21 நாட்களில் 13 நாடுகளை கடந்து செல்லும் உலகின் நீளமான ரயில் பயணம் குறித்து பார்க்கலாம்.
போர்ச்சுக்கல் மற்றும் சிங்கப்பூர் இடையேயான ரயில் பயணம் உலகின் நீளமான ரயில் பயணமாக கருதப்படுகிறது.
போர்ச்சுக்கலின் லாகோஸிலிருந்து தொடங்கி, ஸ்பெயின், பிரான்ஸ், ரஷ்யா, , வியட்நாம் தாய்லாந்து சீனா என 13 நாடுகளை கடந்து சிங்கப்பூரில் முடிவடைகிறது.
பல ஆண்டுகளாக ஐரோப்பாவிலிருந்து தென்கிழக்கு ஆசியாவிற்கு ரயிலில் பயணம் செய்வது சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட நிலையில், ஐரோப்பிய மற்றும் தென்கிழக்கு ஆசிய தேசிய ரயில்வே நிறுவனங்களின் கூட்டு முயற்சி இதனை சாத்தியப்படுத்தியுள்ளது.
சுமார் 18,800 கிமீ நீளமுள்ள இந்த பயணத்தில், மலைகள், பாலைவனங்கள், காடுகள் மற்றும் வெப்பமண்டல நிலப்பரப்புகளைக் கொண்டு கண்டம் விட்டு கண்டம் 21 நாட்கள் பயணிக்கலாம்.
இந்த 21 நாள் ரயில் பயணத்தில், பாரிஸ் , மாஸ்கோ , பெய்ஜிங் மற்றும் பாங்காக் உள்ளிட்ட மொத்தம் 11 முக்கிய நிறுத்தங்கள் உள்ளன.
இந்த நிறுத்தங்கள் பயணிகளுக்கு வெவ்வேறு இடங்கள், தனித்துவமான கலாச்சாரங்கள், உள்ளூர் உணவு வகைகளை அனுபவிக்கவும் வாய்ப்புகளை வழங்குகிறது.
இந்த பயணத்தில் 13 நாடுகளை கடந்து செல்ல பயணிகள் குறைந்த பட்சம் 7 விசாக்களை பெற வேண்டி இருக்கும்.
இந்த பயணத்தின் விலை கிட்டத்தட்ட 1,350 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.1.21 லட்சம்) ஆகும். போர்ச்சுக்கல் மற்றும் சிங்கப்பூர் இடையேயான விமான பயணத்தை ஒப்பிடும் போது இதன் விலை மிகவும் மலிவு ஆகும்.


