TamilsGuide

இது தான் விதியின் விளையாட்டா?.தெரியவில்லை.ஆனால் நடிகையர் திலகம் நமக்கொரு பாடம்.

மேரி மாதாவின் படத்திற்கு முன்பாக ஒரு மெழுகுவர்த்தி தன்னைக் கரைத்துக்கொண்டிருக்கிறது.அந்த அறையின் மெல்லிய ஒளியில் ஒடுங்கிக் கிடக்கிறது ஒரு உருவம்.ஒட்டிக் கிடக்கும் கன்னங்களில் வழிந்தோடிய மெல்லிய நீர்க் கோடு விட்டுச் சென்ற தடம் தெரிகிறது.காலையில் தன்னைத் தேடி வந்த மகளைக் கண்ட கண்ணீரின் மிச்சம் இன்னும் உள்ளே இருக்கிறது.உற்று நோக்கினால் மூடிய கண்களில் விழிகள் அங்குமிங்கும் ஓடுவது தெரிகிறது.அவை எதையோ தேடுகிறது.ஒரு வேளை காலையில் வந்து போன தனது பேரனைத் தேடலாம்.அது சென்னையின் லேடி வெலிங்கடன் மருத்துவமனையின் ஒரு சாதாரண அறை.கால தேவன் கசக்கிப்போட்ட பழைய பேப்பராகக் கிடக்கும் அந்த உருவம் ஒரு காலத்தில் தென்னக சினிமாவை ஆட்டிப் படைத்த நடிகையர் திலகம் என்றால் நம்புவது கொஞ்சம் கடினம்.கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே!..சுழன்றாடிய கால்களில் சுத்தமாக சக்தியில்லை.மெலிந்த கால்கள் மெல்ல அசைகிறது.கிட்டத்தட்ட ஒரு வருடமாக படுக்கையில் கிடக்கும் அந்த நட்சத்திரத்தை திறந்து கிடக்கும் ஜன்னல் வழியாக தென்றல் நுழைந்து மெல்ல தலை வருடிச் செல்கிறது.அதிக நேரம் அங்கிருக்க நமக்கும் பிடிக்கவில்லை.நமது நினைவுகள் பின்னோக்கி ஓடுகிறது.

