மத்திய அமெரிக்க நாடான ஹொன்டுராஸில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவு பெற்ற வலதுசாரி வேட்பாளரான நஸ்ரி ரிட்டோ அஸ்புரா மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் முன்னிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 30 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றிருந்த போதிலும், வெற்றியாளர் தொடர்பில் உத்தியோகபூர்வமாக இன்னமும் அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் முடிவுகளில் தில்லுமுல்லுகள் நடைபெற்றுள்ளதாகவும், வெளியாட்களின் அழுத்தம் மற்றும் செல்வாக்கு பிரயோகிக்கப்பட்டு உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு உள்ளன.
தற்போது முன்னிலையில் உள்ளதாகக் கூறப்படும் அஸ்புரா, இரண்டாவது இடத்தில் உள்ளதாகச் சொல்லப்படும் சல்வடோர் நஸ்ரல்லாவை விடவும் 42,000 வாக்குகள் முன்னிலையிலேயே இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. விகிதாசார அடிப்படையில் வித்தியாசம் வெறும் 1.32 ஆக உள்ளது. தேர்தல் முடிந்து நான்காவது நாளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த தருணத்தில் நஸ்ரல்லாவே முன்னிலையில் இருப்பதாக முடிவுகள் காட்டிக் கொண்டிருந்தன. அப்போது தேர்தல் திணைக்களத்தின் இணையத் தளம் திடீரென முடங்கிப் போனது. இணையத் தளம் மீண்டும் இயங்கத் தொடங்கிய போது, முதலாவது இடத்தில் இருந்த நஸ்ரல்லா இரண்டாவது இடத்துக்குச் சென்றிருந்தார், இரண்டாவது இடத்தில் இருந்த அஸ்புரா முதலாவது இடத்துக்கு முன்னேறி இருந்தார்.
தேர்தலுக்கு முந்திய கருத்துக் கணிப்பில் அஸ்புரா பின்தங்கிய நிலையிலேயே இருந்தார். ட்ரம்பின் பெரு விருப்புக்கு உரியவராக அவர் உள்ள நிலையில் ஹொன்டுராஸ் மக்கள் அவரையே தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற தொனியில் ட்ரம்பின் அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. தனக்குப் பிடித்தமில்லாத ஒருவர் தேர்தலில் வெற்றி பெறுவாராக இருந்தால், ஹொன்டுராஸ் நாட்டிற்கான அமெரிக்காவின் உதவிகளை நிறுத்தப் போவதாகவும் அவர் அறிவிப்புச் செய்திருந்தார்.
தற்போதைய நிலையில் மூன்றாவது இடத்தில் உள்ள இடதுசாரி லிப்ரே கட்சியின் வேட்பாளர் றிக்ஸி மொன்கடா ஒரு 'கம்யூனிசவாதி' எனத் தெரிவித்த ட்ரம்ப், இரண்டாம் இடத்தில் உள்ள லிபரல் கட்சி வேட்பாளர் நஸ்ரல்லா ஒரு 'எல்லைக்கோட்டில் உள்ள கம்யூனிசவாதி' எனக் கூறியதுடன், தனது விருப்புக்கு மாறான ஒருவர் தேர்தலில் வெற்றிபெற்றால் ஹொன்டுராஸ் மக்கள் பாரிய விலையைச் செலுத்த வேண்டியிருக்கும் எனவும் எச்சரித்திருந்தார். கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளும் ஒருவர் ஜனாதிபதியாகி நாட்டை வெனிசுவேலா போன்று மாற்றுவதை தான் அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
அது மாத்திரமன்றி, தேசியக் கட்சியின் சார்பில் வெற்றிபெற்று ஹொன்டுராஸின் ஜனாதிபதியாகப் பதவி வகித்து, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க சமஷ்டி நீதிமன்றத்தினால் கடந்த வருடம் 45 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த யுவான் ஓர்லன்டோ ஹெர்னான்டஸ் அவர்களை தேர்தலுக்கு ஒரு சில நாட்களின் முன் அதிரடியாக விடுதலை செய்தார் ட்ரம்ப்.
அயல்நாடான வெனிசுவேலாவில் போதைப் பொருள் கடத்தலைக் குறிவைத்து அரசாங்கத்தையே கவிழ்க்கும் அளவுக்கு படைபலத்தைப் பிரயோகித்துவரும் ட்ரம்ப், போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைதாகி 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஒருவரை, எதுவித காரணமும் இன்றி விடுதலை செய்தமை பலத்த கண்டனத்தைச் சந்தித்த அதேவேளை, ஹொன்டுராஸ் வாக்காளர்களுக்கு தேசியக் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்தே ஆகவேண்டிய நிர்பந்தத்தையும் வழங்கியது.
ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகள், அறிவிப்புகள் என்பவற்றுக்கு முன்னதான கருத்துக் கணிப்புகளில் அஸ்புரா மூன்றாவது இடத்திலேயே இருந்தார். ஆனால், ட்ரம்பின் செயற்பாடுகள் ஹொன்டுராஸ் மக்களை குறிப்பாக புலம்பெயர் மக்களை மாற்றி யோசிக்கத் தூண்டியது. தற்சமயம் அமெரிக்காவில் பத்து இலட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர் ஹொன்டுராஸ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தங்கள் எதிர்காலம் தொடர்பிலான அச்சம் அவர்களை யோசிக்கத் தூண்டியதில் தவறில்லை. பிராந்தியத்தின் வறிய நாடுகளுள் ஒன்றாக அறியப்படும் ஹொன்டுராஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 25 விழுக்காடு புலம்பெயர் மக்களின் வருமானத்திலேயே தங்கியுள்ளது. அது மாத்திரமன்றி அமெரிக்கா ஆண்டுதோறும் வழங்கிவரும் 200 மில்லியன் டொலர் கடனையும் இழக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்ற அச்சமும் அவர்களிடத்தே எழுந்ததைப் பார்க்க முடிகின்றது.
