அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டமான கிளீன் சிறீ லங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விசேட நடமாடும் வேலைத்திட்டம் இன்றைய தினம் (29) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க,நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன், மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் உள்ளடங்களாக இராணுவ பொலிஸ் அதிகாரிகள்,திணைக்கள தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது ஆரம்ப நிகழ்வாக தூய்மையான இலங்கை பிரஜா சக்தி தேசிய ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் என்பன தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து ஹிம்கம வேளைத்திட்டங்தின் கீழ் காணி அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு பூரண அனுமதி பத்திரம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மாந்தை மேற்கு,நானாட்டான் மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 99 குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் டித்வா சூறாவளி மற்றும் வெள்ள பாதிப்புக்களினால் ஏற்பட்ட இழப்புகளுக்கான அரசாங்கத்தினால் வழங்கப்படும் நஷ்ட ஈடு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது.
இதன் போது கால்நடை வளர்ப்பாளர்கள் 10 பேருக்கும்,விவசாய செய்கையாளர்கள் 09 பேருக்கும்,மேட்டு நில பயிர் செய்கையாளர்கள் 11 பேருக்கு இவ்வாறு இழப்பீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இரத்ததான முகாம் ஒன்றும் இடம்பெற்றது.இதன்போது பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் இதுவரை பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பெறாதவர்கள் அதனை பதிவு செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதோடு பல்வேறு சேவைகளும் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பயணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