சினிமா என்ற சாதனத்தின் வாயிலாகத் தான் நமக்கு சாவித்திரி என்ற அற்புத மனுஷி அறிமுகம்.எத்தனையோ நட்சத்திரங்கள் நம்மை ஆக்கிரமிக்க இவர் மட்டும் ஏன் நம்மை என்னவோ செய்கிறார்.அவருக்குக் கிடைத்த கோர முடிவா?. தென்றலாக நுழைந்து நம் சிந்தையில் கலந்து நமது கவலைகளை மறக்கச் செய்த சாவித்திரி இன்னும் கொஞ்ச காலம் இருந்திருக்கலாமோ என்ற ஆதங்கமா? . எப்படியிருந்தாலும் அவரது இழப்பு இன்றும் பேசப்பட காரணம் என்ன?. ஒருவன் வீழ்ந்துவிட்டால் சுற்றி நின்று ஏளனம் பாடுவோர் மத்தியில் விழுந்த இந்தப் பெண்ணிற்காக இன்றும் சோகமாகிறது ஒரு கூட்டம்.அது சொல்லும் சேதி அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு நல்ல நடிகை என்பதையும் தாண்டி விட்டுச் சென்ற நினைவுகளில் ஒரு நல்ல மனுஷியாக இருந்தார் என்பது தான்.தமிழ்த் திரையுலகம் நடிப்பிற்காக ஒரே ஒருவருக்குத்தான் அங்கீகாரம் அளித்தது.அது சாவித்திரி ஒருவருக்குத்தான். நடிகையர் திலகம் என வாயார வாழ்த்திய தமிழக ரசிகர்களைத் தாண்டி அவரது தாய் மொழி ரசிகர்கள் மகா நடி என கொண்டாடக் காரணம் தேடிப் புறப்பட்டால் அது நீண்டதொரு வரலாற்றை நமக்குக் காட்டும்.நமக்கு அவர் அறிமுகமானது ஐம்பதுகளின் ஆரம்பத்தில்.
நடிகயர் திலகம் பிறப்பு வளர்ப்பு பற்றி நிறையவே பார்த்துவிட்டோம்.அவர் சென்னை மண்ணை மிதித்த 1949 லிருந்து தேடினால் அவரது பெரியப்பா சௌத்ரி கையைப் பிடித்து அழைத்து வந்ததிலிருந்து தான் நமக்கு அறிமுகம். அக்னி பரீட்சா என்ற படத்திற்கு வாய்ப்புக் கேட்டு இருவரும் இங்கே இறங்கினார்கள்.மேக்கப் டெஸ்ட் எடுத்ததில் உதட்டைச் சுழித்தார்கள்.ஆயிரம் கனவுகளுடன் வந்தவர்கள் அப்செட்டாக நீங்க முதலில் ஒரு ஆல்பம் போடுங்க என்றார்கள்.கைராசிக்காரரான நாகராஜராவை கை காட்டினார்கள்.மெலிந்த உடல் இன்னும் மெச்சூரிட்டியை காட்டவில்லை.ஆனால் அந்தக் கண்களை கேமிரா வழியாக பார்த்த ராவிற்கு ஆச்சரியம். உருண்டை விழிகளில் ஓடிய ஜாலங்கள் இந்தப் பெண் வெற்றி பெறுவாள் என்று சொல்லியது.அவர் நினைத்தது தான் நடந்தது.சம்சாரம் படத்திற்காக அந்தப் பெண் புக் செய்யப்பட்டார்.சரசவாணி என்ற இயற்பெயர் கொண்ட சாவித்திரி திரையில் சரசமாட சட்டென தெலுங்குப் பட உலகம் விழித்துக்கொண்டது.
குண்டூர் மாவட்டம் சிறாவூர் என்ற சிறிய கிராமத்திலிருந்த குருவைய ரெட்டி ஒரு அப்பாவி.தனது மனைவி சுபத்ரம்மாவின் சகோதரியை மணந்த சௌத்ரி கொஞ்சம் விபரமானவர்.சாவித்திரிக்கு காட் ஃபாதர் சௌத்ரி தான்.அவரைத் தாண்டி எவரும் சாவித்திரியை நெருங்க முடியாது.ஆனால் ஒருவர் நெருங்கினார்.அவர் தான் நமது காதல் மன்னன்.முதன் முதலாக சாவித்திரி அவரைச் சந்தித்தது மனம் போல் மாங்கல்யம் செட்டில் தான்.ஒய்ட் அண்ட் ஒய்ட்டில் ஸ்மார்ட்டாக வந்த மன்னனை புல்லைய்யா அறிமுகப்படுத்தினார்.தெலுங்கில் உன் ஹீரோவை பார்த்துக்கோ என்றவுடன் ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு ஏற்பட்டது என்னவோ உண்மை தான்.ஒரு சின்ன ஹலோவோடு மன்னன் கடந்து போக ஆர்வம் இன்னும் அதிகமானது.ஏற்கனவே சௌத்ரி ஜெமினி ஸ்டுடியோ வந்திருக்கிறார். வாய்ப்பிற்காக கூட்டிக்கொண்டு வந்து இவரிடம் காட்டியது இப்போது நினைவிற்கு வந்தது.சின்னப் பொண்ணா இருக்கா ஆனா ஃபியூச்சர்ல ஹோப் இருக்கு என கணித்தவரும் இவர் தான்.இந்தப் பெண் தான் தெலுங்கு போய் சம்சாரம் பெல்லி சேசி சூடு தேவதாஸ் என மளமளவென உயர்ந்துவிட்டார். இரண்டு படங்கள் தமிழில் வெளியாகி இங்கும் ஹிட்.வஞ்சம் பரோபகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது.அதிலும் தேவதாஸ் இங்கே அவருக்கு நல்ல அறிமுகத்தை தந்த படம்.


