வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இரண்டு வாரங்களுக்குள் இரண்டாவது முறையாக அமெரிக்கப் படைகள் வெனிசுலா கடற்கரையில் ஒரு எண்ணெய்க் கப்பலை சனிக்கிழமை (20) தடுத்து நிறுத்தின.
தென் அமெரிக்க நாட்டிற்குள் வந்து வெளியேறும் அனைத்து தடைசெய்யப்பட்ட எண்ணெய்க் கப்பல்களையும் முற்றுகையிடுவதாக ட்ரம்ப் அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி வெனிசுலாவின் கடற்கரையில் ஒரு எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியிருந்தன.
இந்த நிலையில் இரண்டாவது எண்ணெய்க் கப்பல் சனிக்கிழமை அதிகாலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வெனிசுலாவில் இறுதியாக நிறுத்தப்பட்டிருந்த செஞ்சுரியஸ் (Centuries) என்ற எண்ணெய் டேங்கரை அமெரிக்க கடலோர காவல்படை பாதுகாப்புத் துறையின் உதவியுடன் தடுத்து நிறுத்தியதாக வொஷிங்டனின் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்று குறித்த கப்பலில் பணியாளர்களுடன் தரையிறக்கும் வீடியோவையும் அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
எனினும், பனாமாவின் கொடியின் கீழ் இயங்கும் அந்தக் கப்பல், அமெரிக்கத் தடைகளின் கீழ் உள்ளதா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.


