பிரபல தென்கொரிய இசைக்குழுவான BTS (Bangtan Boys), 2026-ஆம் ஆண்டில் தங்களின் பிரம்மாண்ட உலகளாவிய இசைப் பயணத்தின் ஒரு பகுதியாக முதன்முறையாக இந்தியாவுக்கு வரக்கூடும் என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2026ம் ஆண்டின் முற்பகுதியில் மும்பையில் இசை நிகழ்ச்சியை நடத்த BTS குழுவின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 27ம் தேதி அன்று ஒரு நேரலை நிகழ்ச்சியில், BTS உறுப்பினர் கிம் டேஹியுங் (Kim Taehyung - V), இந்திய ரசிகர்களை நோக்கி "நமஸ்தே இந்திய ஆர்மி, அடுத்த ஆண்டு சந்திப்போம்" என்று கூறியது இந்திய ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
BTS-ன் ஏழு உறுப்பினர்களும் (RM, Jin, Suga, J-Hope, Jimin, V, Jungkook) தங்களின் கட்டாய இராணுவப் பணியை 2025 ஜூன் மாதத்திற்குள் முடித்துவிட்டனர்.
அவர்கள் தற்போது புதிய ஆல்பம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், 2026 மே முதல் டிசம்பர் வரை சுமார் 60 முதல் 65 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
BTS-ன் மேலாண்மை நிறுவனமான HYBE, கடந்த செப்டம்பர் 2025-ல் மும்பையில் 'HYBE India' என்ற தனது அலுவலகத்தைத் தொடங்கியது. இது BTS போன்ற பெரிய குழுக்கள் இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்புகளை உறுதிப்படுத்துகிறது.
இருப்பினும், இதுவரை இந்த இசைக்குழுவின் நிறுவனமான BIGHIT MUSIC அல்லது HYBE, இந்தியாவுக்கான தேதிகள் அல்லது இடங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.