பெல்லி சேசி சூடு தமிழில் கல்யாணம் பண்ணிப் பாராக வெளியாகி நல்ல அறிமுகத்தை தந்திருந்தது. ரங்காராவிற்கு மகளாக இதில் சாவித்திரி அருமையாக நடித்திருந்தார்.எல். வி.பிரசாத் தான் இதன் இயக்குநர்.அவரது கைபட்டதும் நடிப்பு தானாக வந்தது.சூடம்மா சூடம்மா என சொல்லிக்கொண்டே சாவித்திரியை புடம்போட்டது அவர் தான்.விநோதா பிக்சர்ஸ் எடுத்த தேவதாஸ் எனும் அற்புதத்தை இயக்கியது வேதாந்தம் ராகவைய்யா.நல்ல டான்ஸரான அவர் தான் சாவித்திரிக்கு நளினங்களை கற்றுத் தந்தது.அந்த பார்வதியின் மருண்ட விழிகளில் மயங்கிய தேவதாஸை அவர் அழகாக கையாண்டார்.இதோ மனம் போல் மாங்கல்யத்தில் புகழ் பெற்ற புல்லையா.வெறும் களி மண்ணை அருமையான கலையாக மாற்றும் வித்தை திறமையான குயவனுக்கே சாத்தியம்.சாவித்திரிக்குக் கிடைத்த குயவர்கள் திறமையானவர்கள்.எங்கே தட்டினால் இந்தப் பெண் பக்குவமாகும் என்ற வித்தை தெரிந்த குயவர்கள்.37 லிருந்து இங்கே குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறார் புல்லைய்யா.அவர் தான் நாராயணன் கம்பெனியாரிடம் சாவித்திரியைப் பற்றிச் சொன்னது.மனம் போல் மாங்கல்யத்தில் ஜெமினிக்கு டபுள் ரோல்.ஒரு ஜெமினிக்கு சுரபி பாலசரஸ்வதியை புக் பண்ண இன்னொரு கேரக்டருக்கு சாவித்திரியை அவர் ரெகமண்ட் செய்தார்.ஏன்டா செய்தோம் என அவர் நொந்தது வேறு விஷயம்.

தெலுங்கு சரளமான அளவிற்கு தமிழ் பிடி கொடுக்க மறுத்தது சாவித்திரிக்கு.அதை சரி செய்வதில் தொடங்கியது இருவருக்குமான நட்பு.ஏற்கனவே புஷ்பவல்லி ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க கலகலப்பான இந்த கேரக்டர் எந்தப் பெண்ணுக்குத் தான் பிடிக்காது.தான் இருக்கும் இடத்தை ஒரு பூங்காவாக மாற்றுவதில் வல்லவர் ஜெமினி.அங்கிருக்கும் அத்தனை பூக்களும் கலகலப்பாக வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்.ஒளிவு மறைவு இல்லாதவர்.உள்ளதை பளிச்சென பேசும் குணம்.சிறு வயதில் தந்தையை இழந்த சாவித்திரிக்கு அந்த பேச்சு பிடித்ததில் ஆச்சரியம் இல்லை.வேண்டுமென்றே சீண்டிவிட்டு அவரை கோபப்படுத்துவதில் ஒரு ஆனந்தம்.அதுவே அவருக்கு அரவணைப்பானது.அடப்பள்ளி ராமாராவ் போட்ட மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய் பாட்டில் ஏதோ ஒரு சுகம் இருந்தது.அதுவே வளர்ந்து ஒரு இடி மழையுடன் கூடிய பேய் மழை நள்ளிரவில் ஜெமினி வீட்டுக் கதவையும் தட்ட வைத்தது.

