் சொம்சாய் வீட்டில் மக்கள் திலகம் விடைபெறும் போது, ‘நாங்கள் ஹோட்டலுக்கு கிளம்புகிறோம்’ என்று கூறுவார். ‘எந்த ஹோட்டல்’ என்று தாய்லாந்து நடிகை மேட்டா ரூங்ரட் (படத்தில் மேத்தா) கேட்க, துஸித் தானி என்பார் மக்கள் திலகம். அதை மீண்டும் ‘துஸித் தானி?’ என்று மேத்தா கண்கள் விரிய கூறும்போதே, மக்கள் திலகத்தை ஒருதலையாய் விரும்பும் அவர் அங்கு செல்வதற்குத்தான் கேட்டுத் தெரிந்து உறுதிப் படுத்திக் கொள்கிறார் என்பது நமக்குப் புரியும்.
அடுத்த காட்சி முதல் ஹோட்டல் துஸித் தானியின் ராஜாங்கம் ஆரம்பம். ஹோட்டலின் முன் அறையில் இருந்து வாயிலை கேமரா பார்க்கும் கோணம் நாமே உள்ளிருந்து வாயிலைப் பார்ப்பது போலிருக்கும். பிரம்மாண்ட கண்ணாடிக் கதவுகளுக்கு வெளியே வேகமாக வந்து நிற்கும் சொகுசுக் கார். அதிலிருந்து அலங்கரிக்கப்பட்ட அழகுப் பதுமையாக வரும் மேத்தா. வரும்போதே அவர் நடந்து வராமல் ஓடி வருவது மக்கள் திலகத்தைப் பார்க்கும் அவரது ஆவலை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

