கேரளாவில் பிரபல நடிகையை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்தில், நடிகர் திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என்றும் திலீப் மீதான எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றும் கோர்ட் தெரிவித்தது.
இந்த வழக்கில் A1 - A6 என 6 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திலீப் A8 என்பதால் அவரை விடுவித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் திலீப் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கேரள நடிகைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே திலீப் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் முன்னாள் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியார் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. குற்றத்தைச் செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரச் செயலைத் திட்டமிட்டு, அதற்கு மூளையாக இருந்தவர் இன்னும் சுதந்திரமாக நடமாடுகிறார். அதுவே மிகவும் அச்சமூட்டுகிறது.
இந்தக் குற்றத்தின் பின்னணியில் உள்ள அனைவரும் தண்டிக்கப்படும் போதுதான் நீதி முழுமையடையும். இது ஒரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக மட்டுமல்ல. இது தங்கள் பணியிடங்களிலும், தெருக்களிலும், வாழ்க்கையிலும் பயமின்றி, துணிச்சலுடன், தலைநிமிர்ந்து நடக்கத் தகுதியான ஒவ்வொரு பெண்ணுக்காகவும் ஆகும். இப்போதும், எப்போதும் பாதிக்கப்பட்ட நடிகையுடன் நிற்பேன்" என்று மஞ்சு வாரியார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையும் இதே கருத்தை தான் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


