TamilsGuide

கண்ணீரோடு காத்திருக்கும் கடைசித் தொண்டன்

இதயமெல்லாம் ரணத்தோடு, எளிய தொண்டன் எழுதும் கடிதம்: ஐந்தாறு ஆண்டுகளாக, நாங்கள் எழுதிய எந்த புகார் கடிதமும், குமுறல்களும் உங்கள் கண்களையோ, காதுகளையோ எட்டியதில்லை. அவை, 'பூமராங்' போல திரும்பி வந்து எங்கள் மீதே இல்லாதது, பொல்லாததைச் சொல்லி, கட்சியை விட்டே எங்களை நீக்க வைத்தது என்பதையும் கூட, கடைசி வரையிலும் உங்களிடம் சொல்ல முடியவில்லை என்பது வேதனைக்குரிய நிஜம்.

ஆட்சி பீடம் : காகிதத்திலே எழுதும் இந்த வார்த்தைகள், காற்றிலும், கோடிக்கணக்கான தொண்டர்களின் மூச்சிலும் கலந்திருக்கும் உங்களால், நிச்சயம் படிக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் இந்த கடிதத்தை வரைகிறேன். கடந்த, 28 ஆண்டுகளுக்கு முன், எம்.ஜி.ஆர்., இறந்த போது, 'அந்த இயக்கமே முடிந்துவிட்டது' என்று எதிர்க்கட்சியினர் கைகொட்டிய போது, நெஞ்சு வெடிக்க அழுது தீர்த்தவர்கள் நாங்கள். ஏறத்தாழ புதைக்கப்பட்ட ஓர் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுத்து, அதை ஆட்சி பீடத்திலும் அமர்த்தி, எம்.ஜி.ஆரின் வழியிலேயே புதுப்புது திட்டங்களை தீட்டி, ஏழை மக்களின் இதயங்களில் பால் வார்த்தவர் நீங்கள்.

சத்தான சத்துணவு, மாணவியருக்கு சைக்கிள், அரசு பள்ளியில் படிப்போருக்கு மடிக்கணினி, தாலிக்கு தங்கம் என, இல்லாத மக்களுக்கு செய்வதில், உங்களுக்கு நிகர் இந்த உலகிலேயே யாருமில்லை. 'மக்களால் நான்... மக்களுக்காகவே நான்' என்று நீங்கள் பேசியது, வெறும் இதழ்களால் இல்லை; இதயத்தால் என்பதை நாங்கள் அறிவோம். அதனால் தான் நீங்கள், 'இவர் தான் வேட்பாளர்' என்று யாரை நிறுத்தினாலும், அவரையும் ஜெயிக்க வைத்தோம். புதிது புதிதான கற்பனைகளில் பொய் துதி பாடி, 'சீட்' வாங்கி, உங்களால் ஓட்டு வாங்கி, நோட்டுகளை குவித்த பலரையும் நாங்கள் அறிவோம்.

எங்களுடைய வருத்தமெல்லாம், கலையுலகில் பல லட்சம் பேரையும் கவர்ந்திழுத்த நடிகையாக இருந்த உங்களாலும், இறுதிக்காலம் வரையிலும் இவர்களின் நடிப்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தான். காலம் உங்களை சிறையில் தள்ளிய போது கண்ணீரும், கலைந்த தலையும், கருப்பே கலக்காத வெண் தாடியுமாக வலம் வந்த இந்த நடிப்பு திலகங்கள், நீங்கள் மண்ணுக்குள் போகப் போகிறீர்கள் என்று தெரிந்த போது சிரித்து பேசியதையும், சீவி சிங்காரித்துக் கொண்டதையும் நீங்கள் இப்போதாவது அறிவீர்களா? கட்சிக்காக, கண் துஞ்சாது உழைத்த பலரது உழைப்பும், உங்கள் பார்வைக்கு எட்டாதபடி, திரையைப் போட்டு வைத்திருந்த கூட்டம் தானே, உங்கள் உடலைச் சுற்றிலும் வேலி போட்டுக் கொண்டு, எங்களை துாரத்தில் இருந்து வேடிக்கை பார்க்க வைத்தது. கல்வியறிவு, மொழியறிவு, சமூக அக்கறை என, எதுவுமே இல்லாத பலருக்கு நீங்கள் பதவி கொடுத்து, கோபுரத்தில் ஏற்றி வைத்தீர்கள்.

இரட்டை வேடம் : மக்களுக்கும், கட்சிக்காரனுக்கும் எதுவுமே செய்யாமல், கோடி கோடியாக குவித்த அவர்களே, இப்போது கோபுரங்களாகத் துடிக்கும் கொடுமையை, நாங்கள் எங்கே போய்ச் சொல்லி அழுவது; இதற்காகவா நாங்கள் உயிரை வெறுத்து, உங்களை ஜெயிக்க வைத்தோம்? எங்கள் ஜாதிக்கு தான் இந்தப் பதவி வேண்டும் என்று கொடி துாக்குகின்றனர், சில கொடியவர்கள். ஜாதிக்காரன் மட்டுமே ஓட்டு போட்டிருந்தால், இவர்களில் பாதி பேர் கூட பதவிக்கு வந்திருக்க மாட்டார்கள் என்பதை, எப்படி இனிமேல் உணர்த்தப் போகிறீர்கள்?

நீங்கள் இரட்டை விரல்களைக் காண்பித்தால், எங்களுக்கு இரட்டை இலை தான் நினைவுக்கு வரும்; இவர்கள், இரட்டை விரல்களைக் காண்பித்தால், இவர்களின் இரட்டை வேடம் தானே நினைவுக்கு வரும். எம்.ஜி.ஆர்., விட்டுச் சென்ற தீபத்தை, 28 ஆண்டுகளாய் அணையாமல் காத்து விட்டு, இப்போது அவருக்கு அருகிலேயே அணையா தீபமாக, நீங்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். எங்கள் கண்களுக்கு எதிரே, அ.தி.மு.க., என்ற மகா தீபத்தின் ஒளி மங்கத் துவங்கியிருக்கிறது.

இப்படிக்கு,
கண்ணீரோடு காத்திருக்கும் கடைசித் தொண்டன்.

Chandran Veerasamy

Leave a comment

Comment