கிசுகிசுவாக பவனி வந்த காதல் ஊரரறியச் செய்வதற்கு முன்பாக இருவரும் பல படங்களில் ஓடி ஓடி காதலித்தார்கள்.உருகி உருகி அழுது தீர்த்தார்கள்.53 தீபாவளிக்கு வெளியான மனம் போல் மாங்கல்யத்திற்குப் பிறகு இருவருமே பிஸியானார்கள்.மாடர்ன் தியேட்டர்ஸின் சுகம் எங்கே படத்தில் நடிப்பிசை புலவரோடு சாவித்திரி ஜோடியானார்.மன்னர்கள் இசையில் அருமையான பாடல்கள் இருந்த படம்.ஏ.வி.எம் எடுத்த செல்லப் பிள்ளை தெலுங்கில் நூறு நாட்கள் ஓடிய வதிரையின் மறு பதிப்பு.55ல் இந்தப் படம் வெளியாக அதே ஆண்டு ஏகப்பட்ட தமிழ் தெலுங்கு படங்கள் அவருக்கு புக்கானது.சௌத்ரி 555 இல்லாமல் வெளியேறமாட்டார்.சில்க் ஜிப்பா சகிதம் மைனராக அவர் மாற சாவித்திரி பணம் காய்க்கும் மரமானார்.நாகிரெட்டி எடுத்த குணசுந்தரி இரு மொழியில் ஹிட்.தமிழில் ஜோடி ஜெமினி தான்.மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் டி.ஆர்.ரகுநாத் இயக்கிய மகேஸ்வரியும் ஹிட்.அதே ஆண்டு எல்.வி.இயக்கிய மிஸ்ஸியம்மா படு ஹிட்.எஸ்.ராஜேஸ்வரராவ் அடித்த அத்தனை பாடல்களும் இரு மொழியில் ஹிட்.தெலுங்கில் இரு ஸ்டார்களான என்.டி.ஆர்.நாகேஸ்வரராவ் ஜோடியாக இருந்தார்கள்.டைட்டிலே சாவித்திரிக்காகத் தான்.மேரி மகாலட்சுமி என அவர் இதில் அசத்தினார்.தமிழில் அத்தனை பாடல்களும் ஹிட்.அடுத்தடுத்த ஆண்டுகளில் சாவித்திரியின் கால்ஷீட் நிரம்பி வழிந்தது.

தாகூரின் கதையான மாதர் குல மாணிக்கத்தில் தொடங்கி அமர தீபம் பெண்ணின் பெருமை என அந்த 56 ல் தமிழை விட தெலுங்கில் அவர் பிஸி. டி.பிரகாஷ் ராவ் இவரை மாதர் குல மாணிக்கத்தில் அருமையாக இயக்கியிருந்தார். பி.புல்லைய்யா பெண்ணின் பெருமையில் அருமையான கேரக்டர் தந்திருந்தார்.இருவருமே புகழ் பெற்ற இயக்குநர்கள்.அமர தீபத்தில் நடிகர் திலகத்தை காதலித்து எல்லாவற்றையும் மறந்து அவரைத் தேடும் சாவித்திரி.ஸ்ரீதரின் ஸ்கிரிப்ட். அக்கினேனியுடன் ஹிட்டான ஆர்தாங்கி தெலுங்கு தான் பெண்ணின் பெருமை.இவற்றை விளக்கக் காரணம் சாவித்திரியின் ஆரம்பக் காலங்கள் தான் அவரது பிற்கால வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது.பணம் புகழ் அந்தஸ்து என ஐம்பதுகளில் அவரது ஆரம்ப வாழ்க்கை தான் அறுபதுகளில் அவருக்கு உதவியாக இருந்தது.மக்கள் திலகத்துடன் மகாதேவி வாஹினியின் மாயா பஜார் நரசு பிக்சர்ஸின் இரு சகோதரிகள் ஜூபிடரின் கற்புக்கரசி நடிகர் திலகத்துடன் வணங்காமுடி ராமண்ணா எடுத்த காத்தவராயன் பாரகன் பிக்சர்ஸ் இஸ்மாயில் எடுத்த அன்னையின் ஆணை பீம்சிங் பா வரிசையில் தொடங்கிய பதிபக்தி எல்லாமே ஐம்பதுகளில் தான்.

