TamilsGuide

ஆஸ்கர் விருது போட்டிக்கு தேர்வான HOME BOUND படத்தின் மீது கதைத் திருட்டு குற்றச்சாட்டு

98வது ஆஸ்கர் அகாடமி விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15 இல் நடைபெற உள்ளது.இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு HOMEBOUND திரைப்படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் நாமினேஷனுக்கான தகுதிப் பட்டியலில் இப்படம் தேர்வாகியுள்ளது.

கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்படும் 2 இளைஞர்கள் பற்றிய கதையை உயிரோட்டத்துடன் இப்படத்தில் காட்டியுள்ளனர். குறிப்பாக தலித் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் இந்திய சமூகத்தில் எப்படி பாகுபாடோடு நடத்தப்படுகிறார்கள் என்பதை இப்படம் நம் கண்முன் எடுத்துக்காட்டியது.

இந்நிலையில், இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் போட்டிக்குத் தகுதிபெற்ற 'ஹோம்பவுண்ட்' திரைப்படம் மீது கதைத்திருட்டு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான பூஜா சாங்கோய்வாலா, தர்மா புரொடக்ஷன்ஸ் மற்றும் நெட்பிளிக்ஸ் இந்தியா மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பூஜா தனது மனுவில், "அந்தப் படத்தைப் பார்த்தபோது, தயாரிப்பாளர்கள் எனது புத்தகத்தின் தலைப்பைத் தவறாகப் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், படத்தின் இரண்டாம் பாதியில் எனது நாவலின் கணிசமான பகுதிகளை அப்பட்டமாகப் பிரதி எடுத்திருப்பதையும் கண்டுபிடித்தேன். இதில் அதன் காட்சிகள், உரையாடல்கள், கதை அமைப்பு, நிகழ்வுகளின் வரிசை ஆகியவை அடங்கும்" என்று கூறியுள்ளார்.

தர்மா நிறுவனம் தனது புத்தகத்தின் அதே தலைப்பைப் பயன்படுத்தியதன் மூலம் 'அப்பட்டமான ஏமாற்றுச் செயலைச் செய்துள்ளது', இது 'தற்செயலாக இருக்க முடியாது' என்றும் அவர் தெரிவித்தார்.

ஹோம்பவுண்ட் படத்தின் திரைக்கதை 2022-ல் உருவாக்கப்பட்டது. இது அவரது நாவல் வெளியிடப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment