TamilsGuide

நாடோடி மன்னன்

எம்ஜிஆரின் பொதுவான படங்கள் என்று பார்த்தால் பாட்டுகள்; அருமையான தயாரிப்பு; சண்டைக் காட்சிகள், குறிப்பாக கத்தி சண்டை காட்சிகள், சிலம்ப சண்டை காட்சிகள்; அழகான ஹீரோயின்கள். சில சமயம் நல்ல பொழுதுபோக்கு கதை, நல்ல நகைச்சுவை அமைந்துவிடும். இந்த படத்தில் மிக பிரமாதமான பாட்டுகள்; காசை தண்ணீர் போல செலவழித்து எடுக்கப்பட்ட படம்; அவருக்கு இணையாக திரையில் சண்டை போடக்கூடிய நம்பியார், வீரப்பா என்று இரண்டு வில்லன்கள்; பானுமதி, சரோஜா தேவி என்று இரண்டு ஹீரோயின்கள்; நன்றாக எழுதப்பட்ட திரைக்கதை, வசனம். நகைச்சுவைதான் சரியில்லை. சந்திரபாபுவை விட எம்ஜிஆர் பானுமதி ஜெயிலில் சந்திக்கும் காட்சியே கொஞ்சம் புன்முறுவலை வரவழைக்கும்.
1958-இல் வந்த படம். எம்ஜிஆரின் சொந்த படம். அவரே இயக்கம். எம்ஜிஆர், பானுமதி, சரோஜா தேவி, சந்திரபாபு, வீரப்பா, நம்பியார், சக்ரபாணி, ஜி. சகுந்தலா (மந்திரி குமாரியில் எம்ஜிஆருக்கு ஜோடி; இதில் சந்திரபாபுவுக்கு ஜோடி!) என்று ஒரு நட்சத்திரக் கூட்டம். எஸ்.எம். சுப்பையா நாயுடு இசை. எல்லா பாட்டும் பட்டுக்கோட்டையா என்று தெரியவில்லை, ஆனால் பட்டுக்கோட்டை நிறைய பாட்டுகளை எழுதி இருக்கிறார்.
நாடோடி எம்ஜிஆர் ஜெயிலில் தூங்காதே தம்பி என்று பாட்டு பாடுகிறார். பானுமதியின் குரல் மட்டுமே கேட்கும். பானுமதி தான் கிழவி என்று சொல்லி அவரை ஏமாற்றுகிறார். பிறகு இருவரும் ஒன்றாக செல்ல சம்மதமா, உமக்கு சம்மதமா என்று பானுமதி பாட்டிலேயே கேட்டு அடுத்த நாட்டுக்கு செல்கிறார்கள். அங்கே வாரிசு பிரச்சினை. மன்னன் எம்ஜிஆர்தான் வாரிசு என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் ராஜகுரு வீரப்பா, சதிகார சக்ரபாணி, பிரபு பிங்கலன் (நம்பியார்) யாருக்கும் இது பிடிக்கவில்லை. சதி நடக்கிறது. மன்னன் எம்ஜிஆரும் நாடோடியும் சந்திக்கிறார்கள். மன்னன் எம்ஜிஆர் மயக்கம் அடைகிறார். நேரம் தவறிவிடக்கூடாது என்பதற்காக நாடோடி எம்ஜிஆர் மன்னனாக பதவி ஏற்கிறார். காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும்தானே மிச்சம் என்று பாடும் பானுமதி மனம் குளிர புதிய சட்டங்களை கொண்டு வருகிறார்.
வசனங்கள் அருமை. வீரப்பா கேட்பார் – சரிதான்! நாட்டில் பணக்காரர்களே இருக்ககூடாது போல! எம்ஜிஆரின் பதில் – இல்லை, ஏழைகளே இருக்கக்கூடாது! வீரப்பா அவர் ட்ரேட்மார்க் சிரிப்போடு தான் மகள் போல் வளர்த்த சரோஜா தேவியிடம் சொல்வார் – ரத்னா, அப்பா என்று அழைக்காதே, அத்தான் என்று அழை!