கொஞ்சம் கணக்குப் போட்டுப் பார்த்தால் ஐம்பதுகளில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் சாவித்திரி என்ற மகத்தான நடிகை சம்பாதித்த பணமும் புகழும் கொஞ்ச நஞ்சமல்ல.வேறு எந்த நடிகைக்கும் இந்த அளவிற்கு கிடைக்காத பாக்கியம்.எல்லாமே அவரது திறமைக்குக் கிடைத்த வெற்றி.நமக்குத் தெரிந்த சாவித்திரி அறுபதுகளில் தான் விஸ்வரூபம் எடுக்கிறார்.60 ல் ஏ.வி.எம்.எடுத்த களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கி குறவஞ்சி, பாசமலர், பாத காணிக்கை , பார்த்தால் பசி தீரும், படித்தால் மட்டும் போதுமா, காத்திருந்த கண்கள், கொஞ்சும் சலங்கை, பந்த பாசம், கற்பகம், பரிசு, ரத்தத் திலகம் , நவராத்திரி, ஆயிரம் ரூபாய், கை கொடுத்த தெய்வம், கர்ணன், வேட்டைக்காரன், திருவிளையாடல், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், பூஜைக்கு வந்த மலர், என அறுபதுகளில் அவர் வந்து நின்ற படங்கள் தான் அவரை நடிகையர் திலகம் என்ற அந்தஸ்தை அளித்தது.இருபது ஆண்டுகள் முழுமையாக இந்தத் திரையுலகை அவர் ஆக்கிரமித்திருந்தார்.

வேறு எந்த நடிகையிடமும் இல்லாத சிறப்பாக சாவித்திரியிடம் நாம் காண்பது அந்த குழந்தைத்தனம்.அது அவரது இயல்பான குணம்.மொத்த உணர்வுகளையும் முழு மதியான அந்த முகத்தில் அவரால் கொண்டு வர முடிந்தது.பரந்து விரிந்த முகத்தில் பார்க்குமிடமெல்லாம் உணர்வுகளின் குவியல்கள்.புருவங்களைத் தூக்கி நெற்றியை அவரால் ஆட்ட முடிந்தது.முன் தலை தனியாக அவரிடம் ஆடியது.நாகராஜராவ் சொன்னது போல் கருவிழிகள் இரண்டும் கவி பாடியது.ஆனந்தத்தை அள்ளி வழங்கியது .சோகத்தில் நம்மையும் சேர்த்து அழ வைத்தது.எந்த நடிகையிடமும் விளையாடாத அதரங்கள் இவரிடம் விளையாடியது.முகத்தைச் சுளித்தால் அவைகள் முடங்கின.மேலுதடை உள்ளிழுத்து கீழுதடை வெளியேற்றி அசாத்திய எக்ஸ்ப்ரஷன் அவருக்கு மட்டுமே வந்தது.சிருங்கார ரஸத்தை அவர் உதடுகளில் காட்டினார்.பாடல் காட்சிகளில் இவரளவிற்கு மொத்த உடல் மொழியிலும் வித்தை காட்டிய நடிகைகள் குறைவு தான் .வேட்டைக்காரனில் வந்த மஞ்சள் முகமே வருக பாடலை மட்டும் ஆய்விற்கு எடுத்தால் சாவித்திரி என்ற மகத்தான நடிகையின் திறமை புரியும்.மக்கள் திலகத்துடன் ஏற்கனவே அறிமுகம் என்றாலும் தேவர் பிலிம்ஸிற்கு அது தான் புதிது.அவரது அருமைத் தம்பி ஆரூர்தாஸ் மொழியில் கேட்டால் இன்னும் அழகு.கசகசவென சந்தைக் கடையாட்டம் அந்த செட்.கத்தித் தீர்க்கும் தேவர்.எல்லாமே அவருக்குப் புதிது.என்ன தாஸ் இது?. அண்ணீ இங்க இப்படித்தான்.ஆனா தேவரய்யா தங்கமானவரு.ஆமாம்மா!.. ஆனா செட்டு இப்படியிருக்கே.தேவர் அடுத்த படத்திற்கும் சேர்த்தே செட்டில் செய்திருந்தார்.சின்னவரு வர லேட்டானதால் கிடந்து குதிக்கிறார்.அவரும் வந்த மளமளவென மேக்கப் போட்டு ரெடி ஸ்டார்ட் ஆக்ஷன்.விற்றென கேமிரா ஓட வழக்கம் போல் முதல் ஷாட்.வெற்றி!.. வெற்றி!.. மனோரஞ்சிதம் இந்த நாள் வாழ்க முடிந்து வருகிறது இந்த மஞ்சள் முகமே வருக.எம்.ஜி.ஆரே அசந்து போகும் எக்ஸ்ப்ரஷன்.கொஞ்சும் தமிழே வருக கோடானு கோடி தருக.அவர் தரும் வெட்கமாகட்டும் ஆண் மகன் சீண்டலின் சிலிர்ப்பாகட்டும் மயக்கமாகட்டும் கிறக்கமாகட்டும் நடுக்கமாகட்டும் வார்த்தைகளில் வடிக்க முடியாத ஃபீலிங்.ஷாட் பை ஷாட் தான்.சந்தைக் கடையான செட்டில் கதறியழுவது கூட சாத்தியம் தான்.ஆனால் அத்தனை ஆண்களுக்கு மத்தியிலும் இப்படி சிருங்கார நடை போட சத்தியமாக கொஞ்சம் திறமை வேண்டும்.