ட்ரம்பின் இத்தகைய மறைமுக அழுத்தங்கள் தேர்தல் முடிவில் ஏற்படுத்திய தாக்கங்கள் வெளிப்படையானவை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இத்தகைய செயற்பாடுகளைக் வன்மையாகக் கண்டித்துள்ள நடப்பு அரசுத் தலைவர் சியோமரா காஸ்ட்ரோ ''இது ஒரு தேர்தல் சதி முயற்சி" என வர்ணித்துள்ளார். தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனத் தெரிவித்துள்ள மொன்கடா, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுமாறு தனது ஆதரவாளர்களைக் கோரியுள்ளார். அத்தோடு, தற்போதைய தேர்தல் இரத்துச் செய்யப்பட்டு, மறு வாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ள நஸ்ரல்லாவும் தனது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். தேர்தலுக்கு முந்திய ட்ரம்பின் தலையீடுகள், அச்சுறுத்தல்கள் போன்றவை தேர்தல் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தி உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுகளை உத்தியோகபூர்வமாக வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு டிசம்பர் 30ஆம் திகதி வரை கால அவகாசம் உள்ளது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டாலும், அனைத்துத் தரப்பினராலும் அவை ஏற்றுக் கொள்ளப்படுமா அல்லது முடிவுகளுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவார்களா என்ற கேள்விகள் உள்ளன.
இந்நிலையில். நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதை உறுதிசெய்ய தாங்கள் தயார் என இராணுவம் அறிவித்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு, வெற்றி பெற்றவர் யார் என அறிவிக்கப்பட்டதும், சுமுகமான ஆட்சி மாற்றம் நிகழ்வதை உறுதிசெய்ய இராணுவம் தயார் என இராணுவத் தளபதி ரூஸ்வேல்ட் ஹெர்னான்டஸ் அறிவித்து உள்ளார்.
நவம்பர் 30ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலோடு 128 உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் காங்கிரசுக்கும், 20 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய அமெரிக்கப் பாராளுமன்றத்திற்கும் தேர்தல்கள் நடைபெற்றன. 6,522,577 பதியப்பட்ட வாக்காளர்களில் 3,389,081 பேர் வாக்களிப்பில் கலந்து கொண்டிருந்தனர். 51.96 விழுக்காடு மக்கள் மாத்திரமே வாக்களித்திருந்த இந்தத் தேர்தலில் 40.53 விழுக்காடு வாக்குகளை அஸ்புரா பெற்றார். 39.21 விழுக்காடு வாக்குகளை நஸ்ரல்லாவும், 19.30 விழுக்காடு வாக்குகளை மொன்கடாவும் பெற்றனர். ஜனாதிபதித் தேர்தலில் மொத்தம் ஐந்து வேட்பாளர்கள் போட்டியிட்டு இருந்தனர்.
தேசிய காங்கிரசுக்கான தேர்தலில் தேசியக் கட்சி 49 ஆசனங்களைப் பெற்றுள்ளது. கடந்த முறையை விடவும் 5 ஆசனங்களை இந்தக் கட்சி அதிகமாகப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. லிபரல் கட்சி 41 இடங்களைப் பெற்றுள்ளது. கடந்த முறையை விட இது 19 ஆசனங்கள் அதிகமாகும். மூன்றாவது இடத்தில் உள்ள லிப்ரே கட்சி 35 இடங்களைப் பெற்றுள்ளது. முன்னரை விடவும் 15 ஆசனங்களை இக் கட்சி இழந்துள்ளமை நோக்கத்தக்கது.
மத்திய அமெரிக்கப் பாராளுமன்றத்தில் தேசியக் கட்சி மற்றும் லிபரல் கட்சி ஆகியவை தலா 8 இடங்களையும், லிப்ரே கட்சி 4 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.
95 இலட்சம் மக்கள் வாழும் ஹொன்டுராஸ் இந்தப் பிராந்தியத்தில் உள்ள வறிய நாடுகளுள் ஒன்றாக அறியப்படுகின்றது. உலகளாவிய மனித அபிவிருத்திப் பட்டியலில் 138ஆவது இடத்தில் உள்ள அந்த நாட்டில் 73 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வசித்து வருகின்றனர். 53 விழுக்காடு மக்கள் அதீத வறுமையில் உள்ளதாகவும் பட்டியலிடப்பட்டு உள்ளனர். வறுமையில் இருந்து விடுபடப் போராடும் அந்த நாட்டில் தற்போது எழுந்துள்ள அரசியல் முட்டுக்கட்டை அந்த நாட்டை மேலும் வறுமை நிலைக்கே இட்டுச் செல்லும் என எதிர்பார்க்கலாம். ட்ரம்ப் விரும்புவது போன்று அஸ்புரா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு, ட்ரம்ப் அவருக்கு பொருளாதார அடிப்படையில் மேலும் உதவிகளை வழங்கி நாட்டை முன்னேற்றுவாரா, அல்லது அரசியல் சிக்கல்களால் நாடு மேலும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்லப்படுமா என்பதை எதிர்காலமே தீர்மானிக்கும்.
சுவிசிலிருந்து சண் தவராஜா