படம் எம்ஜிஆருடையது. படத்தில் அவர் பூராவும் வியாபித்திருக்கிறார். மிச்ச எல்லாருமே டம்மிதான் – பானுமதி மட்டும் கொஞ்சம் ஈடு கொடுக்கிறார். வீரப்பாவுக்கு அவ்வப்போது அவரது ட்ரேட்மார்க் சிரிப்பு, சண்டை போடுங்கள், போதும் என்று சொல்லி இருக்கிறார்கள். அவருக்கு அது கை வந்த கலை. நம்பியாருக்கு ஸ்கோப் இல்லை. ஆனால் கடைசியில் அவர் எம்ஜிஆருடம் கடற்கரையில் மோதும் சண்டை பிரமாதம். சந்திரபாபு வேஸ்ட். இரண்டு பாட்டு பாடிவிட்டு போகிறார். விகடன் அவர் முட்டை தின்று கோழியை துப்பும் காட்சியை சிலாகிக்கிறது. இதெல்லாம் ஒரு காமெடியா? சரோஜா தேவிக்கு சும்மா கொஞ்சம் வெட்கப்பட்டு, சிரித்து, பாம்பைக் கண்டு பயந்து எம்ஜிஆர் மேல் ஒட்டிக்கொண்டு, ரவிக்கையை கழற்றி முதுகை காட்டி (அப்போதுதான் அவர் காணாமல் போன இளவரசி என்று மச்சத்தை பார்த்து எம்ஜிஆர் கண்டுபிடிக்க முடியும்.) கடைசியில் எம்ஜிஆர் அவரை மீட்க வரும்போது வீர மாமுகம் தெரியுதே அது வெற்றி புன்னகை புரியுதே என்று பாடினால் போதும். சக்ரபாணி எந்த படத்திலும் நன்றாக நடித்து நான் பார்த்ததில்லை. சொந்தப் படத்திலும் சொல்லிக்கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. தேறுவது பானுமதி ஒருவர்தான். எம்ஜிஆரை தான் கிழவி என்று சொல்லி கலாய்ப்பதாகட்டும், காடு விளைஞ்சென்ன மச்சான் என்று கேட்பதாகட்டும், நன்றாக ஈடு கொடுத்து நடிக்கிறார்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடி படத்தை வியாபிப்பவர் சுப்பையா நாயுடு. என்ன மணி மணியான பாட்டுகள்!
காடு விளைஞ்சென்ன மச்சான்தான் படத்தில் டாப். என்ன அருமையான வரிகள்! சும்மா கிடந்த நிலத்தை கொத்தி சோம்பலில்லாம பாடுபட்டு என்று ஆரம்பிக்கும்போதே களை கட்டிவிடுகிறது. நாட்டுப்புற மெட்டின் இனிமையே தனிதான். பட்டுக்கோட்டை கலக்குகிறார்!
மானைத் தேடி மச்சான் வரப் போறான் கலக்கலான இன்னொரு பாட்டு.
தூங்காதே தம்பி தூங்காதே புகழ் பெற்ற பாட்டு. நல்ல வரிகள். பட்டுக்கோட்டை புகுந்து விளையாடுகிறார். கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான் கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் – அருமை!
அவ்வளவாக தெரியாத இன்னொரு பாட்டு சம்மதமா உமக்கு சம்மதமா. பானுமதி மிக அருமையாக பாடி இருப்பார்.
சாதாரணமாக சீர்காழியின் குரல் எம்ஜிஆருக்கு பொருந்தவே பொருந்தாது. ஆனால் உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா பாட்டில் மிக நன்றாக பொருந்தி இருக்கும். அது என்ன மாயமோ தெரியவில்லை.
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே ஹை பிச்சில் (லீலாவா?) பாடும்போது அம்மாடி, பாத்தும்மா என்றுஒரு பயம் வரும்!
சந்திரபாபுவுக்கு தடுக்காதே என்னை தடுக்காதே என்று ஒரு பாட்டு.
படத்தின் மூன்றாவது ஹீரோ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான். மனிதர் பிரமாத ஃபார்மில் இருந்திருக்கிறார்.
நாடோடி மன்னனுக்குப் பல்வேறு வெளியீட்டு நாள்கள் அறிவிக்கப்பட்டன. அறிவிக்கப்பட்ட நாள்களில் அப்படத்தை வெளியிடவே முடியவில்லை. எதைப் பற்றியும் கவலைப்படாமல் தமக்குத் தோன்றியவாறெல்லாம் காட்சிகளை மாற்றி மாற்றி எடுத்துக்கொண்டிருந்தார் எம்ஜிஆர். வேறு படங்கள் அனைத்தையும் எம்ஜிஆர் ஒத்தி வைத்திருந்தார். அப்போது படச்சுருளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவியது. ஒரு சுருளின் உண்மை விலை எழுபத்தைந்து உரூபாய் என்றாலும் அது கறுப்புச் சந்தையில் நானூற்றைம்பது வரை விற்பனையாயிற்றாம். இப்படிப் பல்வேறு முனைகளில் செலவு கூடிக்கொண்டே போனது. அதனால் படத்தயாரிப்புக்குப் போதிய பணத்தைப் புரட்டவே முடியவில்லை. படச்சேர்ப்பனை முறைகளில் பல்வேறு வணிக உத்திகளைக் கையாண்டு நிலைமையை ஓரளவுக்குச் சமாளித்தார் வீரப்பன்.
எம்ஜிஆர் கணக்கு பார்க்காமல் பணத்தை செலவழித்திருக்கிறார். மாளிகைகள், தீவு, கழுகு குகை, இடிந்து விழும் பாலம், குகையில் தண்ணீர் நிரம்பும் காட்சி என்று மிக அருமையாக செட் போட்டிருக்கிறார்.
பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரத்தை எம்ஜிஆரிடம் அழைத்து வந்தவரும் வீரப்பன்தான். மூத்த இயக்குநர் கே. சுப்பிரமணியத்தின் அலுவலகத்திற்குச் சென்றிருந்தபோது அங்கே தரையிலமர்ந்து பட்டுக்கோட்டையார் ஒரு பாடலைப் பாடிக்காட்டிக் கொண்டிருந்தாராம். "வீரப்பா... இவரை நல்லாப் பார்த்துக்க... அருமையாகப் பாட்டெழுதுகிறார்," என்று அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். அங்கே பட்டுக்கோட்டையார் பாடிக்காட்டிய "காடு வெளஞ்சென்ன மச்சான்..." என்ற பாடல் வீரப்பனுக்குப் பிடித்துப் போயிற்று. அவரை அழைத்து வந்து எம்ஜிஆரிடம் அறிமுகப்படுத்தி வைக்க, அப்பாடல் நாடோடி மன்னனில் இடம் பெற்றது.
இப்படிப் பல்வேறு சிக்கல்கள் பிய்த்தல்களுக்கு நடுவே ஒருவழியாக 1958ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் 22ஆம் நாள் நாடோடி மன்னன் வெளியானது. திரையிட்ட இடமெங்கும் கூட்டம் குவிந்தது. படம் வெற்றி பெற்றது. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நாடோடி மன்னன் பெற்ற இடத்தை இன்னொரு படம் இதுகாறும் பெறவில்லை என்பதே உண்மை.

 

Natesan Natesan 
 

Leave a comment

Comment