நடிகர் திலகத்தைப் போலவே நடிகையர் திலகமும் நடிப்பில் ராட்ஸஸி.மலர்ந்தும் மலராத பாதி மலராக அவர் விழி நிறைய வந்து நின்ற காட்சிகளில் ஒரு வேள்வியே நடத்தியிருப்பார்.பீம்சிங் வைத்த ஒவ்வொரு ஆங்கிளிலும் அவர் வெளுத்து வாங்கினார்.தங்க கடிகாரம் வைர மணியாரம் தந்து விலை பேசுவார் மாமன் தங்கை மகளான மங்கை உனக்காக..அந்த சிதாரின் நரம்பு அழும்போது சாவித்திரி கண்ணிலிருந்து ஒரு சொட்டு மட்டும் அப்படியே வெளியே வந்து விழும்.கண்ணீரை விடுவது எளிது.தேக்கி வைப்பது கடினம்.இந்த இடத்தில் விழ வேண்டுமென்றால் அங்கு தான் விழும்.சின்னஞ்சிறு கண் மலர் செம்பவள வாய் மலர் என்ற பதி பக்தி பாடலில் அந்த முகத்தில் வழிந்தோடிய சோகத்தை வடிக்க வார்த்தைகள் இல்லை.எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டுச் சென்றானடி இன்று வேறுபட்டு நின்றானடி என அங்குமிங்கும் நடை போட்ட கால்களில் சோகத்தை கொண்டு வந்து குவித்திருப்பார்.அதே தள்ளாடும் கால்கள் விரக தாபத்தில் தளிர் நடம் புரிந்தது நீல சேலை கட்டிக் கொண்ட சமுத்திரப் பொண்ணில் .அலை மோதும் கரையோரம் ஒரு நடை நடப்பார்.யாரைக் காணத் துடிக்கிறயோ கரையிலே நின்னு .அலைக்குச் சொல்வது போல் அவரே தேடுவார். இன்பம் பிறந்த பின்பும் உன் துடிப்பு அடங்களையா?. ஏ.பி.என்.இங்கு ஒரு க்ளோஸப் தருவார்.அடடா!.. அந்த பெண்மையின் துடிப்பை அப்படியே காட்டுவார்.ஏங்கி ஏங்கி தவிக்குடி இன்பத்தை அள்ள.கவிஞரின் வரிகள் இங்கே இவரால் காவியமாகியிருக்கும்.ஏலே...லோ...இசையரசி குரலை அப்படியே உள் வாங்கியிருப்பார்.