கதவைத் திறந்து ஓட்டலுக்குள் நுழைந்து முன் அறையைத் தாண்டி வெல்வெட் பாதையில் ‘‘மிஸ்டர் ராஜ்’’ என்று அழைத்தபடி அவர் ஓடி வரும்போது அந்த வராண்டாவின் நீளம் புலப்படும். வராண்டா முடிவில் ஏழெட்டு படிகள் ஏறி அவர் வரும்போது மேலே பேப்பர் படித்தபடி பாக்கு வண்ண ஸ்டிரைப்டு கோட்டில் மக்கள் திலகம் படு ஸ்மார்ட் & அழகு. அவருக்கு எந்த வண்ணம்தான் பொருந்தாது? வந்ததும் தமிழ் பண்பாட்டின்படி ‘வணக்கம்’ என்று மேத்தா கூற, பதிலுக்கு மக்கள் திலகமும் அவர்களது மொழியில் ‘சவாஸ்தி' என்று புன்னகையுடன் குனிந்து வணக்கம் சொல்லும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஜொலிக்கும் சிலையாக நிற்கும் மேத்தாவை மக்கள் திலகம் சுற்றி வந்து ‘பியூட்டிஃபுல்’ என்பார்.
பின்னர், மேத்தா கையில் வைத்திருக்கும் பொம்மையைப் பார்த்து என்ன இது? என்று செம்மல் கேட்க அவர் தட்டுத் தடுமாறி ‘என் .... பிரசண்டேஷன்’ என்று கொச்சையாய் சொல்வதும் அழகு. (இப்போதைய படங்களில் தமிழ் நடிகைகளுக்கே டப்பிங் குரல் தேவைப்படும் நிலையில் மக்கள் திலகம் துணிந்து தமிழை தாய் மொழியாக கொள்ளாத மேட்டாவின் குரலிலேயே அவரை தட்டுத் தடுமாறியாவது பேச வைத்திருப்பார்.) பதிலுக்கு மக்கள் திலகம் ‘‘நானும் உனக்கு ஒரு பரிசு வச்சிருக்கேன்’’ என்று கூறியதும் ‘‘கொடு ..... கொடு’’ என்று கூறும் மேத்தாவின் கையைப் பிடித்துக் கொண்டு மக்கள் திலகம் ஓடுவார். அந்த ஓட்டத்துக்கு ஈடு கொடுக்கும் மெல்லிசை மன்னரின் அசத்தலான பின்னணி இசை.
அந்த இடத்தில் இருந்து மீண்டும் நீளமாக ஓட்டலின் பாதை போய்க் கொண்டே இருக்கும். எவ்வளவு நீளமான பாதை என்பதை உணர்த்தும் வகையில் மேத்தாவை ‘எவ்வளவு தூரம்? முடியல’ என்று சிணுங்கச் செய்திருப்பார். அதற்கு தலைவர் ‘‘வா. வா... அடிப்பேன்’’ என்று செல்லமாக கையை ஓங்குவதில் உரிமையுடன் கூடிய பாசம் தெரியும்.
அந்த வராண்டாவையும் தாண்டி ஓடி வருகையில் மற்றொரு சிறிய வராண்டா. இங்கு கேமராவை ‘லோ ஆங்கிளில்’ வைத்து படம் பிடித்திருப்பார் மக்கள் திலகம். காரணம் காட்சியும் அழகாகத் தெரிவதோடு, அந்த இடத்தின் அலங்காரமான வேலைப்பாடுள்ள விதானம் தெரியும். சிறிய சிறப்பு கூட மக்கள் திலகத்தின் கண்களில் இருந்து தப்பாது. அதை ரசிகர்களுக்கு விருந்தாக்கவும் தவறமாட்டார்.
அதையும் தாண்டி பெரிய ஓப்பன் ஸ்பேஸ். அந்த இடத்தில் கேமரா கோணம் வைக்கப்பட்டுள்ள இடம் சூப்பர். நாகேஷூம் சந்திரகலாவும் எதிரெதிரே நாற்காலியில் அமர்ந்திருக்க, மேத்தாவின் கையைப் பிடித்தபடி அங்கும் தலைவர் ஓடி வருவார். அந்த நீண்ட பாதையில் ஓடி வருவதற்கே இவ்வளவு நேரம் ஆகிறதென்றால் நடந்து வந்தால் எவ்வளவு நேரம் ஆகும்? என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
இங்கு கேமரா கோணம் வைக்கப்பட்ட இடம் சூப்பர் என்று சும்மா சொல்லவில்லை. அந்த வியூவில் இருந்து பார்த்தால் இவர்கள் 4 பேருக்கும் பின்னே, பிரம்மாண்டமாக பச்சையும் நீலமுமாய் நீச்சல் குளம். அதற்கும் அந்தப் பக்கத்தில் எதிர் கரையில் பீறிட்டு அடிக்கும் நீருற்றுக்கள் கண்ணுக்கு ரம்மியமான காட்சி. இப்போதுதான் துஸித்தானியின் முழு பிரம்மாண்டமும் நமக்கு தெரியும்.
சமீபத்திய ஆண்டுகள் வரை சென்னையிலேயே கூட 14 மாடி எல்ஐசி கட்டிடம்தான் பிரம்மாண்டம். அப்போதைய படங்களில் சென்னை என்றால் முதலில் சென்ட்ரல் ஸ்டேஷனையும் (கதாபாத்திரம் தென் மாவட்டங்களில் இருந்து ரயிலில் வருவதாக இருந்தால் கூட) பின்னர், எல்ஐசியையும் காட்டுவது வழக்கம். அதற்கே, நம் மக்கள் வாய் பிளப்பார்கள். அந்த கால கட்டத்தில் எல்ஐசியை விட பிரம்மாண்டமாய் நூற்றுக்கணக்கான அறைகளுடன் பல அடுக்கு மாடிகளுடன் எழும்பி நிற்கும் துஸித்தானியின் கம்பீரம்.... அத்தனை அழகையும் அந்த லோ ஆங்கிளில் கேமராவுக்குள் அடக்கிய மக்கள் திலகத்தின் மதிநுட்பம்.
மக்கள் திலகம் பன்முகத் தன்மை கொண்டவர். வெறும் நடிகர் என்று மட்டுமே அவரை அளந்தால் தோற்றுத்தான் போவோம். திரைத்துறையின் சகலமும் தெரிந்து, அடி, முடி காணமுடியாதபடி விஸ்வரூபம் எடுத்து நின்ற சகலகலா வித்தகர் அவர்.

 

(ஸ்ரீதர் சுவாமிநாதன் பதிவு)
 

Leave a Reply