கனடாவில் சளிக்காய்ச்சல் காரணமாக மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் ஒட்டாவா மற்றும் கிழக்கு ஒன்டாரியோ பகுதிகளில் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் இன்ஃப்ளூயன்சா A (Influenza A) தொடர்பான சிக்கல்களால் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என ஒட்டாவா பொதுச் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை காலை வெளியிடப்பட்ட அறிக்கையில், 5 முதல் 9 வயதுக்குட்பட்ட இந்த குழந்தைகள் ஒட்டாவா மற்றும் கிழக்கு ஒன்றாரியோ நிர்வாகப் பகுதிகளில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், இன்ஃப்ளூயன்சா A தொற்றுகளில் “வேகமான மற்றும் கணிசமான அதிகரிப்பு” பதிவாகி வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆறு மாதங்களுக்கும் மேற்பட்ட அனைவரும் மிக விரைவாக காய்ச்சல் தடுப்பூசி பெற வேண்டும் என மருத்துவ அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
“காய்ச்சல் கடுமையான நோய்களையும், மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் சிக்கல்களையும் உருவாக்கக்கூடும் என்பதற்கான தெளிவான நினைவூட்டலே இது” என ஒட்டாவா பொதுச் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒட்டாவாவின் குழந்தைகள் மருத்துவமனையான கிழக்கு ஒன்றாரியோ சிறுவர் மருத்துவமனையில் டிசம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையிலான காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்னும் இரண்டு வாரங்களில் வரும் நிலையில், மக்கள் அனைவரும் விடுமுறைக்கு முன் தடுப்பூசி பெறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
“தடுப்பூசி முழு செயல்திறன் பெற சுமார் இரண்டு வாரங்கள் ஆகும். இப்போது தடுப்பூசி பெறுவது விடுமுறை காலத்தில் பாதுகாப்பை வழங்கும்” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