ஹலோ மிஸ்டர் ஜமீன்தாரில் முத்தையா குழலெடுக்க இவரது இளமை கொலுவிருக்கும் இயற்கை மனமிருக்கும் பருவத்தை அவ்வளவு அழகாக காட்டுவார்.காத்திருந்த கண்களில் வா என்றது உருவம் என அழைத்து நீ போ என்றது நாணம் தொடங்கி ஒவ்வொரு உணர்வுகளுக்கும் உயிர் கொடுத்திருப்பார்.பாரதிராஜா படத்தில் நாயகி இரு கைகளால் முகத்தை மூடி விரலிடுக்கில் பார்ப்பாரே அதை அப்போதே காட்டியவர் சாவித்திரி.இனி வருமோ இல்லையோ உறக்க்கம்...படபடவென பட்டாம் பூச்சியாக இமைகளை அடிக்க அசத்தலாக பிறக்கும் அங்கொரு கவிதை.அந்தப் புரமொன்று இருப்பதை அறியான்.இன்னொரு கவிதை.என்னுயிர் தோழி கேளொரு சேதி இது தானோ என குற்றப் பத்திரிகை வாசிக்க கூடி நின்ற தோழிகளை விட நமக்குத் தான் சோகம்.அதே சோகம் குடும்ப கலை போதுமென்று கூறடா கண்ணாவில்.அவரைவிட்டால் எனக்கு வேறு யாரடா கண்ணா நான் அடைக்கலமாய் வந்தவள் தான் எனும்போது அவர் தரும் எக்ஸ்ப்ரஷன் அத்தனையும் உண்மை.ஜாலியான சாவித்திரியை பார்க்க வேண்டுமே.
குலுங்க குலுங்க சிரிக்கும் சிரிப்பில் இவரொரு பாப்பா.யப்பா அப்படியொரு சிரிப்பு.குறும்பு விழியில் கரும்பு மொழியில் அந்த பாப்பாவைப் பார்க்க நமக்கும் குதூகலம்.கோகிலா என்ற அந்த கேரக்டரை யாரும் தொடவே முடியாது.அப்படி செதுக்கியிருப்பார் கே.எஸ்.ஜி.பாவம் ரங்காராவ் அவரை படாதபாடுபடுத்துவார்.வெகுளிக்கு இலக்கணம் வேண்டுமா?. க்ளைமாக்ஸில் சிவாஜி காணாமலேயே போயிருப்பார்.அதே கே.எஸ்.ஜி.தான் ஆனாக்க அந்த மடம் ஆகாட்டி சந்தை மடத்தில் அப்படி ஆட விட்டிருப்பார்.அதுவுங் கூட இல்லாங்காட்டி என கையிலுள்ள அந்த சின்ன டேப் அசால்டாக அடிக்கப்படும் அழகு யாருக்கு வரும்?. தோளை ஒரு உலுக்கு உலுக்கி மச்சு குச்சு எல்லாம் மனசுதான்டா எனும்போது மகத்தான மகா நடி மெல்ல எட்டிப் பார்ப்பார்.

