கலையுலகம் நினைத்துக்கொள்ள வேண்டிய நாள்
சினிமா
இயக்குநர் சிகரம்
கே.பாலசந்தர் அவர்களின்
நினைவு நாள்
கலையுலகம்
நினைத்துக்கொள்ள வேண்டிய நாள்
கூறியது கூறிய சினிமாவை
வேறொரு கோணத்தில்
செதுக்கிக் காட்டிய
செல்லுலாய்ட் சிற்பி
நடுத்தர வர்க்கத்தின் நசிவுகளை,
ஒழுக்கம் வழுக்கும் அசைவுகளை,
இருளின் குறைந்த வெளிச்சத்தை,
அழுக்கின் அழகியலை
பிம்பப்படுத்திய பெருங்கலைஞர்
நகலுக்குச் சிக்காத அசல்
கருப்பு வெள்ளையில்
வானவில் காட்டியவர்
ஒரு கலைஞனின்
ஆகச் சிறந்ததை
அகழ்ந்தெடுக்கும் அறிவாளி
என் சுயமரியாதையைக்
கர்வமென்று கருதி
சிலபேர் என்னை
வளைத்து வளைத்துப்
பழிவாங்கிய காலகட்டத்தில்
கைகொடுத்துத் தூக்கிய
கலைத் தலைவர்
இறந்தவுடன்
வெகுவேகமாக மறக்கப்பட்டவர்
வட்டமோ,
வாழ்க சொல்லும்
வாடகைக் கூட்டமோ,
சாதியப் பாதுகாப்புப்
பெட்டகமோ இல்லாதது
அவருக்குப் பலமும்
பலவீனமும் ஆயிற்று
‘தண்ணீர் தண்ணீர்’
‘சிந்து பைரவி’ இரண்டு போதும்
அவர் பயமற்ற சுயமுற்ற
படைப்பாளி என்று சொல்வதற்கு
வருந்துகிறேன் சார்
நீங்கள் இறந்தீர்கள்;
எனக்கு மயிலாப்பூர் செத்துவிட்டது
நெஞ்சில் வாழ்கிறீர்கள்.
Vairamuthu























