தலைவரின் தலைமைப் பண்புகளில் ஒன்று
சினிமா
நடிகர் டெல்லி கணேஷ் நல்ல குணச்சித்திர நடிகர். நடிக்க வரும் முன் விமானப் படையில் பணியாற்றி வந்தவர். இயக்குநர் துரையின் ‘பசி’ படத்தில் நடித்ததற்காக அவருக்கு தமிழக அரசின் சிறப்பு விருது கிடைத்தது. முதல்வர் புரட்சித் தலைவர் அவருக்கு விருது வழங்கினார். மேடையில் புரட்சித் தலைவர் கையால் விருது வாங்கிக் கொண்டு கீழே இறங்குவதற்காக அவர் திரும்பிய கணத்தில் அவரை தடுத்து நிறுத்தினார் புரட்சித் தலைவர். அவருக்கு மட்டும் ஸ்பெஷலாக தோளில் கைபோட்டு போஸ் கொடுத்தார். அடுத்த நொடி கேமராக்களின் வெளிச்ச மழை பொழிந்தது.
டெல்லி கணேஷ் அப்போது வளர்ந்து வரும் சிறிய நடிகர் என்பதால் அவர் விருது வாங்குவதை படமெடுக்க பத்திரிகை புகைப்படக்காரர்கள் ஆர்வம் காட்டவி்ல்லை. ஆனால், கலைஞர்களுக்குள் பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு கூடாது எந்தக் கலைஞரின் மனமும் நோகக் கூடாது என்று கருதிய தலைவர், சாமர்த்தியமாக டெல்லி கணேஷ் தோளில் கைபோட்டு அவரை ப்ளாஷ் மழையில் குளிப்பாட்டினார். டெல்லி கணேஷ் மக்கள் திலகத்தின் ரசிகர் கிடையாது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் மக்கள் திலகம் மீது அவரின் மதிப்பு உயர்ந்தது. டெல்லி கணேஷ் வீட்டில் மக்கள் திலகத்துடன் அவர் இருக்கும் படத்தை மட்டுமே மாட்டியுள்ளார். இதை டெல்லி கணேஷே பேட்டிகளில் சொல்லி தலைவரின் உயர்ந்த குணத்தை புகழ்ந்திருக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம். எல்லாருக்கும் விருதுகள் வழங்கியபடி இருந்தாலும் சுற்றிலும் என்ன நடக்கிறது, டெல்லி கணேஷ் விருது வாங்கும்போது கேமராக்கள் குறைவாக மின்னுகிறது என்பதையெல்லாம் உன்னிப்பாக புரட்சித் தலைவர் கவனித்து இருக்கிறார். இந்தக் கூர்மையும் கவனிப்பும் சமயோசிதமாக செயல்படுவதும் தலைவரின் தலைமைப் பண்புகளில் ஒன்று!























