TamilsGuide

கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை - உயிர் தப்பியது குறித்து உருக்கம்

பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி, மும்பையில் நேற்று மதியம் ஒரு கார் விபத்தில் சிக்கினார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள லிங்க் ரோடில், நோரா தனது காரில் 'சன்பர்ன்' இசை நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் அதிவேகமாக காரில் வந்த ஒரு நபர், நோராவின் கார் மீது பயங்கரமாக மோதினார்.

இந்த மோதலின் வேகத்தில் நோரா காரின் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்குத் தூக்கி எறியப்பட்டார். இதில் அவரது தலை காரின் ஜன்னலில் பலமாக மோதியது. அவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட நோரா, "என் கண்கள் முன்னே என் வாழ்க்கை முடிந்துவிடும் என்று நினைத்தேன். இது மிகவும் பயங்கரமான அனுபவம். 2025-ஆம் ஆண்டிலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது குறித்து நாம் பேசிக்கொண்டிருப்பது வருத்தமாக இருக்கிறது. தயவுசெய்து குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வினய் சக்பால் (27) என்ற நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். 
 

Leave a comment

Comment