வாழ்க்கைச் சோலையிலே பட்டுப் போன மரமா நிக்கிற எனக்கு ஒரே துணை நீங்கதாம்பா!.. நீங்களும் விட்டு போயிடாதீங்கப்ப்பா.களத்தூரின் கண்ணம்மா அப்பா சுப்பையாவிடம் கெஞ்ச இல்லம்மா நீ அநாதை ஆகமாட்டே.உன் குழந்தை உயிரோடு தான் இருக்கு.எங்கப்பா?. யாரப்பா என் கொழந்தை?. நொடிப் பொழிதில் அந்த சோகம் மறைந்து அந்த கண்கள் ஆர்வத்தை அப்படியே வெளிப்படுத்தும்.சொல்லுங்கப்பா!.. செல்வமா?. என் மகனா?. விரைந்தோடும் சாவித்திரி அசத்தியிருப்பார்.கமலை முதன் முதலில் செட்டில் பார்த்தவுடன் இது யாரு?. ஒரு புது... முகம்.தூக்கிக் கொஞ்சியதை கமல் அடிக்கடி நினைவு கூறுவார்.நெற்றியை அசைப்பதை அவர் தான் எனக்கு கற்றுத் தந்தார் என ஒரு தெலுங்கு பேட்டியில் ஜெயப்பிரதாவிடம் சொன்னார்.சாவித்திரியை பேசத் தொடங்கினால் நாட்கள் போறாது.எல்லோரும் சொல்வது போல் ப்ராப்தம் மட்டுமே அவரை படுகுழியில் தள்ளவில்லை.அதற்கு முன்பே அவர் அருமையான படங்களை இயக்கியிருக்கிறார்.அவை வெற்றியும் பெற்றிருக்கின்றன.மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் அதிகமானது அவர் சிரஞ்சீவி என்ற படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது தான்.பிரபல நடிகையோடு கணவருக்குத் தொடர்பா என்ற கவலையில் அவரால் ஒழுங்காக படமெடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

பெண்களுக்கு எப்போதுமே கணவன் தனக்கு மட்டும் தான் என்ற பொஸஸிவ் அதிகம்.அதில் தவறும் இல்லை.ஆனால் ஒரு பாப்ஜியைப் போல எத்தனை பெண்களால் இருக்க முடியும்?. காதலுக்குத் தேவை நம்பகத்தன்மை.அந்த நம்பிக்கையை சிலர் எல்லோரிடமும் விதைத்தால் தான் பிரச்சனை.சில நேரங்களில் அவை ஆத்திரங்களாக வெடிக்கும்போது உறவுகள் சிதைகிறது.வாழ்க்கை உருக்குலைந்து போகிறது.அப்படிப் போன வாழ்க்கையில் சாவித்திரியும் போய் சிக்கிக்கொண்டது தான் சோகம்.அருமையான ஒரு நடிகையின் அந்திமக் காலங்கள் அனைத்து தரப்பையும் சோகத்தில் ஆழ்த்தியது.பெங்களூரில் மயக்க நிலைக்குப் போய் திரும்பி வந்த சாவித்திரியை அடிக்கடி சந்தித்த லட்சுமி சொல்கிறார் அந்த நிலையிலும் அவர் குழந்தையாகவே இருந்தார் என்று.ஐஸ்கிரீம் வண்டி சத்தம் கேட்டதும் ஏய்!.. எனக்கொன்னு வாங்கிக் கொடுங்கடி என கெஞ்சிய சாவித்திரி.அம்மா டாக்டர் திட்டுவாரு!.. அடி போங்கடி!.. என சலித்துக்கொண்ட சாவித்திரியை பார்க்க பாவமாக இருந்தது என்கிறார். இன்னும் என்னென்ன ஆசைகளை மனதில் புதைத்து வைத்திருந்தாரோ?. இல்லையென்று வந்தவர்க்கு அள்ளி அள்ளித் தந்த கரம் தான் ஆசைப்பட்டபோது அனுபவிக்க முடியவில்லை.இது தான் விதியின் விளையாட்டா?.தெரியவில்லை.ஆனால் நடிகையர் திலகம் நமக்கொரு பாடம்.

Abdul Samath Fayaz

 

Leave a comment

Comment