TamilsGuide

 எம் ஜி ஆருக்கு இளையராஜா பாடிய பாட்டு

அரசியலிலும் எம் ஜி ஆருக்கு நீண்ட நெடிய அனுபவம் இருந்தலும் அவர் திமுகவில் உயர்வதற்கும் கலைஞரின் அரசியலை எதிர்ப்பதற்கும் பெரும் பலமாக இருந்தது அவரது சினிமா புகழ்தான்.

அந்த சினிமாதான் திமுக வை எதிர்த்து அவர் துவங்கிய கட்சிக்கு கிடைத்த ஆதரவுக்கும் அவர் முதல்வர் ஆனதற்கும் காரணம்.

அவர் முதல்வர் ஆன பிறகும் கலைஞரின் அறிக்கைகளை அரசியல் ரீதியாக சமாளிப்பது அவருக்கு கடினமாக இருந்தது. அதே நேரம் சினிமா மூலம் கலைஞருக்கு பதில் சொல்வது அவருக்கு கை வந்த கலையாக இருந்தது.

எனவே மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார் எம்ஜிஆர். கலைஞருக்கு சவால் விடும் ரீதியில் அதற்கு உன்னை விட மாட்டேன் என்று பெயர் வைத்தார்.

கவிஞர் வாலிக்கு போன் செய்து ராமாவரம் தோட்டத்துக்கு வரச் சொன்னார். வாலி எம் ஜிஆரை சந்திக்க, ” உன்னை விட மாட்டேன் என்ற பெயரில் ஒரு படம் எடுத்து நடிக்கப் போகிறேன். அதற்கு கதை வசனம் எழுதுங்கள். கலைஞரை கடுமையாக விமர்சிக்கும் வகையில் இருக்க வேண்டும்” என்றார். வாலியும் உற்சாகமாக ஒத்துக் கொண்டார்.

வாலியிடம் எம்ஜிஆர் , ” அன்னக்கிளி’ படப் பாட்டு எல்லாம் பிரம்மாதமா இருக்கே. அந்தப் பையனையே இசை அமைப்பாளரா போடலாமா? என்று கேட்டார்.

வாலியும் சரி என்று சொல்லி விட, அன்று மாலையே முதலமைச்சர் எம்ஜிஆர் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு அன்னக்கிளி புகழ் இளம் இசையமைப்பாளர் இளையராஜா இசை அமைக்கிறார் என்று எம்ஜிஆரே பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தார். இளையராஜாவுக்கு அது இன்ப அதிர்ச்சி. (இயக்குனர் கே. சங்கர்)

பாடல் கம்போசிங்..

ஒரு பாடலுக்கு மெட்டுப் போட்டு இளையராஜா பாடிக் காட்ட , எம்ஜிஆர் ஓகே செய்தார். வாலி எழுதினார்,

பாடலை டி.எம்.எஸ் பாட, இளையராஜா ரெக்கார்டிங் செய்து கொண்டு எம்.ஜி.ஆரிடம் போய்க் காண்பித்துள்ளார். நல்லா இல்லையே என்று கூறி இருக்கிறார் எம்ஜிஆர்.

இளையராஜா இன்னொருமுறை டி எம் எஸ் சை பாட வைத்து, கொண்டு போய்க் காட்ட, “ம்ஹும்… வேறு யாரையாவது பாடச் சொல்லு” என்று எம் ஜி ஆர் கூற, இளையராஜா, மலேசியா வாசுதேவனை பாட வைத்து ரெக்கார்டிங் செய்து கொண்டு போய்க் காண்பித்துள்ளார். அதையும் எம்.ஜி.ஆர் வேண்டாம் என்று சொல்ல, குழப்பமடைந்த இளையராஜா, ”இப்ப நான் என்ன செய்வது” என்று கேட்க, ”நீயே பாடிவிடு” என்றார் எம் ஜி ஆர். .

இளையராஜா தயங்க, ” நீ பாடுன மாதிரி அவர்கள் எல்லாம் பாடினார்களா சொல்லு?” என்று கேட்டுள்ளார் எம்ஜிஆர். இல்லையென்று தயங்கியபடி இளையராஜா சொன்னதும் ”நீ பாடு” என்று சொல்லியுள்ளார்.

இளையராஜா, ”நான் கிராமத்தில் இருந்து வந்தவன் நான் பாடினா அது உங்களுக்கு சேருமா என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.” நீ பாடு நான் பார்த்துக் கொள்கிறேன் என்று இளையராஜாவை பாட வைத்து அந்தப் பாடலை எடுத்துள்ளார் .

ஆனால் படத்துக்குப் பிரச்னை .

எதிர்க்கட்சிகள் சேர்ந்து ஒரு முதலமைச்சர் எப்படி படம் நடிக்கலாம் என்று கேள்வி எழுப்பினர். எனவே பட பூஜைக்கு வர வேண்டிய அன்றைய கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி வரவில்லை.

முதலைமைச்சர் சினிமாவில் நடிக்கக் கூடாது என்று மோகன் காந்திராமன் என்ற சினிமா பிரமுகர் தொடர்ந்த வழக்கில் எம் ஜி ஆர் சினிமாவில் நடிக்க கோர்ட் தடை விதித்தது.

அதோடு படம் நின்றது.

அதில் கலைஞரை எதிர்த்து கடுமையான வரிகள் இருந்ததால் அந்தப் பாடல் அப்புறம் வெளிவரவில்லை.

அதன் பிறகு மீண்டும் ஒரு முறை எம் ஜி ஆருக்கு இளையராஜா இசை அமைத்துப் பாடினார்.

அது எம் ஜி ஆரின் இறுதி ஊர்வலத்தை வைத்து தமிழக அரசு எடுத்த செய்திப் படத்துக்கான, ”போகுதே.. உயிர் போகுதே..” என்று துவங்கிய, பாடல். 

தமிழச்சி கயல்விழி

Leave a comment

Comment