கனடாவில் 26 கிலோ கிராம் எடையுடைய கோகெய்ன் மீட்பு
கனடா
கொலம்பியாவிலிருந்து குளிரூட்டப்பட்ட பழங்கள் (Frozen fruit) ஏற்றிச் சென்ற சரக்கு கண்டெய்னரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 26 கிலோவிற்கும் அதிகமான கோகெயினை பறிமுதல் செய்ததாக கனடா எல்லை சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ட்சாவாசன் (Tsawwassen) கண்டெய்னர் பரிசோதனை நிலையத்தில் இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
குளிரூட்டப்பட்ட பழங்கள் அடங்கிய சரக்கு என அறிவிக்கப்பட்டிருந்த அந்த கண்டெய்னரை சோதனையிட்ட எல்லை அதிகாரிகள், போதைப்பொருள் கண்டறியும் நாய்களின் உதவியுடன், கண்டெய்னரின் மேல்பகுதி (ceiling) பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23 கட்டிகளான கோகெயினை கண்டுபிடித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தற்போது கனடிய பொலிஸாரின் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கனடிய எல்லை சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரை காலப்பகுதியில், கனடிய எல்லை சேவை நிறுவன அதிகாரிகள் 10,000க்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், அதில் 700 கிலோவிற்கும் மேற்பட்ட கோகெயின் அடங்கும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் கனடாவின் எல்லைகளை தொடர்ந்து சோதித்து வருவதாக கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, தெரிவித்துள்ளார்.






















